நாட்டு நாட்டு : ஆஸ்கரும் சர்ச்சையும்!

சினிமா

ஆஸ்கர் அகடமி விருது நமக்கு எட்டாக்கனியல்ல முயற்சித்தால் வாரிக்குவிக்க முடியும் என்பதை தங்கள் வெற்றியின் மூலம் இந்திய சினிமாவுக்கு உரக்க சொல்லி இருக்கிறார்கள் தெலுங்கு, தமிழ் சினிமா கலைஞர்கள்.

தென்னிந்திய மொழி படங்கள், இந்திப்படங்களின் தரத்திற்கும், பாக்ஸ் ஆபீஸ் வசூல் சாதனைகளுக்கும் சற்றும் குறைந்ததல்ல என்று பாகுபலி படத்தின் மூலம் சாதித்து காட்டிய இயக்குநர் ராஜமவுலி தான் இதனையும் சாதித்திருக்கிறார்.

சிறந்த ஆவண குறும்படப் பிரிவில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற தமிழில் தயாரிக்கப்பட்டுள்ள  ‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ (The Elephant Whisperers) ஆவண குறும்படம் ஆஸ்கர் விருது வென்றதன் மூலம் தமிழ் சினிமாவும் இந்த வரலாற்று சாதனையில் இடம்பிடித்திருக்கிறது

அறிவியல் உலகிற்கு நோபல் பரிசு என்றால் சினிமா உலகிற்கு ஆஸ்கர் விருது என்று கூறுகிற அளவிற்கு உலக சினிமாவில் உயர்ந்த கௌரவம், அங்கீகாரமாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. 

1929ம்  ஆண்டு மே மாதம் 16ஆம் தேதி  அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ”தி ஹாலிவுட் ரூஸ்வெல்ட்” ஹோட்டலில் இரவு விருந்துடன் சிறிய நிகழ்வாகத் தொடங்கிய ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று சர்வதேச சமூகமே உற்றுநோக்கும் நிகழ்வாக மாறியிருக்கிறது. ’’அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ்’’ என்கிற அமைப்புதான் ஒவ்வொரு ஆண்டும் 24 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை வழங்குகிறது. 

இந்த அமைப்பில் உள்ள 10,000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களில் சுமார் 9500 பேர் வாக்களிக்கும் உரிமை பெற்றவர்கள். அவர்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில்தான் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலும், பின்னர் விருது பெறுபவர்களின் பட்டியலும் தயாரிக்கப்படுகின்றன.

கடந்த 13.03.2023 அதிகாலை இந்திய நேரப்படி அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் இரண்டு இந்திய நேரடி படைப்புகள் ஆஸ்கர் விருதை வென்றுள்ளன. இரண்டுமே தென்னிந்திய மொழி சார்ந்த திரைப்படம், ஆவண குறும்படம் ஆகும். 

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அடுத்தபடியாக ஆஸ்கர் அகடமி விருதை இசையமைப்பாளர் மரகதமணி என்கிற எம்.எம்.கீரவாணி பெற்றிருப்பதாகப்  சொல்லப்படுகிறது.

ஆனால், இசையமைப்பாளர் மரகதமணிக்கு கிடைத்திருப்பது தான் இந்தியாவுக்கான முதல் ஆஸ்கர் அகடமி விருது. ஏ.ஆர்.ரஹ்மான், ரசுல்பூக்குட்டி முதலான இந்தியர்கள் ஏற்கெனவே ஆஸ்கர் பெற்றிருந்தாலும் அவர்கள் இந்தியர்களால் தயாரிக்கப்பட்ட படத்தில் பணிபுரிந்தமைக்காக அவ்விருதை பெறவில்லை.

கடந்த 40 ஆண்டுகளில் இந்தியர்களில் ஒரு சிலருக்கு ஆஸ்கர் அகடமி விருது கிடைத்திருந்தாலும் இந்தியர்களால், இந்திய மொழியில் தயாரிக்கப்பட்ட  இந்திய சினிமா மூலம் ஆஸ்கர் அகடமி விருது வென்றெடுக்கப்படவில்லை  என்பதுதான் வரலாறு.

ஆஸ்கர் அகடமி விருதை வென்ற மரகதமணியை உச்சி முகர்ந்து, கொண்டாட வேண்டிய தருணம் இது. தெலுங்குதேசம் கொண்டாடி கொண்டிருக்கிறது. அதற்கு எதிர்மறையாக சமூக வலைதளங்களில் இளையராஜா ரசிகர்கள் அவரது கடந்த கால பாடல்களையும், இசை திறமையும் கூறி மரகதமணிக்கு வழங்கப்பட்ட விருதை கொச்சைப்படுத்துகிற வக்கிரம் கடந்த மூன்று நாட்களாக நடந்து வருகிறது.

இதனை கண்டிக்க வேண்டிய திரைக்கலைஞர்கள் வழக்கம்போல மெளனம் காத்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஆஸ்கர் அகாடமி விருது பெற்றுள்ள மரகதமணிக்கு எந்த அடிப்படையில் வழங்கப்பட்டிருக்ககூடும் என்பதை தனது முகநூல் பக்கத்தில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பதிவு செய்திருக்கிறார்.

