உதயசங்கரன் பாடகலிங்கம்
திரைக்கும் ரசிகர்களுக்குமான பிணைப்பு எங்கே?
’துருவங்கள் பதினாறு’ மூலமாகத் தமிழில் நம்பிக்கை தருகிற இயக்குனராக நோக்கப்பட்டவர் கார்த்திக் நரேன். ஆனால், அதற்கடுத்து அவர் தந்த ‘மாபியா’, ‘மாறன்’ மற்றும் ‘நவரசா’ ஆந்தாலஜியில் இயக்கிய குறும்படம் மூன்றுமே ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்தன. அதேநேரத்தில், அவர் ஏற்கனவே இயக்கிய ‘நரகாசுரன்’, ‘நிறங்கள் மூன்று’ படங்கள் நெடுநாட்களாகக் காத்திருப்பு பட்டியலில் இருந்து வந்தன. இந்த நிலையிலேயே, தற்போது ‘நிறங்கள் மூன்று’ தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது.
அதர்வா, சரத்குமார், ரஹ்மான் பிரதான வேடங்களில் நடித்திருக்கும் இப்படத்தில் அம்மு அபிராமி, துஷ்யந்த் ஜெயபிரகாஷ், சந்தானபாரதி, ரித்திகா, சின்னி ஜெயந்த் உள்ளிட்ட பலர் இடம்பெற்றுள்ளனர். ஜேக்ஸ் பிஜோய் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
சரி, எப்படிப்பட்ட காட்சியனுபவம் ‘நிறங்கள் மூன்று’ படத்தில் காணக் கிடைக்கிறது?
’நான்லீனியர்’ கதை சொல்லல்!
ஸ்ரீ (துஷ்யந்த் ஜெயபிரகாஷ்), வெற்றி (அதர்வா), பார்வதி (அம்மு அபிராமி) என்று மூன்று குழந்தைகளின் பார்வையும், அவர்களது தந்தைகளின் எண்ணங்களும் ஒரு புள்ளியில் இருக்கின்றனவா என்ற கேள்வியோடு தொடங்கும் ‘நிறங்கள் மூன்று’ திரைக்கதை, அதற்கான பதில்களோடு முடிவடைகிறது.
பன்னிரண்டாம் வகுப்பு மாணவரான ஸ்ரீ, தனது ஆசிரியர் வசந்தின் (ரஹ்மான்) மகளான பார்வதியை விரும்புகிறார். அதேநேரத்தில், ஆசிரியர் மீதான நன்மதிப்பு காரணமாக அதனை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறுகிறார்.
ஒருநாள், டியூஷன் செல்லும் பார்வதி வீடு திரும்பவில்லை. அதனை அறிந்ததும், ஸ்ரீ நிலை கொள்ளாமல் தவிக்கிறார். நண்பர்கள் என்னவென்று கேட்க, அன்று காலையில் ஒரு இளம்பெண்ணைச் சிலர் காரில் வலுக்கட்டாயமாக ஏற்றிக் கடத்தியதைத் தான் கண்டதாகக் கூறுகிறார். அவர்கள் செல்லும் வழியில், அந்த கார் நிற்கிறது. அந்த வீட்டுக்குள் ஸ்ரீ நுழைகிறார்.
இன்னொரு புறம், தான் இயக்கும் படத்திற்கான முன்னோட்டமாகச் சில காட்சிகளைப் படமாக்குகிறார் வெற்றி. அதைத்தான், ஸ்ரீ கண்டிருக்கிறார்.
வீடு திரும்பும் வெற்றி, போதைப்பொருட்கள் தரும் கிறக்கத்தில் மூழ்கிறார். கண் விழிக்கும்போது, ‘உன்னோட கதையை அந்த டைரக்டர் திருடிட்டார்’ என்கின்றனர் நண்பர்கள். அவரிடத்தில்தான், வெற்றியின் நண்பர் ஒருவர் உதவி இயக்குனராக இருந்து வருகிறார்.
அதனைக் கேட்டதும், பதிவு செய்யப்பட்ட தனது ஸ்கிரிப்ட் வைக்கப்பட்ட இடத்தில் பார்க்கிறார் வெற்றி. அது அங்கு இல்லை. அதனை அறிந்ததும், உச்சகட்ட ஆத்திரத்தில் அலறுகிறார். நண்பர்களை வெளியே தள்ளிவிட்டு, போதைப்பொருட்களை அளவுக்கதிகமாக உட்கொள்கிறார்.
