பாடலே இல்லாத சசிகுமாரின் படம்!

Published On:

| By Kavi

செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், சத்திய சிவாவின் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள நான் மிருகமாய் மாற’ திரைப்படம் நவம்பர் 18ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் சென்னையில் படக்குழு   15.11.2022 மாலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். அப்போது, படத்திலிருந்து  பிரத்யேகமாக, ஒரே டேக்கில் எடுக்கப்பட்ட சண்டைக் காட்சி திரையிடப்பட்டது. 

நிகழ்ச்சியில் படத்தின் இசை அமைப்பாளர் ஜிப்ரான் பேசுகையில், “ இயக்குனர் சத்திய சிவாவின் தன்னம்பிக்கை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் இந்த திரைப்படத்தின் பின்னணி இசையில் ஒரு புதுமையை கையாள எண்ணினார். அதாவது இசைக்கருவிகளை பயன்படுத்தாமல் நாம் அன்றாடம் கேட்கும் சத்தங்களை வைத்து மட்டுமே இசையை உருவாக்க வேண்டும் என நிர்பந்தம் வைத்தார்.

இதனைப் புரிந்து கொள்ள தொடக்கத்தில் சிரமம் இருந்தாலும், பின்னர் அவர் கூறிய வண்ணமே இசை அமைத்துக் கொடுத்தேன்.படத்தின் தொகுப்பாளர் ஒரு வித்தியாசமான முறையை இப்படத்தில் கையாண்டுள்ளார். ஆரம்பம் முதலே படத்தில் ஒரு வேகம் இருக்கும்.

நானும் சசிகுமாரும் குட்டி புலி திரைப்படத்திற்கு பின் இப்பொழுது ஒன்றிணைகிறோம்” என்றார்

படத்தின் இயக்குனர் சத்ய சிவா கூறுகையில், “ இந்தத் திரைப்படத்தில் புதியதாக  சிலவற்றை நாங்கள் பின்பற்றியுள்ளோம்.  படமாக நீங்கள் அதனை பார்க்கும் பொழுது, நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். படத்தில் ஒரு வடிவம் இருக்கும்.

ஆரம்பத்தில், அதனை நடிகர்கள் மற்றும் படக்குழுவினருக்கு எடுத்துரைப்பதில்  சிறிது சிரமம் இருந்த போதிலும், படம் தற்பொழுது உருவாகியுள்ள விதத்தைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

வன்முறை காட்சிகள் அதிகமாக இருக்கிறது என்றாலும், மக்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். இந்தப்படத்தின் கதையை தொலைபேசியின் வாயிலாக கொரோனா ஊரடங்கின் போது சசிகுமாருக்கு எடுத்துரைத்த பொழுது, வித்தியாசமாக இருக்கிறது நிச்சயம் நான் நடிக்கிறேன் என்று உடனே சம்மதித்தார்.

தனக்குள் இருக்கும் இயக்குனரை மறந்து ஒரு நடிகராக இந்த திரைப்படத்தில் அவர் வாழ்ந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

இசையமைப்பாளர் ஜிப்ரானிடம், திரைப்படத்தில் பாடல்கள் இல்லை என்று கூறியவுடன் மிகவும் மகிழ்ச்சியுற்றார். அவர் பின்னணி இசையமைப்பதில் கை தேர்ந்தவர் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே !  இத்திரைப்படத்திலும் அதனை நிரூபித்துள்ளார் ஜிப்ரான்.

nan mirugamai mara sasikumar movie without song

படத்தின் முக்கால்வாசி காட்சிகள் ஒன்று இரவு  நேரத்தில் அல்லது மழையில் படமாக்கப்பட்டது.

