ஒரு நல்ல பேய் படம் பார்க்கிறோம் என்பதை எப்படி உணர்ந்து கொள்ள முடியும்? அந்த படம் திரையில் ஓடத் தொடங்கும்போது எழும் கேலி கிண்டல்களையும் கூச்சல்களையும் வைத்து அதனை எடை போட முடியும்;
அதேநேரத்தில், அந்த சத்தமெல்லாம் சில நிமிடங்களில் மங்கி மறைந்து கிளைமேக்ஸ் காட்சியின்போது திரையரங்கு மொத்தமும் அமைதியின் திருவுருவாக மாறிவிடும்.
நல்ல படங்களுக்கும் கூட இந்த இலக்கணம் பொருந்தும். ஆனால், ஒரு திகில் படம் அப்படியொரு அனுபவத்தை அச்சுப்பிசகாமல் தந்தாக வேண்டும். இல்லாவிட்டால், ‘இதெல்லாம் ஒரு பேய் படம்’ என்ற கமெண்ட்களை கேட்க வேண்டியிருக்கும்.
நயன்தாரா நடிப்பில், மாயா திரைப்பட இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கியுள்ள ‘கனெக்ட்’ திரைப்படம் அப்படிப்பட்ட அனுபவத்தை நமக்கு தருகிறதா?
ஒரு ஊர்ல ஒரு பேய்..!
வினய் – நயன்தாரா மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தும் ஒரு நடுத்தர வயது தம்பதி. அவர்களுக்கு ஒரு மகள் ஹனியா நபீஸா; அவர் ஒரு டீன் ஏஜ் பெண்.
கோவிட் -19 காலகட்டத்தில் மருத்துவரான வினய் நோய்த்தொற்றால் இறந்துபோக, அவரது முகத்தைக் கூட மகளாலும் மனைவியாலும் பார்க்க முடியவில்லை. அந்த சோகத்தில், தந்தையிடம் மீண்டுமொரு முறை பேசிவிட மாட்டோமா என்று ஏங்குகிறார் ஹனியா.
அப்போதுதான் ‘ஓஜோபோர்டு’ மூலமாக பேய்களிடம் பேசுபவர்களைத் தொடர்பு கொள்ளத் தொடங்குகிறார். அப்படியொரு நபரால், நயன்தாரா வீட்டுக்குள் ஒரு கெட்ட ஆவி புகுந்துவிடுகிறது. ஹனியாவின் இயல்பையே சுக்குநூறாக உடைக்கிறது. அவரை நடைபிணமாக்குகிறது.
எந்த தருணத்தில் கெட்ட ஆவியின் அட்டூழியங்களை நயன்தாரா கண்டுபிடித்தார்? எப்போது அதனை விரட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார் என்று நகர்கிறது ’கனெக்ட்’ திரைக்கதை.
‘ஒரு ஊர்ல ஒரு பேய் இருந்துச்சாம்; ஒரு கேரக்டர் இப்படிப் பண்ணதால, அது திரும்பவும் வெளிய வந்து அட்டகாசம் பண்ண ஆரம்பிச்சுச்சாம்’, இப்படித்தான் முக்கால்வாசி பேய் பட கதைகள் இருக்கும். ‘கனெக்ட்’ படமும் அப்படித்தான். என்ன, பேயை உசுப்பிவிடும் விதம்தான் கொஞ்சம் வித்தியாசப்படுகிறது.
பயப்படுறியா மாப்பு..!
‘சந்திரமுகி’ படத்தில் பேய் பங்களாவுக்குள் நுழையும்போது ரஜினிகாந்தின் ஆர்ப்பாட்டம் அதிகமிருக்கும். இடையிலேயே ரஜினி காணாமல்போக, ’மாப்பு.. வச்சுட்டான்யா ஆப்பு..’ என்று வடிவேலு பீதியில் உறைந்துபோவார்.
முன்பாதி முழுக்க திரையரங்கில் ரசிகர்கள் எழுப்பும் கூக்குரல்களும் கத்தல்களும் அதையே நினைவூட்டுகின்றன. அதேபோல, அந்த பயம் கொஞ்சம் அதிகமானதாலேயே, பின்பாதியில் அவர்களது சத்தம் அறவே இல்லாமல் போனதையும் புரிந்துகொள்ள முடிந்தது.
பேய் எங்கிருந்து வந்தது, அதன் பூர்விகம் என்ன என்ற ஆராய்ச்சியில் எல்லாம் இயக்குனர் அஸ்வின் சரவணன் இறங்கவில்லை. ’ஆன் தி வேயில இறங்கின பேய், அடுத்த பஸ்லயே ஊருக்கு கிளம்பிடுச்சே’ என்கிற ரீதியில் மொத்த படத்தையும் ‘ஹேண்டில்’ செய்திருக்கிறார்.
