ஹைதராபாத் ஏரி அருகே, அமைந்திருந்த நாகார்ஜுனாவின் பிரம்மாண்ட கல்யாண மண்டபம் ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்தாக கூறி இடித்து அகற்றப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் மாதாப்பூரில் கூகுள் நிறுவனம், பேஸ்புக் நிறுவனம், அமேசான் நிறுவனத்தின் அலுவலகங்கள் உள்பட பல்வேறு ஐடி நிறுவனங்கள் அமைந்துள்ளன. ஐடி நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதி ஹைடெக் சிட்டி என்று அழைக்கப்படுகிறது. ஹைடெக் சிட்டி ஒருங்கிணைந்த ஆந்திர மக்களுக்கு ஐடி தலைநகர் ஆகும்.
ஹைடெக் சிட்டியை ஒட்டியுள்ள நிலங்களின் மதிப்பு பல கோடியாகும். இங்கு பரந்து விரிந்த தம்மிடி குந்தா ஏரி உள்ளது. இந்த ஏரி அருகே சுமார் 3.30 முதல் 3.40 ஏக்கர் ஏரி நிலத்தை ஆக்கிரமித்து நடிகர் நாகார்ஜுனா கல்யாண மண்டபம் கட்டியுள்ளதாக புகார் உண்டு. இதுபற்றி பல ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கு தேசம் கட்சியின் எம்எல்ஏவாக ரேவந்த் ரெட்டி இருந்த போது சட்டசபையில் பேசியுள்ளார்
அப்போது அவர், ஹைதராபாத் ஹைடெக் சிட்டி எதிரே நடிகர் நாகார்ஜூனா ஏரியை ஆக்கிரமித்து 6.69 ஏக்கர் நிலத்தில் என் கன்வின்சன் ஹால் என்ற பெயரில் திருமண மண்டபம் கட்டி வாடகைக்கு விட்டுள்ளதாக செய்திதாள்களில் செய்தி வந்துள்ளது. எனவே இந்த ஆக்கிரமிப்பு விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பேசியிருந்தார்.
ரேவந்த் ரெட்டி கூறி பல வருடங்கள் ஆன நிலையில், தற்போது அவரே தெலுங்கானா முதல்வராக மாறியுள்ளார். இந்த நிலையில், நாகர்ஜூனாவின் ஆக்கிரமிப்பு கட்டடம் இன்று இடிக்கப்பட்டது. இது குறித்து நாகார்ஜூனா கூறுகையில், தனக்கு எந்த ஒரு நோட்டீசும் அளிக்காமல் இடித்துள்ளனர். எந்த நிலத்தையும் ஆக்கிரமித்து தான் கட்டடம் கட்டவில்லை என்றும் நீதிமன்றத்தை அணுகப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்