உதயசங்கரன் பாடகலிங்கம்
‘நித்யா மேனன் போல ஒரு கேர்ள் ப்ரெண்ட் வேண்டும்’. ‘திருச்சிற்றம்பலம்’ படம் பார்த்த இளைஞர்களில் பெரும்பாலானோர் இப்படியொரு எண்ணத்தை மனதில் நிச்சயம் உற்பத்தி செய்திருப்பார்கள். அந்த அளவுக்கு, படத்தில் தனுஷ் உடன் அவர் வரும் காட்சிகள் அமைந்திருந்தன.
இத்தனைக்கும் அதில் அவர், திருச்சிற்றம்பலமாக வரும் தனுஷின் தோழியாக நடித்திருப்பார். அவரை ஒரு ஆடவன் போலவே தனுஷ் பாத்திரம் கருதும், அந்த தொனியிலேயே செயல்படும். அதற்கேற்ப வேறு இரண்டு பெண்களின் பின்னால் அப்பாத்திரம் சுற்றுவதாகத் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும்.
இப்படியொரு கதையின் கிளைமேக்ஸில், திடீரென்று தோழி தான் அவரது காதலி என்று சொன்னால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? நித்யா மேனன் போன்ற ஒரு நடிகை அப்பாத்திரத்தில் தோன்றினால் நிச்சயம் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.
முதல்முறை பார்க்கும்போது தோழியாகத் தெரியும் நித்யா, இரண்டாம் மற்றும் அதற்கு மேற்பட்ட முறை பார்க்கையில் தனுஷின் காதலியாக மட்டுமே தெரிவார். ஆனாலும், அந்தக் கதையமைப்பில் அபத்தம் ஏதும் தென்படாது. எங்கிருந்து கண்டாலும் மோனாலிசாவின் புன்னகை நம்மை நோக்கியே இருக்கும்’ என்பது போன்று தனது பாவனைகளில் தோழமையையும் காதலையும் கலந்து தந்திருப்பார் நித்யா மேனன். நிச்சயம் அது சாதாரணமான விஷயமல்ல.
தொடக்கம்!
வட்ட முகம், சுருட்டை முடி, பெரிய கண்கள், சிவந்த நிறம் என்று கொஞ்சம் ‘குண்டு குழந்தை’யாகத் திரையில் அறிமுகமானவர் நித்யா மேனன். ’ஹனுமன்’ என்ற பிரெஞ்ச் – இந்தியப் படத்தில் அவர் முதன்முறையாகத் தோன்றினார்.
பிறகு பள்ளி, கல்லூரிப் படிப்பு என்றிருந்தவர், 2006இல் ‘7 ஓ கிளாக்’ எனும் கன்னடப்படத்தில் துணை நடிகையாக அறிமுகமானார். இரண்டு ஆண்டுகள் கழித்து மலையாளத்தில் வெளியான ‘ஆகாஷ கோபுரம்’ படத்தில் முதன்மை பாத்திரம் ஏற்றார்.
அதற்கடுத்த சில ஆண்டுகள் மலையாளம், கன்னடப் படங்களில் நடித்தார் நித்யா. ஆனால், அவரை அடையாளம் காணும்விதமாக, ரசிகர்கள் துதிபாடுகிற வகையில் எந்தப் படமும் அமையவில்லை. 2011இல் வெளியான ‘அலா மொதலெய்ண்டி’ அந்தக் குறையைப் போக்கியது.
பி.வி.நந்தினி ரெட்டி இயக்கிய அந்தப் படத்தில் நானியின் ஜோடியாக நடித்திருந்தார் நித்யா. ‘பழகப் பழக பால் அமிர்தமாகும்’ எனும் டைப்பில் நட்பாகப் பழகும் ஆணும் பெண்ணும் தங்களை ‘மேட் ஃபார் ஈச் அதர்’ ஆக உணரும் கதையைக் கொண்டது அப்படம்.
அதன் ஒவ்வொரு பிரேமிலும் நிறைந்து வழிந்தது இளமை. அதனால், அப்படம் மல்டிபிளெக்ஸ் தியேட்டர்களில் பெரிய வெற்றியைப் பெற்றது.
