பார்ப்பவர்களை துணுக்குறச் செய்யும்!
பார்வையாளர்கள் அசூயை கொள்கிற எந்த விஷயங்களும் இல்லாத ஒரு காட்சிப் படைப்பு. சமகாலத் திரைப்படங்களில் நாம் எதிர்கொள்கிற எந்தவொரு அம்சமும் அதில் இல்லை. ஆனாலும், அப்படத்தினைக் காணும்போது ‘இந்த திசை நோக்கி கதை பாய்கிறதே’ என்று மனம் பதைபதைப்பது ரொம்பவே அபூர்வம். யதார்த்தம் வியாபித்துக் கிடக்கிற கதைக்களத்தில் பூடகமாகச் சில விஷயங்களை உணர்த்துவதும், அதன் வழியே சிறந்த படமாக மலர்வதும் இன்னும் பெரிது. அப்படியொரு அனுபவத்தை நமக்குத் தரவல்லது ‘நாராயணீண்ட மூணான்மக்கள்’. narayaneente moonnaanmakkal review
நாராயணீயின் மூன்று மகன்கள் என்பது இந்த டைட்டிலுக்கான அர்த்தம். அந்த மகன்களாக சூரஜ் வெஞ்சாரமூடு, ஜோஜு ஜார்ஜ், அலென்சியர் லே லோபஸ் நடித்திருக்கின்றனர்.
ஷரண் வேணுகோபால் எழுதி இயக்கியிருக்கிற இப்படத்திற்கு ராகுல்ராஜ் இசையமைத்திருக்கிறார்.
‘நாராயணீண்ட மூணான்மக்கள்’ எப்படிப்பட்ட அனுபவத்தைத் தருகிறது?

ஊர் திரும்பல்! narayaneente moonnaanmakkal review
கொயிலாண்டி எனும் கிராமம். அங்கு தாய் நாராயணீயோடு வசித்து வருகிறார் சேது (ஜோஜு ஜார்ஜ்). அந்திமக் காலத்தில் படுத்த படுக்கையாகக் கிடக்கும் தாயை அவரே பராமரித்து வருகிறார். சேதுவுக்குத் திருமணமாகவில்லை.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் ’அட்மிட்’ செய்யப்பட்டிருக்கும் நாராயணீயின் உடல்நிலை மோசமான கட்டத்தை அடைகிறது. கண் திறந்து பார்க்கிற, பேசுகிற நிலையில் அவர் இல்லை. narayaneente moonnaanmakkal review
மருத்துவர்கள் கை விரிக்கின்றனர். கூடவே, ‘வீட்டுக்கு கூட்டிட்டுப் போயிடுங்க, இனிமே காப்பாத்த முடியாது’ என்கின்றனர்.
நகரத்தில் இருக்கும் சேதுவின் மூத்த சகோதரர் விஸ்வநாதன் (அலென்சியர் லே லோபஸ்) தனது மனைவி (சஜிதா மாடத்தில்), மகள் ஆதிரா (கார்க்கி ஆனந்தன்) சகிதம் வருகிறார்.
லண்டனில் இருந்து பதினெட்டு வயதான மகன் நிகில் (தாமஸ் மேத்யூ), மனைவி நஃபீசா (ஷெல்லி), ஒரு வயதான மகளுடன் இருபத்திரண்டு ஆண்டுகள் கழித்து இந்தியா திரும்புகிறார் பாஸ்கர் (சூரஜ் வெஞ்சாரமூடு). நாராயணீயின் இளைய மகன்.
கல்லூரியின் தன்னுடன் படித்த இஸ்லாமியப் பெண்ணான நஃபீசாவைத் திருமணம் செய்தபோது, பெற்றோரும் மூத்த சகோதரரும் எதிர்த்த காரணத்தால் கொயிலாண்டியை விட்டு லண்டன் சென்றவர் பாஸ்கர். ‘மரணத்தருவாயில் உன்னைப் பார்க்க வேண்டும் என்று அம்மா விரும்பினார்’ என சேது சொன்னதால் குடும்பத்தினரோடு வந்திருக்கிறார்.
