காவி உடை அணியாதது ஏன்? – சாமியாராக மாறிய புவனேஸ்வரி சொல்லும் விசித்திர காரணம்!
பாசமலர் சீரியல் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை புவனேஸ்வரி. தொடர்ந்து, சந்திரலேகா, சித்தி என அடுத்தடுத்து தொடர்களில் நடித்து பிரபலமானார்.
சில சீரியலில் வில்லத்தனமான கதாபாத்திரத்திலும் புவனேஸ்வரி நடித்துள்ளார். பிஸியான நடிகையாக மாறிய ஒரு கட்டத்தில் புவனேஸ்வரி விபச்சார வழக்கில் சிக்கியதால் பட வாய்ப்புகள் குறைந்து போனது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் மிகவும் கஷ்டப்பட்ட குடும்பத்தில் பிறந்தவர் இவர். ஒருவேளை சாப்பாட்டுக்கே வழியில்லாமல் சென்னைக்கு வேலை தேடி வந்த புவனேஸ்வரி, கடுமையான உழைப்பால் டிவி சீரியல் மற்றும் சினிமாக்களில் பலவற்றில் நடித்தார்.
சேதுராமன் தலைமையில் இயங்கிய தேவர் பேரவையில் மகளிர் அணி தலைவராக இருந்தார். மேலும், சென்னையில் 3, 4 பங்களாக்களை வைத்துக்கொண்டு அதனை சூட்டிங்கிற்கு வாடகைக்கு விட்டு வருகிறார்.
தற்போது, புவனேஸ்வரி பழைய வாழ்க்கையிலிருந்து முற்றிலுமாக விடுபட்டு, துறவு பூண்டு சாமியாராக வாழ்ந்து வருகிறார். காசிக்கு சென்று தீட்சையும் பெற்றுள்ளார். அதுமட்டும் இல்லாமல், தினந்தோறும் வளசரவாக்கத்தில் உள்ள சிவன் கோவிலில் மக்களுக்கு அன்னதானம் செய்து வருகிறார் . கோயம்பேட்டில் உள்ள கோவில் ஒன்றிலும் தினமும் அன்னதானம் இவரின் சார்பில் நடக்கிறது.
இது குறித்து புவனேஸ்வரி கூறியதாவது, “நடிப்பில் உச்சத்தில் இருந்த போது, எதிர்பாராமல் சிக்கலில் சிக்கினேன். நீதிமன்றத்தில் என்னை நிரூபித்து வெளியே வந்தேன்.
ஆனாலும், இந்த சமூகம் தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கிறது. இரு வருடங்களுக்கு முன்பு ஆன்மீகத்தில் இறங்கினேன். தினமும் கோவில்களுக்கு செல்ல தொடங்கினேன். சிறு வயதில் ஒரு வேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட அனுபவம் உண்டு. இப்போது, என்னிடத்தில் பணம் இருக்கிறது.
அதனால், இப்போது தினமும் 300 பேருக்கு உணவளிக்கிறேன். கோவில்கள், மசூதி, தேவாலயங்கள் என அனைத்துக்கும் செல்கிறேன். எந்த மதமும் என் ஆன்மீக பயணத்துக்கு தடையாக இருக்க கூடாது.
ஒரு அரசியல் கட்சியிலும் மகளிர் அணி தலைவராக இருக்கிறேன். தீபாவளி பண்டிகைக்கு 10 ஆயிரம் பேருக்கு புத்தாடைகள் வாங்கிக் கொடுத்தேன். என்னை மக்கள் எப்படி வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளட்டும். எனக்கு அதை பற்றி கவலை இல்லை.
நான் என்னை இறைப்பணிக்கு அர்ப்பணித்து விட்டேன். காவி உடை அணிந்தால் , என்னை விளம்பரப்படுத்தியது போல அமையும். அதனால், அந்த ஆடை அணியவில்லை. எனக்கு பிடித்த அரக்கு சேலை, மஞ்சள் நிறத்தில் உடை அணிகிறேன். கழுத்தில் ருத்திராட்சையும் அணிந்துள்ளேன் ”என்கிறார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-எம்.குமரேசன்
விவசாயிகள் போராட்டத்தில் மதவாத திசை திருப்பல், திருப்பி அடிக்காதா?