தொடர்ந்து உருமி, 180, வெப்பம், மாகரமஞ்சு படங்களில் நடித்தார் நித்யா. அவை அவரை அழகாகத் திரையில் காட்டின. ஆனால், அவரைப் பெருவாரியான ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் வேலையை இன்னொரு தெலுங்குப் படமே செய்தது. அந்தப் படத்தின் பெயர் ‘இஷ்க்’.
’யாவரும் நலம்’ படம் தந்த இயக்குனர் விக்ரம் குமார், இப்படத்தில் நிதின் ஜோடியாக நித்யாவை நடிக்க வைத்திருந்தார். தோற்றத்தில் அக்கா – தம்பி போல இருவரும் தெரிந்திருந்தாலும், காட்சிகளில் வெளிப்பட்ட ‘கெமிஸ்ட்ரி’யால் அந்த எண்ணத்தை இருவரும் மறக்கடித்தனர்.
அது மட்டுமல்லாமல், ஒரு பெருநகரத்தில் நாம் சந்திக்கும் ஒரு சாதாரண பெண்ணைப் போன்றே அப்படத்தில் வந்து போயிருந்தார் நித்யா. அதுவே அவரது சிறப்பு.
’2012’இல் மலையாளத்தில் வெளியான ‘உஸ்தாத் ஹோட்டல்’, நித்யாவுக்கென்று இருந்த ரசிகர் வட்டத்தை இன்னும் பெரிதாக்கியது. தொடர்ந்து ‘குண்டே ஜாரி கல்லந்தையிண்டே’, ’மாலினி 22 பாளையங்கோட்டை’, ‘பெங்களூர் டேஸ்’, ‘மல்லி மல்லி இதி ராணி ரோஜு’ என்று பல வெற்றிப் படங்களில் இடம்பிடித்தார்.
‘காஞ்சனா 2’வில் நடித்தது தமிழ் ரசிகர்களிடையே நித்யாவைப் பிரபலமாக்கியது. அந்த படத்தில் ஏற்ற பாத்திரத்திற்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் ‘ஓ காதல் கண்மணி’யில் நவநாகரிக இளம்பெண்ணாக நடித்தார்.
இரண்டையும் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டனர் என்பதுவே அவரது நடிப்புக்குக் கிடைத்த வெற்றி. இப்படங்கள் 2015-இல் வெளியாகின. அதன்பின் ஒன்பது ஆண்டுகளில் முன்னணி நட்சத்திரங்களோடு தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் நடித்திருக்கிறார் நித்யா.
கதைகளை மையப்படுத்திய படங்களில் தன்னைப் பொருத்தி வெற்றி கண்டிருக்கிறார். கலைப்படங்களிலும் பங்களிப்பைத் தந்திருக்கிறார். இப்படியொரு ‘பிலிமோகிராஃபி’யை அரிதாகச் சில கலைஞர்களிடம் மட்டுமே காண முடியும்.
சரியான தேர்வு!
எந்தப் படமாக இருந்தாலும், தனது பாத்திரம் மட்டுமல்லாமல் அப்படத்தின் ஒட்டுமொத்த திரைக்கதையையும் மனதில் கொண்டே நித்யா நடிக்க ஒப்புக்கொள்கிறாரா? இந்தக் கேள்வியை அவர் நடித்த படங்களின் பட்டியல் நம்மிடத்தில் உருவாக்குகிறது.
திரையில் தோன்றும் நேர அளவை நித்யா கவனத்தில் கொள்வதில்லை. அந்தக் காட்சியில் தனது இருப்பு ஏற்படுத்தும் மாற்றம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதில் மட்டுமே அவர் கவனம் செலுத்துகிறார். ’ஜனதா கேரேஜ்’, ‘மெர்சல்’, ‘ஆவ்’, ’மிஷன் மங்கள்’, ‘திருச்சிற்றம்பலம்’ என பல படங்களில் அதனை உணர முடியும்.