நாராயணீயை அழைத்துக்கொண்டு அனைவரும் கொயிலாண்டி திரும்புகின்றனர். நீண்ட நாட்கள் கழித்து ஒன்றுகூடியிருப்பதால், ஒருவரோடு ஒருவர் சகஜமாகப் பேச முடியாமல் தடுமாறுகின்றனர். நாராயணீயின் ஒன்று விட்ட சொந்தங்களாகச் சிலரும் அவ்வீட்டுக்குள் நுழைகின்றனர்.
ஒவ்வொருவரும் மற்றவரின் நலன் விசாரிப்பது போல, அவர்களைப் பற்றிய விவரங்களைச் சேகரிக்கின்றனர். மெல்ல அவர்களுக்கு நடுவே இருக்கும் திரை மறையத் தொடங்குகிறது.
நாட்கள் செல்லச் செல்ல, நாராயணீ மரணமடையாமல் இருப்பது அவர்களிடத்தில் ஆச்சர்யத்தை, அதிர்ச்சியை, மகிழ்ச்சியை, எரிச்சலை ஒருசேரத் தருகிறது. அந்த உணர்வுகள் ஒருகட்டத்தில் விஸ்வரூபமெடுக்கத் தொடங்குகின்றன. தினசரி வாழ்வின் அழுத்தங்கள் அவர்களைத் துரத்துகின்றன.
அப்போது, ஒவ்வொருவரின் சுயரூபம் வெளியே தென்பட ஆரம்பிக்கிறது. அதனால் பாஸ்கருக்கும் விஸ்வநாதனுக்குமான முட்டல் மீண்டும் தலைநீட்டுகிறது.
அது முற்றிலுமாக மறைந்ததா இல்லையா என்று நாம் அறிவதற்குள் புதிதாகப் பிரச்சனையொன்று எழுகிறது. ஆதிராவும் நிகிலுமே அதற்குக் காரணம்.
அதை அறிந்ததும் அந்த குடும்பத்தினர் என்ன செய்தனர்? நாராயணீ மரணமடைந்தாரா, இல்லையா என்ற கேள்விகளுக்குப் பதிலளிப்பதோடு இப்படம் நிறைவுறுகிறது.
இந்தக் கதையை மேலோட்டமாகப் பார்த்தால், சேது பாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லாதது போலத் தோன்றும். ஆனால், படம் முடிவடையும்போது ‘அப்பாத்திரம் திருமணமாகாமல் தவிர்க்க என்ன காரணம்’ என்று நாம் சிந்திக்கத் தொடங்குகிறோம். அதுவே இப்படத்தின் வெற்றி.
அதேநேரத்தில், மலையாளத்தில் வரும் ட்ராமா வகைமை திரைப்படங்களில் இருக்கும் சுவாரஸ்யங்களை இதில் எதிர்பார்க்க முடியாது. அந்த வகையில் இப்படம் புதுவிதமான அனுபவத்தைத் தருகிறது.

’யதார்த்த பாணி’ கதை சொல்லல்!
மலையாளத் திரையுலகில் தற்போது ‘மோஸ்ட் வாண்டெட்’ நடிப்புக்கலைஞர்களாகத் திகழும் சூரஜ் வெஞ்சாரமூடு, ஜோஜு ஜார்ஜ், அலென்சியர் லே லோபஸ் ஆகியோர் இதில் முதன்மைப் பாத்திரங்களை ஏற்றிருக்கின்றனர். narayaneente moonnaanmakkal review
முழுக்க அவர்களது உடல்மொழியை, முகபாவனைகளை, வசன உச்சரிப்புகளில் கவனம் செலுத்துகிற அளவுக்கு அவர்களது பாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. அவர்களது நடிப்பும் நம்மை இன்னொரு உலகுக்குக் கை பிடித்து இழுத்துச் செல்கிறது.
அலென்சியர் ஜோடியாக வரும் சஜிதாவும் சரி, சூரஜின் மனைவியாக வரும் ஷெல்லியும் சரி, சில காட்சிகளே வந்தாலும் சட்டென்று நம்மை ஈர்த்துவிடுகின்றனர்.
