ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் நாட்டு நாட்டு பாடல் லைவ் நிகழ்ச்சி நடைபெறும் என்று ஆஸ்கர் அகாடமி அறிவித்துள்ளது.
ராஜமவுலி இயக்கத்தில், ராம் சரண், ஜுனியர் என்.டி.ஆர், ஆலியா பட் ஆகியோர் நடிப்பில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றதோடு 1200 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
தொடர்ந்து ஜப்பான் மொழியிலும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
ஜப்பான் நாட்டிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது ஆர்.ஆர்.ஆர். ஜப்பான் ரசிகர்கள் சிலர் படத்தில் உள்ள நாட்டு நாட்டுப் பாடலுக்கு நடனமாடி சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவிட்டதையும் பார்த்துள்ளோம்.
ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு பல சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளது ஆர்.ஆர்.ஆர்.
அந்த படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை இசையமைப்பாளர் கீரவாணி பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து ஹாலிவுட் கிரிடிக்ஸ் எனப்படும் சர்வதேச விருதை ’சிறந்த சர்வதேச திரைப்படம், சிறந்த ஆக்ஷன் திரைப்படம், சிறந்த பாடல், சிறந்த சண்டைக்காட்சி ஆகிய 4 பிரிவுகளின் கீழ் கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி வென்றது ஆர்.ஆர்.ஆர் திரைப்படம்.
அதுமட்டுமில்லாமல், உலகின் உயர்ந்த திரைப்பட விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுக்குச் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த மாதம் நடைபெறவுள்ள இந்த விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினர் தற்போது அமெரிக்காவில் உள்ளனர்.
ஆஸ்கர் விருதையும் ஆர்.ஆர்.ஆர் வென்று விடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் ஆஸ்கர் விருது வழங்கும் விழா மேடையில் ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்றுள்ள ‘நாட்டு நாட்டு‘ பாடல் லைவாக பாடப்படவுள்ளது.
இந்த பாடலை மார்ச் 12 ஆம் தேதி பாடகர்கள் ராகுல் சிப்ளிகஞ்ச் மற்றும் கால பைரவா மேடையில் பாடுவார்கள் என்று ஆஸ்கர் அகாடமி அறிவித்துள்ளது. ஆஸ்கர் மேடையில் பாடப்படும் முதல் இந்திய பாடல் என்ற பெருமையைப் பெற்றுள்ளது ’நாட்டு நாட்டு’ பாடல்.
இந்த அறிவிப்பைப் பார்த்த ரசிகர்கள் மேடையில் பாடல் பாடப்படும் போது ராம் சரண் மற்றும் ஜுனியர் என்.டி.ஆர் நடனமாட வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.
மோனிஷா
3வது டெஸ்ட் : சொதப்பிய இந்தியா… சாதித்த ஆஸ்திரேலிய வீரர்!
எச்சரிக்கையா இருங்க மக்களே…இந்தியா முழுவதும் கடுமையான வெப்ப அலை ?
ஸ்டாலின் போலீசா? அமித் ஷா போலீசா? ராஜினாமா மூடில் திருமாவளவன்: சிறுத்தையின் சீற்றப் பின்னணி!