சூரரைப் போற்று இதுவரை வென்ற விருதுகள்!

சினிமா

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம், இன்று அறிவிக்கப்பட்ட தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில், (ஜூலை 22) 5 விருதுகளை அள்ளியுள்ளது. அதற்கு முன்பு சைமா, ஒசாகா, மெல்போர்ன் உள்ளிட்ட பல்வேறு திரைப்பட விருதுகளையும் சூரரைப்போற்று படம் வென்று தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது.

இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகமான சிம்ப்ளி ஃப்ளை என்ற புத்தகத்தை வைத்து, அவரது வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களைக் கொண்டு எடுக்கப்பட்ட படம் ‘சூரரைப்போற்று’. 2020ம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த இப்படம் வியாபார ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதில் சூர்யாவுடன், அபர்ணா முரளி, ஊர்வசி, மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகிய இப்படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. இது, தியேட்டர்களில் வெளியாகாமல் நேரிடையாக ஓடிடியில் வெளியானது. தென்னிந்தியத் திரையுலகில் ஓடிடி தளத்தில் வெளியான படங்களிலேயே ‘சூரரைப் போற்று’ படத்தின் பொருட்செலவு அதிகம் என அப்போது ஒரு பேச்சும் எழுந்தது.

இந்த நிலையில், இன்று (ஜூலை 22) 68வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் நடிகர் சூர்யா நடித்த சூரரைப் போற்று திரைப்படம், 5 விருதுகளை அள்ளியுள்ளது. சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இசையமைப்பாளர், சிறந்த திரைக்கதை ஆகியவற்றுக்கான விருதுகளை அது அள்ளியுள்ளது.

சைமா விருதுகள்

இதற்குமுன், 2021 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில், சிறந்த நடிகர், சிறந்த படம் என இரண்டு விருதுகளை சூரரைப்போற்று படம் அள்ளியிருந்தது. தொடந்து 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஹைதராபாத்தில் நடைபெற்ற சைமா விருது விழாவில் 7 விருதுகளை அள்ளியது. அதில் அப்படத்துக்கு, சிறந்த நடிகர், சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த தயாரிப்பாளர், சிறந்த நடிகை, சிறந்த இசையமைப்பாளர் ஆகியவற்றுக்கு விருது கிடைத்தது.

ஆஸ்கர் பிரிவில் தேர்வு
அதுபோல், 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆஸ்கர் விருதின் பொதுப் பட்டியலிலும் சூரரைப் போற்று படம் இடம்பெற்றிருந்தது. ஆஸ்கர் விருதுக்காக, உலகின் பல நாடுகளிலிருந்து 1000 திரைப்படங்கள் பொதுப்பிரிவில் போட்டியிட்ட நிலையில், 366 படங்கள் கொண்ட இறுதிப் பட்டியலில் சூரரைப்போற்று படம் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை ஆகிய 3 பிரிவுகளில் இடம்பிடித்திருந்தது. ஆனால் இறுதிப்பட்டியலில் சூரரைப் போற்று திரைப்படம் இடம்பெறாதது ரசிகர்களை மிகுந்த கவலைக்குள்ளாக்கியது. அதுபோல், 2022ம் ஆண்டு மே மாதம் ஜப்பானில் நடைபெற்ற ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விருதுகளில் 6 விருதுகளை வென்றது. தவிர, சூரரைப் போற்று படம், திரைப்பட விருதுகள் பட்டியலில் 78ஆவது கோல்டன் குளோப் விருதிற்கான போட்டிப்பிரிவில் இந்தியா சார்பில் திரையிடவும் தேர்வானது.
ஜெ.பிரகாஷ்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published.