நந்தன் பட இயக்குநரின் கையை கண்ணீருடன் பற்றிய சூரி… நள்ளிரவில் என்ன நடந்தது?

Published On:

| By Kumaresan M

‘சுப்ரமணியபுரம்’ என்ற  கிளாசிக் ஹிட் படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் சசிகுமார்  அறிமுகமானார்.

முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்து தனக்கென ஒரு தனி இடத்தை தக்க வைத்து கொண்டார். சமீபத்தில் வெளியான அயோத்தி’ மற்றும் கருடன் படங்கள் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தன.

தற்போது  ‘உடன்பிறப்பு’ படத்தை இயக்கிய இரா. சரவணன் இயக்கத்தில் ‘நந்தன்’ என்ற படத்தில் சசிகுமார் நடித்துள்ளார். உண்மை கதையை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் சசிகுமார் நடித்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்  படபிடிப்பு தொடங்கப்பட்டது. இந்த படம் வரும் செப்டம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த நிலையில், நந்தன் படம் குறித்தும் சூரி பற்றியும் படத்தின் இயக்குநர் இரா. சரவணன் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், சூரி அண்ணன் நடிக்க எழுதிய கதைதான் ‘நந்தன்’. ஆனால், ‘விடுதலை’க்காக அண்ணன் தன்னையே ஒப்படைத்திருந்த நேரம். அதனால், சசிகுமார் உள்ளே வந்தார். படம் ரெடியான நிலையில், சூரி அண்ணனுக்குப் படத்தை போட்டுக் காட்டினோம்.

இரவு 9 மணிக்கு வள்ளுவர் கோட்டம் டி.எஸ்.ஆர். திரையரங்கில் படம் முடிந்தது. வெளியே வந்து என் விரல்களைப் பற்றியவர், படம் குறித்துப் பேசி முடித்தபோது மணி அதிகாலை 1:30. ஆகியிருந்தது. அண்ணா சாலை பிலால் ஹோட்டலுக்கு அழைத்துப் போய் உணவு வாங்கிக் கொடுத்தார்.

இருவருக்கும் 15 வருடங்களுக்கும் மேலான பழக்கம். ஆனால், எதையும் உரிமையாகக் கேட்கிற, வற்புறுத்துகிற அளவுக்கு என் குணம் இல்லாததை வேதனையாகக் குறிப்பிட்டார். “பிடுங்கிட்டுப் போறவங்களுக்குத்தான் இங்க வாழ்க்கை. அன்பும் தயக்கமும் நமக்கு எதையுமே செய்ய மாட்டேங்குதே…” எனச் சூரி அண்ணன் சொன்னபோது, நான் உடைந்துபோய் நின்றேன்.

மறுபடியும் ‘நந்தன்’ குறித்தே பேசத் தொடங்கியவர், “உங்க படம் அப்படிங்றதுக்காக சொல்லலை… இந்த பாதிப்பு எனக்குள் அடங்க ரொம்ப நாளாகும்ணே” என்றார் .கைகளை அழுந்தப் பிடித்துக்கொண்டு . அதிகாலை 2:30 மணிக்கு காரில் ஏறிக் கிளம்பும்போதும், சூரி அண்ணனின் கண்களில் நிலைத்திருந்த கண்ணீர், ‘நந்தன்’ படத்துக்கான நெகிழ்ச்சி முத்தம் என்று கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

ஐ.பி.எல். பிராண்ட் வேல்யூ குறைந்தது… பின்னணியில் தோனி?

செல்போன் புற்றுநோய் உண்டாக்குமா? உண்மை என்ன?

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share