அடுத்த சில நிமிடங்களில், அவரது வீட்டு கதவு தட்டப்படும் சத்தம் கேட்கிறது. வெளியே சில அடியாட்கள் நின்று கொண்டிருக்கின்றனர். மூன்றாவதாகக் காட்டப்படும் கதையில், தனது மகள் பார்வதி காணாமல் போனதாக போலீசில் புகார் கொடுக்கச் செல்கிறார் வசந்த். அங்கு, அமைச்சர் ஒருவரின் மகன்கள் லாக்கப்பில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் இருவரும் இன்ஸ்பெக்டர் செல்வத்தைப் (சரத்குமார்) பார்த்துக் கூச்சலிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
அந்த நபர்களைத் தேடி வருபவரிடத்தில் பணம் வாங்கிக்கொண்டு, அவர்கள் இருவரையும் வெளியே விடுமாறு சொல்கிறார் செல்வம். அங்கு வரும் வசந்திடமும் பணம் கேட்கிறார்.
அதன்பிறகு, போலீசாரின் விசாரணையில் பார்வதி ஒரு நபரின் காரில் ஏறிச் சென்றதாகத் தெரிய வருகிறது. அதனை அறிந்ததும் அதிர்கிறார் வசந்த்.
இந்த மூன்று கதைகளிலும் சில பாத்திரங்கள் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டிருக்கின்றன. அதேநேரத்தில், கதையில் மூன்று வெவ்வேறு பிரச்சனைகள் இல்லை. அதுவே, இப்படத்தில் வரும் ‘நான்லீனியர்’ பாணி திரைக்கதை எதற்கு என்ற கேள்வியை எழுப்புகிறது.
இளையராஜாவின் பாடல்கள்!
கதாபாத்திரங்களின் அறிமுகம், பிரச்சனை, அவற்றின் விஸ்வரூபம் என்று ஒவ்வொரு கதையையும் சுவாரஸ்யப்படுத்த முயன்றிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் நரேன். அது நல்ல விஷயம் தான்.
கூடவே, ‘இந்த உலகில் நல்லவர்கள், தீயவர்கள், நம் முன்னே நல்லவர்களாகவும் தீயவர்களாகவும் நடிப்பவர்கள்’ என்று மூன்று விதமாக மனிதர்கள் தோற்றமளிப்பதாகக் கூறுகிறார். அதுவே டைட்டிலுக்கான காரணமாகவும் சொல்லப்படுகிறது.
அந்த மையக்கருத்தை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில் பின்பாதியில் காட்சிகள் இல்லாத காரணத்தால், அலங்காரப் பூச்சு கொண்ட பொம்மையாகவே திரைக்கதை தோற்றமளிக்கிறது. உயிரோட்டமிக்கதாக அதனை மாற்றுவதற்கான முயற்சிகள் திரையில் பலனளிக்கவில்லை.
ஒளிப்பதிவாளர் டிஜோ டோமி, படத்தொகுப்பாளர் ஸ்ரீஜித் சாரங், தயாரிப்பு வடிவமைப்பாளர் சிவசங்கர் என்று தொழில்நுட்பக் கலைஞர்கள் பலரது உழைப்பை ஒருங்கிணைத்து, திரையில் படம் எப்படித் தெரிய வேண்டுமென்பதில் நல்ல மெனக்கெடலை வெளிப்படுத்தியிருக்கிறார் கார்த்திக் நரேன். ஆனால், அதற்கேற்ற திரைக்கதையை உருவாக்குவதில் பின்தங்கியிருக்கிறார்.
ஜேக்ஸ் பிஜோயின் பின்னணி இசை, சில இடங்களில் காட்சிகளின் தன்மையைத் தாங்கிப் பிடிக்கின்றன. அதையும் மீறி, காட்சியமைப்புக்கு ஏற்றவாறு ஒலிக்கும் இளையராஜாவின் பழைய ‘கிளாசிக்’ பாடல்கள் சட்டென்று மனதைத் தொடுகின்றன. இவ்வாறு பழைய பாடல்களை வேறொரு காட்சிச் சூழலுக்குப் பயன்படுத்தும் வழக்கம் மேற்கத்தியப் படங்களின் தாக்கம் என்பதைப் பார்வையாளர்கள் அறிந்தே இருக்கின்றனர்.
அதனைத் தீர்மானித்த அளவுக்கு, இதர காட்சிகள் அமையாதது தான் நமக்கு வருத்தம் தரும் விஷயம். ’நிறங்கள் மூன்று’ படத்தின் காஸ்ட்டிங் பாராட்டுக்குரியது.
சரத்குமார், ரஹ்மான், அதர்வா, அம்மு அபிராமி, ரித்திகா, உமா பத்மநாபன், ஜான் விஜய், சந்தானபாரதி, துஷ்யந்த் ஜெயபிரகாஷ், அவரது நண்பர்களாக வருபவர்கள், அதர்வாவின் நண்பர்களாக வருபவர்கள் என்று இப்படத்தில் பலரும் சிறப்பான நடிப்பைத் தந்திருக்கின்றனர்.