நயன்தாரா, சத்யராஜின் இருப்பினால் மிக எளிதாக கதையுடன் நம்மால் ஒன்றிவிட முடிகிறது என்பதே ‘கனெக்ட்’டின் ப்ளஸ் பாயிண்ட். வினய், அனுபம் கெர், மிகச்சிறு வேடங்களில் நடித்த சிலரைத் தாண்டி மனதில் எளிதாகப் பதிய மறுக்கிற ஹனியா நபீஸாவின் இருப்பும்கூட இதன் சிறப்புகளில் ஒன்றாக விளங்குகிறது.
பிருத்வி சந்திரசேகரின் மெல்லிய இசையும் சரி, ஒளிப்பதிவாளர் மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி, படத்தொகுப்பாளர் ரிச்சர்ட் கெவின், தயாரிப்பு வடிவமைப்பாளர்கள் ஸ்ரீராமன், சிவசங்கரின் கூட்டுழைப்பும் சரி, ஒரு தரமான அயல்மொழிப் படத்தைப் பார்த்த உணர்வையே ஊட்டுகிறது.
ஓடிடி தளத்தில் வெளியாகும்போது இந்த அம்சம் நேர்மறையானதாக மாறவும் வாய்ப்புண்டு.
வழக்கமாக, ஒரு திரைப்படத்தில் பேய் புகுந்துவிட்டதாக இதர பாத்திரங்களுக்குத் தெரிந்துவிட்டால் அதன் அருகே செல்லவே பயப்படுவதாக காட்சிப்படுத்தப்படுவது வழக்கம். இதில் அப்படியொரு விஷயம் நடக்கவே இல்லை.
அழகான மலைச்சரிவு பயணத்தில் ஆங்காங்கே வரும் மேடு பள்ளம் போல, சில இடங்களில் மட்டும் பயமுறுத்துகிறது பேய்; மற்ற நேரங்களில், களைத்துப் போய் ரெஸ்ட் எடுக்கச் சென்றுவிடுகிறது.
’அதுதான் எனக்குத் தெரியுமே’ என்பது போலவே நயன்தாரா படம் முழுக்க வந்து போயிருப்பது நிச்சயமாக லாஜிக் மீறல்தான். திரைக்கதை வசனம் எழுதியிருக்கும் அஸ்வின், காவ்யா ராம்குமார் இருவரும் முன்னமே இதனை யோசித்திருந்தால் தேவலை. போலவே, வசனங்களில் ஆங்கிலம் அதிகம் இடம்பெற்றதையும் கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்.
’கனெக்ட்’ ஆகிறதா?
எந்தவொரு படமானாலும், ‘ஆடியன்ஸோட படம் கனெக்ட் ஆகணுமப்பா’ என்று சொல்வதே சினிமா வியாபாரிகளின் வழக்கம். இங்கே ‘கனெக்ட்’ என்பதே டைட்டில் எனும்போது, எந்தளவிற்கு பார்ப்பவர்களை கதையமைப்பு பிணைக்கிறது என்பதை அறிய வேண்டாமா? இந்த கேள்விக்கு ‘ஆமாம்’, ‘இல்லை’ என்று இரண்டு திசைகளிலும் தலையசைக்க வேண்டியிருக்கிறது.
பேய் படமாக இருந்தாலும், இதில் அதிகமாக விஷுவல் எபெக்ட்ஸ் இல்லை. இருளில் பேயை நடமாட விடவில்லை. பேய்க்கு கவர்ச்சிகரமான பிளாஷ்பேக் இல்லை. மயிர்க்கூச்செறிய வைக்கும் வன்முறை இல்லை. பேயை விரட்டுவதற்காக, சாதாரண மனிதர்களுக்குத் தெரியாத சடங்குகளைப் பின்பற்றவில்லை என்பதெல்லாம் ஆறுதல் தரும் விஷயங்கள்.
படத்தில் இடைவேளை இல்லை என்று விளம்பரம் செய்தாலும், திரையரங்கில் சரியாக 50ஆவது நிமிடத்தில் விளக்கு ஒளிர்கிறது. கூடவே, ’எப்போதான் நாங்க பாப்கார்ன் விற்கறது’ என்று தியேட்டர்காரர்களின் மைண்ட்வாய்ஸும் மெலிதாக கேட்கிறது.
தொடர்ச்சியாக ஓடிடி தளங்களில் பேய் படங்களை பார்த்தவர்களுக்கு இப்படம் தரும் அனுபவம் புதிதல்ல; அதேநேரத்தில் நயன்தாராவை அவரது ரசிகர்கள் கொண்டாட இக்கதை வாய்ப்பளிக்கவில்லை. அதனால், ஒரு மைல்டான பேய்ப்படம் பார்க்கும் விருப்பமுள்ள ரசிகர்கள் மட்டும் லாஜிக் மீறல்கள் மறந்து ‘கனெக்ட்’ படத்தை பார்க்கலாம், ரசிக்கலாம்.
உதய் பாடகலிங்கம்
என்ஐஏ அதிகாரிகள் போல் நடித்து கொள்ளை: இதுவரை 8 பேர் கைது!
எழுத்தாளர் ராஜேந்திரனுக்கு சாகித்திய அகாடமி விருது!
இந்த மொக்க படத்தைவிட உங்க விமர்சனம் நல்லாயிருக்கு