மாரிசெல்வராஜை திணறடித்த ‘மலை நாட்டுக்காரி’ … யார் இந்த வைரல் கேர்ள் நிவிதா?

Published On:

| By Selvam

ஓடிடி-யில் ரிலீஸ் செய்வதற்காக எடுக்கப்பட்ட வாழை திரைப்படத்தை, ராம் உள்ளிட்ட சில முக்கிய இயக்குனர்கள் அறிவுறுத்தலால் தியேட்டரில் ரிலீஸ் செய்தார் மாரி செல்வராஜ்.

முதல் நாளில் குறைவான திரையரங்குகளில் ரிலீஸ் ஆனாலும், படத்துக்கு கிடைத்த பாசிட்டிவ் ரெஸ்பான்சால் அடுத்தடுத்த நாட்களில் அதிக திரையரங்குகளில் வாழை திரையிடப்பட்டது. சான் பிராசிஸ்கோவில் இருந்து முதல்வர் ஸ்டாலின் முதல் ரஜினி வரை வாழை படத்தை பாராட்டி புகழ்ந்துள்ளனர். இதனால் மாரி காட்டில் மாமழை பொழிகிறது.

வாழை படம் வெளியாவதற்கு முன்பாக அனைத்து யூடியூப், தொலைக்காட்சிகளிலும் மாரி செல்வராஜ் பேட்டி கொடுத்திருந்தார். அப்படி தான் சினிமா விகடன் யூடியூப் சேனலிலும் நெல்லை பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், மாரி செல்வராஜை நேர்காணல் எடுத்திருந்தார்கள்.

இந்த பேட்டியின் போது நெல்லை மாவட்டம் மாஞ்சோலை பகுதியைச் சேர்ந்த நிவிதா, நெல்லை வட்டார வழக்கில் மாரி செல்வராஜை கேள்வி கேட்டு திணறடித்தார். அவரது கேள்விகளால் ஷாக்கான மாரி, “டேய் இந்த பொண்ண எங்க இருந்துடா புடிச்சிங்க” என்று நிகழ்ச்சியை ஹோஸ்ட் செய்தவரிடம் கேட்டார். மேலும், “அடுத்த படத்துல இந்த பொண்ண நடிக்க வைக்கணும். டேய் நம்பர் வாங்கி வச்சிக்கங்கடா” என்றார்.

மாரி செல்வராஜ் நேர்காணலில் நெல்லை வட்டார வழக்கில் பேசி அசத்திய நிவிதா பேட்டி இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், எக்ஸ் உள்ளிட்ட வலைதளங்களில் செம வைரல் ஆனது.

இந்தநிலையில், தான் மாரிசெல்வராஜை பேட்டி எடுத்த நிவிதாவையே மறுபடியும் சினிமா விகடனில் இருந்து பேட்டி எடுத்துள்ளார்கள்.

இந்த பேட்டியில் நிவிதா பேசும்போது,

“திருநெல்வேலி சேவியர்ஸ் காலேஜ்ல நான் எம்.ஏ தமிழ் லிட்ரேச்சர் படிச்சிட்டு வர்றேன். மாரி செல்வராஜ் அண்ணன பேட்டி எடுக்கனும்னு சொன்னதால திருநெல்வேலியில இருந்து அன்ரிசர்வேஷன் டிரெய்ன்ல வந்தேன். டிரெய்ன்ல வரும்போதே அவரு எழுதன புத்தகத்தை மொபைல்ல படிச்சிட்டு வந்தேன். இதுதான் நான் சென்னைக்கு வர்ற முதல் பயணம்.

நிறைய கேள்வி பிரிபேர் பண்ணியிருந்தேன். அவரு எங்க ஊரு அண்ணன். அதனால ரொம்ப சகஜமா கேள்வி கேட்டேன். இந்த பேட்டி இவ்வளவு வைரல் ஆகும்னு நான் எதிர்பார்க்கல. காலேஜ்ல ஜூனியர் பயலுவ சொல்லி தான் எனக்கு தெரிஞ்சுது.

அதுக்கப்புறம், ஃபுரொபசர்ஸ், ரிலேட்டிவ்ஸ் நிறைய பேர் கால் பண்ணி, அவரே பெரிய டிரைக்டரு. அவரையே ஓடவிட்ருக்கிறேன்னு கலாய்ச்சாங்க.

காலேஜ்ல நான் எப்பவும் துருதுருன்னு இருப்பேன். எனக்கு இலக்கியம் ரொம்ப பிடிக்கும். நிறைய கவிதை எழுதுவேன். ஒரு புக் போடனும்ங்கிறது தான் என்னோட விருப்பம். ஆனா, அதுக்குள்ள இந்த வீடியோ மூலமா நான் வைரல் ஆகிட்டேன். நிறைய பேரு கால் பண்ணி படத்துக்கு நடிக்க வாங்கன்னு சொல்றாங்க. எனக்கு நடிப்பு மேல இண்ட்ரஸ்ட் இல்லை. இலக்கியம் தான் பிடிக்கும்.

இன்னைக்கு இந்த வீடியோல நான் வைரல் ஆனதால என்னை பத்தி எல்லோரும் பேசுறாங்க. நாளைக்கே இன்னொருத்தங்க வைரல் ஆனா அதை பத்தி பேசுவாங்க. அதனால எப்பவும் நம்ம நினைவுல இருக்குற மாறி இலக்கிய துறையில நான் சாதனை படைக்கனும்கிறது தான் என்னோட விருப்பம்” என்றார்.

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குறித்து நிவிதா பேசும்போது, “நான் பொறந்து வளர்ந்த இடம் மாஞ்சோலை. இப்போம் குத்தகை காலம் முடிஞ்சதால எஸ்டேட்காரங்க எங்கள வெளிய போக சொல்லிட்டாங்க.

எங்க தாத்தா, அப்பா, அம்மா சொந்தக்காரங்கனு அஞ்சு தலைமுறை மாஞ்சோலையில வேலை பார்த்துருக்காங்க. அந்த காட்டை உருவாக்குனதே நாங்க தான். இந்த கம்பெனிக்காக கடுமையா உழைச்சிருக்காங்க. அதனால தமிழ்நாடு கவருமெண்ட் கம்பெனிக்கிட்ட இருந்து எங்களுக்கு நஷ்டஈடு வாங்கி தரணும், எங்களோட வாழ்வாதாரத்த உயர்த்த உதவி செய்யனும்” என்று நெகிழ்ச்சியோடு தனது கோரிக்கையையும் முன்வைத்தார் நிவிதா.

செல்வம்

வானிலை நிலவரம் : லேசான மழையா? அல்லது பலத்த மழையா?

12 மீனவர்களுக்கு தலா ரூ.3.50 கோடி அபராதம் : அன்புமணி வேண்டுகோள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share