சின்னி ஜெயந்த் இரண்டொரு காட்சிகளில் மட்டும் தலைகாட்டியிருக்கிறார். இன்னும் துஷ்யந்தின் பெற்றோராக வருபவர்கள், போலீசார், அமைச்சரின் மகன்கள், அவரது அடியாட்கள் என்று பலரும் திரையில் வந்து போயிருக்கின்றனர்.
அனைவரது நடிப்பும் சிறப்பாக அமைந்தும், திரைக்கும் பார்வையாளர்களுக்குமான பிணைப்பு சுத்தமாக இல்லை. அப்பாத்திரங்கள் நம் மனதோடு கொஞ்சம் கூட ஒட்டி உறவாடவில்லை.
கதாபாத்திரங்களின் உயர் நடுத்தர வர்க்கப் பின்னணி மட்டுமே அதற்குக் காரணம் இல்லை. பாத்திரங்கள் சந்திக்கும் பிரச்சனையைத் திரைக்கதையில் அழுந்தச் சொல்லாத காரணத்தாலேயே, அது நிகழ்ந்ததாகவே கருத வேண்டும்.
இந்தப் படத்தில் அதர்வா போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதாகவும், அந்த கிறக்கத்தில் திளைப்பதாகவும் காட்சிகள் இருக்கின்றன. ஆனால், விலாவாரியாக அந்த காட்சியமைப்பு இருப்பது ‘போதைப்பொருள் பழக்கத்தை இப்படம் ஊக்குவிக்கிறதோ’ என்ற சந்தேகத்தை உருவாக்குகிறது. அது மட்டுமல்லாமல், படத்தில் அப்பாத்திரத்தின் செயல்பாடும் அவ்வாறே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நிச்சயமாக, அது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு செயல்.
‘நிறங்கள் மூன்று படத்தில் என் பாத்திரத்தைப் பார்த்துப் பயம் வந்தது’ என்று அதர்வா பேட்டியளித்து வருவதற்கு இதுதான் காரணமா என்று தெரியவில்லை.
கதாபாத்திரச் சித்தரிப்பிலோ, காட்சிகளின் நகர்விலோ புதுமைகள் இல்லை. வெறுமனே மூன்று கதைகளை ஒரு புள்ளியை நோக்கி நகர்த்துவதில் மட்டும் வித்தியாசத்தை உணர வைக்கிறது ‘நிறங்கள் மூன்று’.
மூன்று வெவ்வேறு நிறங்களில், மூன்றுவிதமான பிரச்சனைகளில், மூன்று வகையான மனிதர்களைக் கொண்டு இத்திரைக்கதை வடிவமைக்கப்பட்டிருந்தால், ஒருவேளை இப்படம் நமக்கு வேறொரு அனுபவத்தைத் தந்திருக்கலாம். ஆனால், இயக்குனரின் பார்வை வேறுமாதிரியாக இருந்திருக்கிறது.
ஒரு காட்சியில் ஜெயபிரகாஷை பார்த்து அதர்வா ‘ஒன்சைடு கம்மனாட்டி’ என்று சொல்லுவார். அது போன்ற வார்த்தை பிரயோகங்கள் தியேட்டரில் சிரிப்பை ஏற்படுத்தின. அது மீம்ஸ்களிலும் கூடப் பயன்படுத்தப்படலாம். ’ஒட்டுமொத்தப் படமும் அப்படியொரு விளைவை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தால் எப்படியிருக்கும்’ என்பதே தீவிர சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பு. அவர்களைத்தான் ஏமாற்றியிருக்கிறது ‘நிறங்கள் மூன்று’.
அடுத்த படைப்பிலாவது இயக்குனர் கார்த்திக் நரேன் மேற்சொன்ன குறைகளைக் களைந்து, அவர் மீதான எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றதொரு படத்தைத் தர வேண்டும். பெஸ்ட் ஆஃப் லக்!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ்: உச்சநீதிமன்றத்தில் மோடி உரை முதல் டெல்டா மாவட்டங்களில் ரெட் அலர்ட் வரை!
கிச்சன் கீர்த்தனா: ஸ்பைஸி இறால் புரொக்கோலி இட்லி உப்புமா
ஐபிஎல் ஏல பரிதாபங்கள் : அப்டேட் குமாரு
ராமதாஸை இன்சல்ட் செய்த ஸ்டாலின்… ’வேலை’யைக் காட்ட பாமக திட்டம்!