இவர்களை மீறி இப்படத்தில் நம்மைச் சுண்டியிழுப்பது தாமஸ் மேத்யூவும் கார்க்கி ஆனந்தனும் தான்.
வெட்கமும் வேட்கையும் கலந்த பதின்ம வயது ஆணாக தாம்ஸ் மேத்யூ சட்டென்று கவனம் பெறுகிறார். அவரோடு உரையாடுகிற காட்சிகளில் சமகாலத்து பெண்களைப் பிரதிபலிப்பதாகத் தோன்ற வைத்திருக்கிறார் ஆதிரா. narayaneente moonnaanmakkal review
இவர்கள் ஏற்றிருக்கும் பாத்திர வார்ப்புதான் இப்படத்தின் சிறப்பு. அதேநேரத்தில், அதனைக் கண்டு மிகச்சிலர் முகம் சுளிக்கவும் வாய்ப்புண்டு. narayaneente moonnaanmakkal review

அதேநேரத்தில், ’அவர்களது பாத்திரங்கள் இப்படிப்பட்டவைதான்’ என்று நாம் உணரும் வகையிலேயே அவை சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளும் எழுதப்பட்டிருக்கின்றன, காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. அந்த நுணுக்கமான சித்தரிப்பின் மூலமாக வசீகரிக்கிறார் இயக்குனர் ஷரண் வேணுகோபால். narayaneente moonnaanmakkal review
ஒளிப்பதிவாளர் அப்பு பிரபாகர், தயாரிப்பு வடிவமைப்பாளர் செஃபின் தாமஸ், படத்தொகுப்பாளர் ஜோதி ஸ்வரூப் பாண்டா, இசையமைப்பாளர் ராகுல் ராஜின் பங்களிப்பானது திரைப்பட விழாவொன்றில் படம் பார்க்கிற உணர்வை ஏற்படுத்துவதாக உள்ளது.
யூடியூப்பில் குறும்படங்கள், சீரியல்கள் பார்க்கிற தொனி இதில் காணக் கிடைத்தாலும், அடுத்தடுத்த பிரேம்களில் அந்த எண்ணம் தொடர்ந்திடக் கூடாது என்பதில் பிரத்யேகக் கவனம் செலுத்தியிருக்கிறது படக்குழு. யதார்த்தம் நிறைந்திருக்கிற வகையில், திரையில் கதை சொல்லியிருக்கிற பாணி நம்மைச் சட்டென்று உள்ளிழுக்கிறது.
காதல் திருமணங்கள் சமூகத்தில் ஏற்படுத்துகிற தாக்கம், பாரம்பரியத்தின் மீது பெருமை கொண்டவர்கள் அதன் வழியே பெறும் ரணங்கள், உண்மையில் பாதிப்பை எதிர்கொண்டவர்கள் அந்த வெளியைக் கடந்து சமூக அக்கறையுடன் திகழ்கிற தருணங்கள் என்று பல்வேறு விஷயங்களைப் பேசுகிறது இப்படத்தின் காட்சியாக்கம்.
ஷரண் வேணுகோபால் எழுதியுள்ள வசனங்கள் இப்படத்தோடு நம்மை எளிதில் ஒன்றச் செய்கிறது. ஒரு விஷயத்தைச் சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்களும் அவ்வாறில்லாதவர்களும் எவ்வாறு அணுகுகின்றனர் என்பதையும் சொல்கிறது.
ரொம்பவே ‘ஸ்லோ’வாக நகரும் திரைக்கதை மட்டுமே இப்படத்தின் ஆகப்பெரிய மைனஸ். ‘அதனால என்ன’ என்று சொல்பவர்கள் இப்படத்தினைக் கண்டு ரசிக்கலாம்.
அதேநேரத்தில், ‘நாராயணீண்ட மூணான்மக்கள்’ படம் காட்டுகிற உலகம் யதார்த்தத்தில் நாம் காண விரும்பாத ஒன்று. காண்பவர்களைத் துணுக்குறச் செய்யக்கூடியது.
அதனை எதிர்கொள்கிற துணிச்சல் இருந்தால், இப்படத்தினை ரசித்துக் கொண்டாடுவதில் தடை ஏதும் கிடையாது. narayaneente moonnaanmakkal review