ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு இன்ஸ்பிரேஷன் டாம் & ஜெரி மற்றும் சார்லி சாப்ளின் தான் காரணம் என்று நடன இயக்குநர் பிரேம் ரக்ஷித் தெரிவித்துள்ளார்.
தெலுங்கு பட உலகின் முன்னணி இயக்குனர் ராஜமெளலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான பிரம்மாண்ட திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்ற இப்படம் உலகளவில் சுமார் 1500 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
தற்போது சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை குவித்து வரும் ஆர்.ஆர்.ஆர், கடந்த 10ம் தேதி படத்தில் இடம்பெற்ற ’நாட்டு நாட்டு’ பாடலுக்காக கோல்டன் குளோப் விருதினை இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி பெற்றார்.
அப்போது மேடையில் பேசிய கீரவாணி, நாட்டு நாட்டு பாடலுக்கு நடனம் அமைத்த நடன இயக்குநர் பிரேம் ரக்ஷித்தும் தனது நன்றிகளை தெரிவித்தார்.
நாட்டு நாட்டு பாடல் உலகளவில் பிரபலம் அடைந்ததற்கு துடிப்பான இசையுடன், துள்ளலான நடனமும் முக்கிய காரணம். இதனையடுத்து தற்போது ரக்ஷித் மீது அனைவரின் பார்வையும் விழுந்துள்ளது.
சவாலாக இருந்தது
கோல்டன் குளோப் வென்றது குறித்து ரக்ஷித் பேசுகையில், “விருது வென்ற போது கீரவாணி எனக்கு நன்றி தெரிவித்ததை நான் முற்றிலும் எதிர்பார்க்கவில்லை.
நாட்டு நாட்டு பாடலுக்கு நடனம் அமைக்கும் போது எனக்கு அதிக அழுத்தம் இருந்தது. ஏனெனில் பாடலுக்கு நடனமாடும் இருவருமே சூப்பர்ஸ்டார்கள். ஜூனியர் என்.டி.ஆர். அதிரடி நடனம் என்றால், ராம்சரண் அசத்தலாக ஆடுபவர். இருவருக்கும் ஏற்ப நடனம் அமைப்பது என்பது சவாலாகவே இருந்தது.
உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள அதிபர் மாளிகையில் 2021ம் ஆண்டு ஆகஸ்டில் படப்பிடிப்பு நடந்தபோது 30 டிகிரிக்கும் மேல் வெயில் வாட்டியது. எனது உதவியாளர்களில் பலருக்கு ஒத்திகையின் போது தசைநார்கள் கிழிந்தன. இதனை மறக்கவே முடியாது” என்று தெரிவித்தார்.
ஹூக் ஸ்டெப் இன்ஸ்பிரேஷன்
இந்த நடன அசைவிற்கு டாம் & ஜெர்ரி கார்ட்டூன்கள் மற்றும் சார்லி சாப்ளினின் அசைவுகளை அதிகம் பார்த்துள்ளார் ரக்ஷித். மேலும் பிரபலமான ஹூக் ஸ்டெப்புக்காக சுமார் 2 மாத காலம் 110 நடன அசைவுகள் முயற்சித்து சோதித்து பார்க்கப்பட்டன.
பின்னர் பாடல் முதன்முறையாக வெளியானது நாட்டு நாட்டு நடன அசைவு ரசிகர்களை அதிகளவில் கவர்ந்தது. இன்றுவரை உலகின் பல மேடைகளிலும் நாட்டு நாட்டு ஹூக் ஸ்டெப் ஆடப்பட்டு வருகிறது.
44 வயதான நடன இயக்குனர் பிரேம் ரக்ஷித் புதுச்சேரியில் பிறந்து சென்னையில் வளர்ந்தவர். இவர் 1994 ஆம் ஆண்டு தெலுங்குத் திரைப்படம் ஒன்றில் நடனக் கலைஞராகப் தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தார்.
பின்னர் ஹைதராபாத்தில் தனது மாஸ்டர்கள் கல்லோல் மற்றும் மாதுரி பிஸ்வாஸ் ஆகியோர் நடத்தி வந்த நடனப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார்.
அதனைத்தொடர்ந்து கடந்த 2005ம் ஆண்டில் வெளிவந்த சத்ரபதியில் இருந்து இயக்குநர் ராஜமெளலியுடன் பணியாற்றி வருகிறார். அதன்பின்னர் மாவீரன் திரைப்படத்தில் கொடிபெட்டா, பாகுபலியில் மனோஹரி ஆகிய பாடல்களுக்கு நடனமைத்துள்ளார்.
ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்ததும் எனக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசிய பிரபுதேவாவின் பாராட்டை மறக்க முடியாது என்று தெரிவித்துள்ளார் ரக்ஷித்.
கிறிஸ்டோபர் ஜெமா
கடுங்குளிர் : காஷ்மீர் போல் காட்சிதரும் உதகை!
அவனியாபுரம் ஜல்லிக்கட்டிலும் ’விஜய்’ முன்னிலை!