தேர்வுக்குழு உறுப்பினர்களின் விவரம்: தயாரிப்பாளர் அறிவுரை!

Published On:

| By Kavi

சிறந்த நடிகர் நடிகைகள் மற்றும் கலைஞர்களை தேர்ந்தெடுப்பதற்கான குழுவில் உள்ளவர்களின் பெயர்களை வெளியிட்டிருக்கக் கூடாது என்று கேயார்  தெரிவித்துள்ளார்.

தமிழ் திரைப்படத் துறை சம்பந்தமாக தமிழ்நாடு அரசு இரண்டு அரசு ஆணைகளை பிறப்பித்தது. குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் சிறந்த படங்களுக்கான மானியம், மற்றும் சிறந்த தமிழ் திரைப்படங்கள், சிறந்த நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்வதற்கான குழுவில் இடம் பெற்றுள்ளவர்களின் பெயர்களையும் அரசு ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக ‘தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க முன்னாள் தலைவர் கேயார்  இன்று வெளியிட்ட அறிக்கையில்,

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை வெளிவந்த தமிழ் படங்களில் சிறந்த படம், சிறந்த நடிகர் நடிகைகள் மற்றும் சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களை தேர்ந்தெடுப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் 10 உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழுவையும்,

அதே காலகட்டத்தில் வெளியான படங்களில் மானியம் பெற தகுதியான சிறந்த திரைப்படங்களைத் தேர்வு செய்வதற்காக ஓய்வு பெற்ற நீதி அரசர் தலைமையில் 14 பேர் அடங்கிய ஒரு குழுவையும்  தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.

அதற்காக முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதேசமயம் அரசு அறிவித்துள்ள இரண்டு குழுக்களிலும்  யார் தலைவர் மற்றும் உறுப்பினராக இருக்கிறார்கள் என்பதை எப்போதுமே ரகசியமாக வைத்திருப்பது தான் மரபு. 

விருது மற்றும் மானியத்திற்கு  உரியவர்கள் பட்டியல் அறிவிக்கப்படும் போது தான் அதை தேர்வு செய்தவர்கள் யார் என்பதே தெரியவரும்‌. தேசிய திரைப்பட விருது தேர்வு குழு மற்றும் சர்வதேச திரைப்பட விருது தேர்வு குழுக்களில் உறுப்பினராக பங்கேற்ற  அனுபவத்தில் இதை  குறிப்பிடுகிறேன்.

ஆனால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் இரண்டு தேர்வுக் குழுவிலும் இடம் பெற்றிருக்கும் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பெயர்களை சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் தெரியப்படுத்தி இருக்கிறார்கள்.

இது விளம்பர படுத்துவதற்கான அறிக்கை அல்ல. உறுப்பினர்கள் மூலம் அந்த செய்தி பல வாட்ஸ் அப் குரூப் களிலும் பகிரப்பட்டு சோசியல் மீடியாக்கள் வரை வந்துவிட்டது. இது மிகவும் தவறான முன்னுதாரணம்.

ஏனென்றால் ஒவ்வொரு நடிகருக்கும் தயாரிப்பாளர்களுக்கும் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் தங்களுக்கும் தங்கள் படங்களுக்கும் விருது கிடைக்க வேண்டும் என்ற  ஆசை கண்டிப்பாக இருக்கும்.

அத்துடன் ஒரு படத்திற்கு அரசாங்கம் ரூ. 7 லட்சம்  மானியமாக வழங்குவதால் அந்த தொகையை பெற வேண்டும் என்ற ஆர்வம் நிச்சயமாக இருக்கும். இதனால் சிலர் சம்பந்தப்பட்ட தலைவர் மற்றும்  உறுப்பினர்களை  நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்பு கொண்டு ஆதிக்கம் செலுத்தவோ நிர்பந்தப்படுத்தவோ அல்லது வேறு வழிகளில் முயற்சி செய்யவோ வாய்ப்பு இருக்கிறது.

ஒரு சிலர் இதை தவறாக பயன்படுத்தி தயாரிப்பாளர்களை ஏமாற்றவும்  வாய்ப்பு இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. இப்படி ஒரு சூழல் உருவாக காரணமாக இருந்த தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பொறுப்பற்ற செயல் கண்டிக்கத்தக்கது.

ஒட்டுமொத்த தயாரிப்பாளர்களின் நலனுக்காக இன்னும் மூன்று ஆண்டுகள் செயல்பட வேண்டி இருப்பதால் அனைத்து விஷயங்களிலும் எச்சரிக்கையுடனும் பொறுப்புணர்வுடனும் சிந்தித்து செயல்பட வேண்டும் என்று சங்க நிர்வாகிகளை கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இராமானுஜம்

10.5% இட ஒதுக்கீடு: மு.க.ஸ்டாலினுக்கு ராமதாஸ் கடிதம்!

மன்னை டு சென்னை அல்ல… சென்னை டு மன்னை: யார் இந்த டி.ஆர்.பி.ராஜா?

Names of selection committee members should not published
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share