வெங்கட்பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிப்பில் வெளியான ‘கஸ்டடி’ திரைப்படத்தின் முதல்நாள் வசூல், சமந்தா நடிப்பில் வெளியான ’சாகுந்தலம்’ படத்தின் முதல்நாள் வசூலைக்கூட தாண்ட வில்லை என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
தெலுங்கு நடிகர் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்த ’கஸ்டடி’ திரைப்படத்தை தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர்களில் ஒருவரான வெங்கட் பிரபு இயக்கி உள்ளார்.
நாக சைதன்யா நடித்த படங்களிலேயே அதிகமான பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட , இந்த படத்தில் நாகசைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி மற்றும் அரவிந்த் சாமி, சரத்குமார், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இளையராஜா, யுவன்சங்கர் ராஜா இணைந்து இசையமைத்திருந்தனர். அதனால் படத்தின் மீது மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு மொழிகளில் கஸ்டடி திரைப்படம் வெளியானது.
தெலுங்கானா மற்றும் ஹைதராபாத்தில் அதிகாலை காட்சிகளுடன் பிரம்மாண்ட ஓப்பனிங்கை கண்ட கஸ்டடி, தமிழ்நாட்டில் அதற்கு நேர் எதிராக மந்தமான வசூலை எதிர்கொண்டது.
தமிழ்நாட்டில் நாகசைதன்யாவுக்கு ரசிகர் கூட்டம் இல்லை. அதனால் வழக்கமாக தமிழ் படங்களுக்கு இருக்கும் வரவேற்பு கஸ்டடிக்கு கிடைக்கவில்லை.
படத்தின் இயக்குநர் வெங்கட்பிரபுவுக்கு என்றும் தனித்த ரசிகர் கூட்டம் தமிழ்நாட்டில் இல்லை. அதனால் படத்தின் உள்ளடக்கத்தை பொறுத்தே தியேட்டருக்கு பார்வையாளர்கள் வரவேண்டிய சூழலில் மக்களை கஸ்டடி படத்தின் கதை ஈர்க்கவில்லை என்கின்றனர் தியேட்டர் வட்டாரத்தில்.
இந்நிலையில் கஸ்டடி திரைப்படம் முதல் நாள் உலகம் முழுவதும் 4 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அடுத்தடுத்த நாட்களில் கஸ்டடி படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதுடன் முந்தைய நாள் வசூலை விடவும் குறைய தொடங்கியுள்ளது.
இதனை கண்ட நாகசைதன்யாவின் முன்னாள் மனைவியும், நடிகையுமான சமந்தாவின் ரசிகர்கள், கஸ்டடி படத்தின் முதல் நாள் வசூலை சாகுந்தலம் படத்தின் முதல் நாள் வசூல் 5 கோடி ரூபாயை விட குறைவு தான் என்று குறிப்பிட்டு விமர்சனம் செய்து வருகின்றனர்.
இது சம்பந்தமாக தியேட்டர் உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் வட்டாரத்தில் கேட்ட போது, ”நாகசைதன்யாவை ஒரு கதாநாயகனாக தமிழ் ரசிகர்கள் ஏற்கவில்லை.
அதனையும் கடந்து கதைகளமும், இயக்கமும் மோசமாக இருப்பதாக பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
கலைக்கு மொழி ஒரு தடை இல்லை என்றாலும் மொழி சார்ந்த கதாநாயகனும், இயக்குநரும் இணைந்தால்தான் மக்கள் படம் பார்க்க வரும் போக்கு இங்கு உள்ளது” என்கின்றனர்.
கடந்த மூன்று நாட்களில் சுமார் 1.50 கோடி ரூபாய்க்கு குறைவாகவே கஸ்டடி படம் திரையரங்குகளில் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இராமானுஜம்
கர்நாடக முதல்வர் பதவி: பிறந்தநாளில் ’ட்விஸ்ட்’ வைத்த டி.கே.சிவக்குமார்
கள்ளச்சாராய விற்பனை: ஒரே நாளில் 200-க்கும் மேற்பட்டோர் கைது!