‘நேசிப்பாயா’ ஃபர்ஸ்ட் லுக் நிகழ்ச்சி… படக்குழுவுக்கு ஷாக் கொடுத்த நயன்தாரா

சினிமா

கோடிக்கணக்கில் சம்பளம் பெற்று கதாநாயகியாக நடிக்கும் நயன்தாரா தான் நடித்த படங்களுக்கான இசை வெளியீட்டு விழா, புரமோஷன் நிகழ்ச்சிகளில் கூட கலந்து கொள்வது இல்லை.

கடந்த வருடம் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் சாதனை நிகழ்த்திய அட்லி இயக்கத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா நடித்த ஜவான் படத்தின் வெற்றி விழாவில் கூட நயன்தாரா கலந்து கொள்ளவில்லை. ஐயா படத்தின் மூலம் நயன்தாரா தமிழில் அறிமுகமானாலும் அவருக்கு திரை வாழ்வில் திருப்புமுனை ஏற்படுத்திய படம்  அஜீத் குமார் நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளியான பில்லா திரைப்படம்.

இந்த படத்தை இயக்கிய விஷ்ணுவர்தன் நீண்ட இடைவெளிக்கு பின் தமிழில்இயக்கியுள்ள நேசிப்பாயா திரைப்படத்தின் முதல் பார்வை வெளியீட்டு நிகழ்ச்சியில் நயன்தாரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

‘குறும்பு’ என்ற திரைப்படத்தை தெலுங்கில் 2003 ஆம் ஆண்டு இயக்கி இயக்குனராக அறிமுகமானவர் விஷ்ணுவர்தன். அதைத் தொடர்ந்து தமிழில் அறிந்தும் அறியாமலும், பட்டியல் போன்ற வெற்றி படங்களை இயக்கினார்.

அஜித் குமார் நடிப்பில் 2007-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ‘பில்லா’ திரைப்படத்தை இயக்கினார். இயக்குனர் விஷ்ணுவர்தனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இப்படம் அமைந்தது. அதன் பின் தமிழில் படங்கள் இயக்காத விஷ்ணுவர்தன் மறைந்த நடிகர் முரளியின் மகனும் நடிகர் அதர்வாவின் சகோதரருமான ஆகாஷ் முரளி ஹீரோவாக அறிமுகமாகும் படத்தை இயக்கியுள்ளார்.

இதில் அதிதி ஷங்கர் நாயகியாக நடித்துள்ளார். எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர் நிறுவனம் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு ‘நேசிப்பாயா’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.

அட்வென்சர் காதல் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் முதல் தோற்ற வெளியீட்டு விழா நேற்று இரவு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகை நயன்தாரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் ‘நேசிப்பாயா’ படத்தின் முதல் தோற்ற போஸ்டரை படக்குழு வெளியிட்டது.

முன்னதாக இப்படம் பற்றி விஷ்ணுவர்தன் கூறும்போது, “இந்தப் படம் சாகச காதல் கதையாக இருக்கும். காதலில் உள்ளவர்கள், காதலித்தவர்கள், காதலிக்கப் போகிறவர்கள் அனைவரையும் ஈர்க்கும் விதமாக இந்தப் படம் இருக்கும்” என்று கூறினார்.

இராமானுஜம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

TNAssembly : காவல்துறைக்கு 100 அறிவிப்புகளை வெளியிட்ட ஸ்டாலின்

”கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அதிமுக நாடகம்” : ஸ்டாலின் குற்றச்சாட்டு

+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *