தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களின் ஒருவரான ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி, ‘சீதா ராமம்’ படத்தில் நடித்து தென்னிந்திய திரை ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த ‘மிருணால் தாகூர்’ உள்ளிட்டோர் நடிப்பில், அறிமுக இயக்குனர் சவ்ர்யுவ் இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம் ‘ஹாய் நான்னா’.
இப்படத்திற்கு, ஹிருதயம், குஷி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். ஜெர்ஸி, ஷ்யாம் சிங்க ராய் ஆகிய நானி படங்களுக்கும், விஸ்வரூபம் 1 & 2, மாலிக் போன்ற எண்ணற்ற சூப்பர்-ஹிட் படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ள சனு வர்கீஸ் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
என்னை நோக்கி பாயும் தோட்டா படத்திற்கு படத்தொகுப்பு செய்த பிரவீன் ஆன்டனி இப்படத்திற்கும் படத்தொகுப்பு செய்துள்ளார்.
இப்படி திரைத்துறையின் முன்னணி கலைஞர்களை கொண்டு உருவாகியுள்ள இப்படம், வரும் டிசம்பர் 7 அன்று உலகம் முழுவதும் திரையரங்குளில் வெளியாகவுள்ளது.
தெலுங்கு மட்டுமின்றி, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இப்படத்திற்கு பிரமோஷன் செய்யும் பணிகளில், நானி உள்ளிட்ட படத்தின் கலைஞர்கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக, சில தினங்களுக்கு முன்பு ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினத்தில் ஒரு புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் நானியும் கலந்துகொண்டார்.
அந்த நிகழ்வின் ஒரு பகுதியில், மேடையில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா சுற்றுலா சென்றிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்த சம்பவம், ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனத்திற்கு உள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நானி பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.
அந்த பகுதி குறித்து தனக்கு முன்கூட்டியே எதுவும் தெரியாது என தெரிவித்துள்ள நானி, “இது எதிர்பாராமல் நடந்த ஒன்று.
இதன் காரணமாக யார் மனதாவது புண்பட்டிருந்தால், நானும், படக்குழுவும் மிகுந்த மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவித்துள்ளார்.
மேலும், ராஷ்மிகா தனக்கு நெருங்கிய நண்பர் என்றும், விஜய் தேவரகொண்டாவுடன் தான் நெருங்கிய நட்பு வட்டத்தில் உள்ளதாகவும், இந்த நிகழ்வு அவர்களை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை என்றும் அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மகிழ்
ராணுவத்தினரின் தவறுதலான தாக்குதல்: கிராம மக்கள் 30 பேர் பலி!
திமுக எம்.பி செந்தில்குமார் சர்ச்சை கருத்து… கண்டித்த முதல்வர் ஸ்டாலின்