அதில், நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கருக்குப் பரிந்துரை செய்யப்பட்டதிலிருந்தே லேசாக கிளம்பிய விமர்சனப் புயல் இப்போது முழு வீச்சில் வீசிக்கொண்டிருக்கிறது.

ரஹ்மான் 2009-ல் வென்றபோதும் இதே போன்ற (சிறுபிள்ளைத்தனமான) விமர்சனங்கள் வந்தன; இப்போதும் சுற்றுகின்றன.

இதுதான் அந்த விமர்சனத்தின் மையக்கரு. “பல இசையமைப்பாளர்கள் இசையில் இதே போன்ற நூற்றுக்கணக்கானப் பாடல்கள் நம் நாட்டில் எல்லா மொழிகளிலும் காலங்காலமாக வந்திருக்கின்றன.  இது என்ன சிறப்பென்று இதற்குப் போய் ஆஸ்கர்?”

ரஹ்மான் வென்றபோது, “இவரோட எத்தனையோ அருமையான பாடல்கள் இருக்க இந்தப் பாட்டுக்குப் போயா குடுப்பாங்க?”

இளையராஜாவின் ரசிகர்கள், “ராஜா சாரோட பல நூற்றுக்கணக்கான அற்புதமானப் பாடல்கள் இருக்கு. அதெல்லாம் இவங்க கண்ணுக்குத் தெரியாதா?”

ஆஸ்கர் விருது என்பது சேவை விருதுகளைப் போல தேடித்தேடி அலைந்து கண்டுபிடித்து கொடுக்கப்படுவது அல்ல. அங்கு சமர்ப்பிக்கப்படுகிற படங்களைப் பார்த்து, பாடல்களைக் கேட்டு நடுவர் குழு அளிக்கிற தீர்ப்புதான் அது. நம் நாட்டு தேசிய திரைப்பட விருதுகள் போலவே Slumdog Millionaire, RRR போன்றவை சமர்ப்பிக்கப்பட்டன. அதில் தேர்வாகி அடுத்த நிலைக்கு பரிந்துரை செய்யப்பட்டு இறுதியில் வென்றன. 

இது ஒருபுறம். அந்தப் பாடல்களை விட பல நல்ல பாடல்கள் உள்ளன என்கிற திறனாய்வு மதிப்பீட்டு விமர்சனம் செய்வதை விட எப்படி இந்த நம்மூர்ப் பாடல்கள் உலகின் மறு அரைகோளத்தில் உள்ளவர் கவனத்தை ஈர்த்தன/ஈர்க்கின்றன என்கிற கோணத்தில் ஆய்வு செய்தால் அது நமக்கு மட்டுமின்றி பலருக்கும் பயனளிக்கும். 

இசை நுணுக்கம் அறிந்தவர்கள் கொஞ்சம் ஆழமாக, தொழில்நுட்ப ரீதியில் ஆராய்வர். நாம் கொஞ்சம் மேலோட்டமாகப் பார்ப்போம்.

இந்தப் பாடல்களை நன்கு கேட்டுப் பார்த்தால் நம்மூர் சரக்கும் இருக்கும், மேலை நாட்டு சரக்கும் இருக்கும். அந்த உலகளாவிய பொதுத்தன்மைதான் இவற்றின் அடிப்படை பலம் (universal factor). இது இல்லையென்றால் இங்கு எவ்வளவு ஹிட்டானாலும் அங்கு ஒரு வேலையும் செய்யாது.

பாடலின் ராகம் அவர்கள் மனதை ஆட்கொள்ளக்கூடிய எளிய பாணியில், திரும்பப் பாடக்கூடிய விதத்தில் இருப்பதும், அதன் பின்னணி இசையில் அவர்கள் அந்நியப்பட்டு விடாமல் அவர்கள் பாட்டையே கேட்பது போலவும், ஆனால் அதில் ஒரு புதுமை உள்ளதையும் உணரும்படி இருப்பதால் அவர்களைக் கட்டிப்போட்டு விடுகிறது.

இந்த ‘நாட்டு நாட்டு’ பாடல் ஒரு படி மேலே போய் அந்த நடன அமைப்பு அட்டகாசமாக இருந்ததால் ஒரு Music Video தாக்கத்தை ஏற்படுத்தி அந்த வேலையை எளிதாக்கி விட்டது. உண்மையைச் சொல்லப்போனால், இந்த நடனம்தான் இந்தப் பாடலை இந்த நிலைக்கு உயர்த்திக்கொண்டு சென்றது. கீரவாணிக்கும், நடன இயக்குநருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்” என்று பதிவிட்டுள்ளார்.

இராமானுஜம்

அதிமுக வட்டார கட்சியாக மாறிவிட்டது: டிடிவி தினகரன்

அதானி விவகாரம்: அமலாக்கத்துறை நோக்கி எதிர்க்கட்சிகள் பேரணி!

nattu nattu song Oscars
+1
0
+1
2
+1
0
+1
3
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published.