நாயகி ஹரிப்ரியாவிடம் ஒரு குழந்தைக்கு தாயாக நடிக்க வேண்டும் என்று கூறியவுடன் சற்றும் தயங்காமல் கதையின் ஆழம் மற்றும் தன் கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, உடனே சம்மதித்தார். இந்தத் திரைப்படத்தில் அவர் நாயகி என்பதனை தாண்டி, சசிகுமாரின் மனைவியாக மட்டுமே நம் கண்களுக்கு தெரிவார்” என்றார்.

நாயகி ஹரிப்ரியா பேசுகையில், “செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் கடைசியாக 2010ல் வல்லக்கோட்டை திரைப்படம் நடித்தேன்.

அதன்பின் பல்வேறு கன்னட படங்களில் நடித்துள்ளேன். மீண்டும் தமிழில் நடிக்க ஒரு சரியான கதை மற்றும் குழுவிற்காக காத்திருந்தேன்.

அப்பொழுதுதான் இயக்குனர் சத்திய சிவா, எனது கன்னட திரைப்படமான பெல் பாட்டம் படத்தினை பார்த்து இந்த திரைப்படத்திற்காக அணுகினார்.

கதை மிகவும் பிடித்து போக உடன் சம்மதித்தேன். இந்தப் படத்திற்கு தமிழ்நாட்டில் மட்டும் இல்லாமல் கர்நாடகத்திலும் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.   ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் சசிகுமாரின் மனைவியாக நடித்துள்ளேன். முதலில் என்னை அணுகும் பொழுது படத்தில் எனக்கு ஒரு ஆறு வயது குழந்தை இருப்பதாக கூறினார்கள். எப்பொழுதும் புதிதாக ஒன்றை முயற்சி செய்ய வேண்டும் என்பதே எனது நோக்கம். எனவே இந்த திரைப்படத்தில் நடிக்க ஒப்புதல் தெரிவித்தேன்” என்றார்

சசிகுமார் கூறுகையில், “தான் படம் நடித்து ஒரு வருடம் ஆகிவிட்டது” என்றார்.

மேலும் அவர், “காமன் மேன் என்று இந்த திரைப்படத்திற்கு முதலில் பெயர் வைக்கப்பட்டது. பின்னர் அந்த தலைப்பு மாற்றப்பட்டு நான் மிருகமாய் மாற என்று பெயர் சூட்டப்பட்டது.

இந்தப் படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமாக இருக்கும்.  எனினும் குழந்தை, மனைவி என்று கதையில் ஒரு சராசரி மனிதனின் உணர்ச்சிகள் சரியாக பயன்படுத்தப்பட்டிருக்கும். ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம் அளித்துள்ளது என்று தான் கூற வேண்டும்.

பாடலே இல்லாத திரைப்படத்தில் முதன்முறையாக நடித்துள்ளேன் படத்தில் நடனம் இல்லை என்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எப்பொழுதும் ஒரு கிராமத்து கதாநாயகனாக வயலில் வேட்டியுடன் சுற்றித்திரிந்த எனக்கு ஒலிப் பொறியாளர் கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமாக இருந்தது.

இந்த கதாபாத்திரத்திற்காக ஒலிப்பொறியாளர்கள் லட்சுமி நாராயணன் மற்றும் உதயகுமார் அவர்களை கூர்ந்து கவனித்தேன். படத்தில் அனைத்துமே புதியதாக இருக்கும்.

இதற்காக அனைவரும் கடினமாக உழைத்து உள்ளோம்.  படக்குழுவினர் அனைவரும் தங்களது முக்கியத்துவத்தை உணர்ந்து சிறப்பாக பங்களித்து பணியாற்றியுள்ளனர்.

“படம் இப்படி இருக்கு, அப்படி இருக்கு என்று சொல்லல, நீங்க பார்த்துட்டு சொல்லுங்க, படம் எப்படி இருக்குன்னு” என்றார்.

இராமானுஜம்

ரசிகன் முதல் ரஞ்சிதமே ரஞ்சிதமே வரை! 5 கோடி பேரை கிறங்கடித்த விஜய் குரல்!

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel