நட்சத்திர தம்பதி நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணச் செலவை திருப்பிக்கேட்டு நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய திரை உலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நயன் தாரா கடந்த ஜூன் 9-ம் தேதி இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார். 6 வருடங்களாக காதலித்து வந்த இந்த ஜோடியின் திருமணம் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் நடைபெற்றது. இதில் ஷாருக்கான், ரஜினிகாந்த், மணிரத்னம் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்த திருமணத்தின் வீடியோவை வெளியிடும் ஒப்பந்தத்தை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் ரூ.25 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியானது. அதை உண்மைப்படுத்தும் வகையில் திருமண ஏற்பாடுகளும் பிரம்மாண்டமாக செய்யப்பட்டிருந்தன. திருமணத்துக்கு சென்ற விருந்தினர்கள் கூட போட்டோ, செல்ஃபி எடுக்கக் கூடாது என்று கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. திருமணத்திற்காக நட்சத்திர ஓட்டலின் அனைத்து அறைகளும் 3 நாட்களுக்கு புக் செய்யப்பட்டிருந்தது. மேலும், பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட கண்ணாடி மாளிகையின் புகைப்படங்களும் வெளியாகின.
விருந்தினர்களுக்கான உணவு தொடங்கி நயன்தாராவுக்கான மணப்பெண் அலங்கார ஒப்பனை வரை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கோடிகளில் செலவழித்து ஒளிபரப்பு உரிமை பெற்றிருந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் திருமணத்திற்குப் பின்னர் நயன்–விக்கி ஜோடியின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. தொடர்ந்து விக்னேஷ் சிவன் அடுத்தடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.
இதனால் அதிருப்தியடைந்துள்ள நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் திருமண ஒளிபரப்பு உரிமைக்காக செலவிட்ட சுமார் 25 கோடி ரூபாயை தொகையை திருப்பிக்கேட்டு நயன் தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
~அப்துல் ராபிக் பகுருதீன்