நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நடிகர் விஷால், தனது வீட்டில் இருந்து சைக்கிளில் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்திற்கு இன்று (செப்டம்பர் 8) வந்தார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68-ஆவது பொதுக்குழு கூட்டம் அதன் தலைவர் நாசர் தலைமையில் சென்னை தேனாம்பேட்டையில் இன்று நடைபெற்றது.
பொதுக்குழுவில், நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவி காலத்தை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிப்பது, பாலியல் புகாரில் சிக்கும் நடிகர்கள் மீதான குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் ஐந்து ஆண்டுகள் திரைத்துறையில் பணியாற்ற தடை விதிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் தனது வீட்டில் இருந்து சைக்கிளில் மாஸ்க் அணிந்தபடி வந்தார். தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தை நெருங்கியதும் விஷால், தான் அணிந்திருந்த மாஸ்க்கை கழற்றிடிவிட்டு பின்பு பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார்.
விஷால் சைக்கிளில் சென்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் பாணியை பின்பற்றி, விஷால் சைக்கிளில் வருவதாகவும், அவர் சைக்கிளில் வந்தபோது பின்னால் வந்த பேருந்துக்கு வழிவிடாமல் சென்றதாகவும் சமூக வலைதளங்களில் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது வாக்களிப்பதற்காக விஷால் சைக்கிளில் சென்றார். அப்போது இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய விஷால், “என் பெற்றோரின் தேவைக்காக வீட்டில் ஒரு கார் இருக்கிறது. மற்றபடி என்னிடம் இருந்த அனைத்து வாகனங்களையும் விற்றுவிட்டேன். எனவே, நான் இப்போது சைக்கிள் மட்டுமே பயன்படுத்தி வருகிறேன்” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அடுத்த ஏழு நாட்கள்… வானிலை மையம் முக்கிய அப்டேட்!
மது ஒழிப்புப் போராளி ஐயா எல்.இளையபெருமாள்