தேசிய விருது ஆஸ்கருக்கும் மேலானது: சுதா கொங்கரா

சினிமா

சூரரைப் போற்று திரைப்படத்திற்கு கிடைத்த தேசிய விருது, எனக்கு ஆஸ்கரை விடவும் பெரியது என்று அப்படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா தெரிவித்துள்ளார்.

68ஆவது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த 22ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில் சூரரைப் போற்று, சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், மண்டேலா ஆகியத் தமிழ் திரைப்படங்கள் மொத்தமாக 10 விருதுகளை பெற்றன. குறிப்பாக சூரரைப் போற்று திரைப்படம் 5 தேசிய விருதுகளை அள்ளியது. சிறந்த நடிகருக்கான விருது சூர்யாவுக்கும், சிறந்த நடிகைக்கான விருது அபர்ணா பாலமுரளிக்கும், சிறந்த பின்னணி இசைக்கான விருது ஜிவி பிரகாஷுக்கும் சிறந்த திரைக்கதைக்கான விருது சுதா கொங்கராவுக்கும் கிடைத்தது.

இதனால் சூரரைப் போற்று படக்குழு மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளது. தேசிய விருது பெற்றதை கடந்த 2 நாட்களாக அவர்கள் கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ஓடிடியில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் சென்னையில் உள்ள பிரபல தியேட்டர் ஒன்றில் நேற்று மாலை திரையிடப்பட்டது. இதில், அப்படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சுதா கொங்கரா, சுரரைப் போற்று படத்திற்கான தேசிய விருது ஆஸ்கரை விடவும் பெரிது என்று கூறினார். அவர், ”சூரரைப் போற்று படத்திற்கு இத்தனை தேசிய விருது கிடைக்கும் என்பதை எதிர்பார்க்கவில்லை. தற்போது விருதுகள் கிடைத்துள்ள நிலையில் அதனை விவரிக்க வார்த்தைகளே இல்லை. எத்தனை தடவை தொலைக்காட்சியில் திரையிடப்பட்டாலும் சூரரைப் போற்றுக்கு முதல் நாள் கிடைத்த அதே வரவேற்பு தான் எப்போதும் கிடைக்கிறது.

படத்தை எடுக்கும் போது அதற்கு சரியான வரவேற்பு மக்களிடமிருந்து கிடைக்குமா என்று அனைவரும் குழப்பத்தில் இருந்தோம். ஆனால் தமிழக மக்கள் சூரரைப் போற்று படத்தை கொண்டாடியது பெரும் மகிழ்ச்சி. இதற்கு முக்கிய காரணமான சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஜிவிபிரகாஷ் ஆகியோருக்கும் நன்றி. இந்த விருதை அளித்த தேசிய விருது நடுவர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் பெரும் நன்றி. ஆஸ்கர் வெளிநாட்டு விருது. ஆனால் தேசிய விருது நம் நாட்டின் மிகப்பெரிய விருது. இந்த விருது எனக்கு ஆஸ்கரை விட மிகப்பெரியது” என்றார்.

தற்போது சூரரைப் போற்று திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அக்‌ஷய் குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் அதன் இறுதிக்கட்ட வேலைகளில் சற்றும் நிற்காமல் சுழன்று வருகிறார் இயக்குநர் சுதா கொங்கரா.

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *