நடிகர் தனுசுடன் நடிகை நயன்தாரா மோதிக் கொண்டது அனைவருக்கும் தெரியும். நயன்தாரா திருமண ஆவணப்படத்தில் இடம் பெற்ற நானும் ரவுடிதான் படக் காட்சிகளை அனுமதி பெறாமல் பயன்படுத்தியதால் இருவருக்கும் மோதல் உருவாகி தனுஷ் ரூ.10 கோடி கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், The Hollywood Reporter India யூடியூப் சேனலுக்கு நயன்தாரா அளித்த பேட்டியில், மனம் திறந்து சில விஷயங்களை பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘ எனது திருமண படம் ஹிட் ஆக வேண்டுமென்று நான் நினைக்கவில்லை. நானும், விக்னேஷ் சிவனும் பல முறை அவரிடத்தில் பேச முயற்சித்தோம். நான் தனுசிடத்தில் மனம் விட்டு பேச முயற்சித்தேன். ஆனால், எதுவுமே நடக்கவில்லை.
எங்கள் காதலை பிரதிபலிக்கும் நானும் ரவுடிதான் படத்தில் இடம் பெற்றிருந்த அந்த 4 வரிகளை பயன்படுத்த நினைத்தேன். இது தொடர்பாக தனுசிடத்தில் கேட்டால் ஓகே சொல்வார் என்றுதான் நம்பினேன்.
எனக்கு அவர் நல்ல நண்பராகத்தான் இருந்தார். ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் முற்றிலும் மாறி விட்டது. ஆனால், எங்களுக்குள் எந்த மோதலும் இருந்ததில்லை. இந்த மாற்றம் எப்படி நடந்தது என்றுதான் நான் அறிந்து கொள்ள விரும்பினேன்.
தனுஷை சுற்றியிருப்பவர்கள் இப்படி ஒரு பிரச்னையை உருவாக்குகிறார்களா? என்று அறிந்து கொள்ள நினைத்தேன். தவறான புரிதல் இருந்தால், பேசி தீர்த்துக் கொள்ளவே நான் கருதினேன்.
எங்கள் திருமண ஆவணப்படத்தில் செல்போனில் எடுத்த காட்சிகளையே பயன்படுத்தியிருந்தோம். தனுஷ் ஒரு பெரிய நடிகர். நானும் அவர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். ஆனால், இந்த விஷயத்தில் தனுஷ் எனக்கு செய்தது அநியாயம்?
தனுஷ் குறித்து இப்படி தைரியமாக பேசியுள்ளீர்களே என்று என்னிடத்தில் பலரும் கேட்டார்கள். நான் எதற்கு பயப்பட வேண்டும்? என்னிடத்தில் உண்மை இருக்கிறது. தவறாக பேசினால் தான் பயப்பட வேண்டும்? உண்மையை சொல்ல இதுதான் சரியான நேரம் என்பதால் தைரியமாக அறிக்கை வெளியிட்டேன்” என்று நயன்தாரா தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-எம்.குமரேசன்
புரட்டி எடுக்கும் மழை…எது வந்தாலும் சமாளிக்க தயார்: ஸ்டாலின் பேட்டி!