தமிழ், தெலுங்கு எனப் பிரித்து வைக்க தேவையில்லை, என் எல்லாப் படங்களும் தமிழில் வெளியாகும் என்று நடிகர் நானி தெரிவித்துள்ளார்.
வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் ஷௌர்யுவ் இயக்கத்தில் நானி மற்றும் மிருணாள் தாக்கூர் முதன்முறையாக இணைந்து நடித்திருக்கும் படம் hi நான்னா.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் டிசம்பர் 7 அன்று வெளியாகவுள்ள நிலையில் படத்தின் கதாநாயகன் நானி நேற்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
இந்நிகழ்வில் படம் பற்றி நடிகர் நானி கூறும்போது, “‘நான்னா’ என்றால் தமிழில் அப்பா, ஆனால் படத்தின் பெயர் எல்லா மொழியிலும் ஒரே மாதிரி இருக்கட்டும் என்று நினைத்தோம், அது லிப் சிங்க் மற்றும் பலவற்றுக்கும் உதவியாய் இருந்தது. படத்தில் நிறைய முறை ‘நான்னா’ என்ற வார்த்தை வருகிறது, அதுவும் ஒரு காரணம்.
ஒரு காதல் படம், ஆனால் பரபரவென போகும் கதை என கண்டிப்பாக உங்கள் மனதில் இடம்பிடிக்கும் படமாக இருக்கும். இது ஒரு முறை பார்க்கும் படமாக இருக்காது, மீண்டும் மீண்டும் பார்த்து ரசிக்கும் படைப்பாக இருக்கும்” என்றவர்
தொடர்ந்து பேசும்போது, “அம்மா செண்டிமெண்ட், அப்பா செண்டிமெண்ட் என பிரிக்க முடியாது. அன்பு ஒன்று தான். அம்மா படங்கள் எல்லாம் நிறைய வந்துவிட்டன, இப்போது அப்பா படங்கள் வர ஆரம்பித்துள்ளன. அது நல்லது என்றே நினைக்கிறேன். நடிக்க வந்த புதிதில் தமிழ் இயக்குநர்களோடு வேலை பார்த்தேன்.
ஆனால் அதை இங்குள்ள மக்கள் தெலுங்குப் படமாக பார்க்க ஆரம்பித்து விட்டார்கள், தெலுங்கு மக்கள் தமிழ்ப் படமாக பார்க்க ஆரம்பித்தார்கள். பின்னர் ‘பாகுபலி’, ‘காந்தாரா’ போன்ற படங்கள் வந்த பிறகு தமிழ் நடிகர், தெலுங்கு நடிகர் என்று பிரித்து பார்த்து படம் எடுக்கத் தேவையில்லை, சொல்லும் கதைக்கு உண்மையாக இருந்தால் போதும், அது மக்களிடம் போய்ச் சேரும் எனப் புரிந்தது, எனவே தான் நான் கதைகளுக்கு முக்கியத்துவம் தருகிறேன்.
தமிழ், தெலுங்கு எனப் பிரித்து வைக்க தேவையில்லை, என் எல்லாப் படங்களும் இங்கு தமிழில் வரும். நடிகை மிருணாள் இந்தப் பாத்திரத்திற்கு சரியாக இருப்பார் என்று தேர்வு செய்தோம் அதற்கான பலன் படத்தில் கிடைத்திருக்கிறது.
காதலை உணர்வுப்பூர்வமாக சொன்னால் அதை விட பெரிய ஆக்சன் திரில்லர் எல்லாம் கிடையாது. அது பயங்கரமாக இருக்கும். அதை இந்தப்படம் பார்க்கும் போது உணர்வீர்கள். எனக்கு இந்தப்படத்தில் சவாலாக இருந்தது என்னவெனில், நான் ஏற்கனவே ‘ஜெர்ஸி’யில் அப்பாவாக நடித்துவிட்டேன். அது மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர். மீண்டும் அதே போல் ஆனால் அதிலிருந்து மாறுபட்டு நடிப்பது தான் சவாலாக இருந்தது.
முன்னர் எல்லாம் முத்தக் காட்சியில் திரை இருட்டாகிவிடும், 2023-ல் முத்தம் பெரிய விசயம் இல்லை. முன்னர் மாதிரி மரத்தை சுற்றுவது, பூவைக் காட்டுவது என்று இப்போதைய ஆடியன்ஸை ஏமாற்ற முடியாது, முத்தத்தை திரையில் காட்டலாம் தவறில்லை.
நம் வாழ்க்கையில் பெண்கள் பெரும் பங்கு வகிக்கிறார்கள், படத்தில் மட்டும் ஏன் இருக்கக்கூடாது? என் படத்தில் அவர்கள் பெரிய இடம் வகிப்பது எனக்கு மகிழ்ச்சி” என்று தெரிவித்தார்.
இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!
கனமழை: 100 ஏக்கருக்கு மேல் மிளகாய் விவசாயம் பாதிப்பு!
பியூட்டி டிப்ஸ்: முகத்துக்கு சோப் உபயோகிக்கக்கூடாதா?
Bigg boss 7 Day 55; கமலை குறை சொல்லும் பூர்ணிமா… விளக்கம் கேட்காத கமல்