நித்யா பெரும்பாலான காட்சிகளில் வரும் ‘சைக்கோ’, ‘நின்னிலா நின்னிலா’ படங்களில் அவரது இருப்பு வேறு மாதிரியாக இருக்கும். அதேநேரத்தில் தன்னைத் தேடி வரும் எல்லா வாய்ப்புகளையும் அவர் ஏற்பதில்லை. திரையில் ஆபாசமாக உடையணிந்து தோன்றுவதில்லை. தனது உடல் தோற்றம் குறித்த அவதூறுகளைக் கண்டு கவலை கொள்வதில்லை.
சொல்லப்போனால், தன்னைக் குறித்த எதிர்மறை விமர்சனங்களை மறக்கடிக்கும் அளவுக்கு அவர் ஒவ்வொரு படத்திலும் நடிப்பை வெளிப்படுத்துகிறார். இப்படியொரு பெயரைச் சம்பாதிக்க, நடிப்பின் மீது அதீத பற்று இருக்க வேண்டும்.
தான் நடிக்கும் பாத்திரமாகவே உருமாறி இருக்க வேண்டும் என்பதை விட, படப்பிடிப்பு நாட்களில் காட்சிகள், வசனங்களைப் படித்து மனதிலேற்றிக்கொண்டு, கேமிரா முன்பாகப் பாத்திரமாகத் தன்னை உணர்ந்து வெளிப்படுத்துவதே நித்யாவின் பாணியாகச் சொல்லப்படுகிறது.
மிகச்சில நடிப்புக்கலைஞர்களால் சாத்தியப்படுத்த முடிகிற விஷயம் அது. அந்தந்த கதையில் வருகிற பாத்திரமாக வாழ்வதற்கும், கேமிரா முன்பு மட்டும் அதன் பாவனைகளைக் கற்பனை செய்து வெளிப்படுத்துவதற்குமான மெல்லிய கோட்டை அந்த உத்தி வெளிக்காட்டும்.
முன்னே கேமிரா இருக்கிறது’ என்ற உணர்வு இல்லாமல் அல்லது வெளியே தெரியாமல் நடிப்பது மிகச்சிறந்த விஷயம். அதனைக் கைக்கொண்டிருப்பதாலேயே, ரசிகர்களால் கொண்டாடப்படுகிற ‘நடிப்பு ராட்சசி’யாக விளங்குகிறார் நித்யா மேனன்.
ஜாம்பவானின் பாராட்டு!
‘திருச்சிற்றம்பலம்’ ஆடியோ வெளியீட்டு விழாவில், ’தனுஷ், பிரகாஷ்ராஜ், நித்யா முன்னால நான் காணாம போயிடுவேனோன்னு பயந்தேன்’ என்று குறிப்பிட்டிருந்தார் இயக்குனர் பாரதிராஜா.
அவரிடத்தில் அப்படியொரு வார்த்தைகளைப் பெறுவதற்கு நிச்சயம் உண்மையிலேயே திறமை வேண்டும்.
2022ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுப் பட்டியலில் சிறந்த நடிகைக்கான விருது நித்யாவுக்கு கிடைத்திருப்பது, அவரது திறமையை முன்கூட்டியே அறிந்து உதிர்த்த வார்த்தைகளாக உணர வைக்கின்றன.
மலையாளம், தெலுங்கு, தமிழ், ஆங்கிலம், கன்னடம் என்று தான் நடிக்கும் படங்களில் தானே ‘டப்பிங்’ பேசுகிற நித்யா, இந்த ஆண்டு தமிழில் வெளிவரவிருக்கிற ‘காதலிக்க நேரமில்லை’யில் நம்மை இன்னும் மகிழ்ச்சியில் ஆழ்த்தக்கூடும். இன்னும் பல உயரங்களை எட்ட, மேலும் பல ஆண்டுகள் திரைத்துறையில் அவர் நீடிக்க வாழ்த்துகள்..!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இந்திய ஹாக்கி கோல்கீப்பர் ஸ்ரீஜேசுடன் 16 ஆம் நம்பர் ஜெர்சியும் விடைபெறுகிறது … பின்னணி என்ன?