சினிமாவில் ஒவ்வொரு வாரமும் புதிய திரைப்படங்கள் வெளியாகிறது. இதில் பண்டிகை நாள், விடுமுறை நாளில் புதிய படங்களை வெளியிடுவதற்கு தயாரிப்பாளர்கள், நடிகர்களிடம் போட்டி இருக்கும்.
சினிமா பார்க்க மக்கள் அதிக அளவில் திரையரங்குக்கு தீபாவளி பண்டிகைக்கு வருவார்கள். அதனால் தீபாவளிக்கு படங்களை வெளியிடுவதில் தீவிரம்
காட்டுவார்கள் தயாரிப்பாளர்கள். 20 வருடங்களுக்கு முன்பு ஒரே நடிகர் நடித்த இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியானது உண்டு. அப்போது சினிமா மட்டுமே மக்களுக்கு பொழுதுபோக்காக இருந்தது.
தற்போது சினிமாவும் ஒன்று என்றாகி போனது. பண்டிகை நாட்களில் படங்களை வெளியிடுகிற ஆர்வம் தயாரிப்பாளர்களிடம் குறைந்து வருகிறது. முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் சாதாரண நாட்களில் ஒட்டுமொத்த திரையரங்குகளிலும் வெளியிடப்பட்டு ஒரே வாரத்தில் கல்லா கட்டி கணக்கை முடிக்கும் வியாபார முறைக்கு தமிழ் சினிமா தன்னை மாற்றிக்கொண்டுள்ளது.
ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர், விஜய் நடித்த லியோ ஆகிய படங்கள் இந்த வருடத்தில் போட்டி படங்கள் இன்றி தனியாக சுமார் 800 திரையரங்குகளுக்கு மேல் வெளியிடப்பட்டு இரண்டு வாரங்களில் கல்லா கட்டியது. அதன் பின் அந்த படங்களுக்கு திரையரங்குகளில் வசூல் குறைந்தது. இந்த வருட தீபாவளிக்கு தமிழ் சினிமாவில் முக்கியமான திரைப்படங்களை இயக்கிய ராஜூ முருகன் , கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகும் இரண்டு படங்களும் எதிர்பார்ப்புக்குரிய படங்களாகும். இவற்றுடன் கிடா, ரெய்டு தமிழ் படங்களும் இந்திப்படமான டைகர் 3ம் வெவ்வேறு தேதிகளில் தீபாவளி போட்டியில் களமிறங்குகின்றன.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்
2014ஆம் ஆண்டு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் மற்றும் பலர் நடித்த ‘ஜிகர்தண்டா’ படம் வெளிவந்தது. ஒன்பது வருடங்களுக்குப் பிறகு அப்படத்தின் இரண்டாம் பாகமாக இப்படத்தை இயக்கி தயாரித்துள்ளார் கார்த்திக் சுப்பராஜ்.
இப்படத்தில் ராகவா லாரன்ஸ் ரவுடியாகவும், எஸ்.ஜே.சூர்யா இயக்குனராகவும் நடித்துள்ளார்கள் என படத்தின் டிரைலரைப் பார்த்து புரிந்து கொள்ள முடிகிறது. தொடர்ந்து பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்து அப்படங்களின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.
அது இப்படத்திலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராகவா லாரன்ஸ் நடித்து கடைசியாக வெளிவந்த ‘சந்திரமுகி 2’ படம் வெற்றி பெறவில்லை. அதனால் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ வெற்றி முக்கியமாக இருக்கிறது
ஜப்பான்
‘குக்கூ’, ‘ஜோக்கர்’, ‘ஜிப்ஸி’ படங்களை இயக்கிய ராஜூ முருகன் மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். அவருடைய முந்தைய படங்கள் வணிக ரீதியிலான படங்களாக இல்லாமல் இருந்தது. இந்தப் படத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்தியுடன் கை கோர்த்திருக்கிறார்.
‘ஜப்பான்’ படம் கலகலப்பான அதேநேரம் சமூகம் சார்ந்த சம்பவங்களை கொண்ட படமாக இருக்கும் என கூறியுள்ளார் படத்தின் இயக்குநர் ராஜூ முருகன். கார்த்தி அறிமுகமான பருத்திவீரன் படம் போன்ற அழுத்தமான கதாபாத்திரத்தில் அவர் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. படம் மிகச்சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக இருப்பதாக படம் பார்த்தவர்கள் தரப்பில் கூறப்பட்டு வருகிறது. அதனால் திரையரங்குகளின் முதல் சாய்ஸாக ஜப்பான் திரைப்படம் இருக்கிறது என்கிறது தியேட்டர் வட்டாரம்
ரெய்டு
அறிமுக இயக்குனர் கார்த்தி இப்படத்தை இயக்கியிருக்கிறார். போலீஸ் கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபு நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் மீண்டும் கதாநாயகியாக ஸ்ரீ திவ்யா நடித்திருக்கிறார்.
விக்ரம் பிரபு நடித்து கடைசியாக வெளிவந்த ‘இறுகப்பற்று’ படம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றது. தனி கதாநாயகனாக வெற்றிபெற அவர் கடுமையாக முயற்சித்து வருகிறார். அதனால் ரெய்டு படத்தின் வெற்றி விக்ரம் பிரபுவுக்கு அத்தியாவசியமாக உள்ளது.
கிடா
சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்ட படம். ஸ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா தயாரிப்பில், அறிமுக இயக்குனர் ரா.வெங்கட் இயக்கத்தில், உருவாகியுள்ள திரைப்படம் ‘கிடா’.
இப்படத்தில் பூ ராமு, காளிவெங்கட், மாஸ்டர் தீபன், பாண்டியம்மா, லோகி, கமலி, லட்சுமி, பாண்டி, ஜோதி, ராஜா, கருப்பு, ஆனந்த், ஜெய், தேவா, சங்கிலி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
முழுக்க முழுக்க வணிக மயமாக இருக்கும் தமிழ் சினிமாவில் அவ்வப்போது இது மாதிரியான வாழ்வியலை சொல்லக் கூடிய படங்களும் வருகின்றது. இப்படம் நவம்பர் 11ம் தேதியன்று திரைக்கு வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இராமானுஜம்
எம்.பி. எம்.எல்.ஏ.க்களுக்கான வழக்குகளை விரைந்து முடிக்க உத்தரவு!