நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்: விமர்சனம்!

சினிமா

அட்லி இயக்கத்தில் 2017ஆம் ஆண்டு வெளிவந்த “மெர்சல்” படத்திற்கு பிறகு கடந்த ஐந்து வருடங்களாக  நடிகர் வடிவேலு தமிழ் படங்களில் நடிக்கவில்லை.

லைகா புரடெக்ஷன்ஸ் தயாரிப்பில் மருதமலை, தலைநகரம் போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய சுராஜ் திரைக்கதை வசனம் எழுதி இயக்கிய நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் கதையின் நாயகனாக வடிவேலு நடிக்கிறார் என்கிற அறிவிப்பு வெளியானது. அப்போது தமிழ் பேசும் சமூகம் அந்தப் படம் வெளியாகும் நாளை ஆசையுடன் எதிர்பார்த்து காத்திருந்தது.

ஐந்து ஆண்டுகாலமாக வடிவேலு நடித்த புதிய படங்கள் வெளியாகவில்லை என்றாலும் தொலைக்காட்சி, வலைதளங்கள், வாட்சப், மீம்ஸ்கள் என தமிழ் பேசும் மக்களின் அன்றாட வாழ்க்கையில் எப்போதும் இருந்தார். அவரை அகன்ற திரையில் காண காத்திருந்தனர்.

இந்நிலையில் தான் நேற்று (டிசம்பர் 9) உலகம் முழுவதும் “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” வெளியானது.

இப்படத்தில் நாய்சேகர் என்ற  கதாபாத்திரத்தில் வடிவேலு, சிவாங்கி கிருஷ்ணகுமார், ரெடின் கிங்ஸ்லி, ஷிவானி நாராயணன், ஆனந்தராஜ், முனிஷ்காந்த், ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேசு, பூச்சி முருகன், மனோபாலா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். டிரெய்லரில் வடிவேலுவை ‘இந்தியாவின் முதல் நாய் கடத்தல்காரன்’ என்று அறிமுகப்படுத்தினார்கள்.

வடிவேலு நடந்தால், நின்றால், பேசினால், அழுதால், சிரித்தால் எல்லாமே பார்ப்பவர்களை மனம்விட்டு சிரிக்க வைக்கும் அற்புத கலைஞன். ஐந்து ஆண்டுகளுக்கு பின் அவர் நடிப்பில் வெளியாகும் படம் நகைச்சுவையில் அதகளம் செய்யும் என்ற எதிர்பார்ப்பில் படத்தை பார்த்தவர்களுக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது.

புதிய மொந்தையில் ஊற்றிய பழைய கள்ளாகவே இருக்கிறது, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் கதையும், அதில் இடம்பெற்றுள்ள நகைச்சுவை காட்சிகளும்.

அப்படி என்னதான் கதை

வடிவேலுவின் பெற்றோர்களுக்கு குழந்தை இல்லாமல் இருந்து வருகிறது.  குழந்தை வரம் வேண்டி கோவிலுக்கு செல்கின்றனர். அப்போது அங்கு ஒரு சித்தரும் வருகிறார். பசியுடன் இருக்கும் அவருக்கு உணவளித்து உதவும், வடிவேலு பெற்றோருக்கு அந்த சித்தர்  நாய் ஒன்றை பரிசாக கொடுக்கிறார்.

அந்த நாய் வந்த நேரம் அந்த தம்பதிகளுக்கு குழந்தை ஒன்று பிறக்கிறது. அவர் தான் நாய் சேகர் (வடிவேலு).

naar sekar returns movie review

அதே நேரம் வறுமையில் வாடிக் கொண்டிருந்த அந்த குடும்பத்திற்கு வசதி வந்து சேர்கிறது. ஒரு கட்டத்தில் வீட்டில் வேலை செய்து வரும் ஒருவர் அந்த ராசியான நாயை திருடி சென்று விட திருடியவர் பணக்காரனாகி விடுகிறார். நாய் சேகரின் குடும்பம் மீண்டும் பழையபடி வறுமை நிலைக்கு செல்கிறது.

அந்த நாயை தேடி கண்டுபிடிப்பதற்காக தனது குழுவை அழைத்துக் கொண்டு நாயை தேடிச் செல்கிறார் வடிவேலு, அவர் இறுதியில் அந்த நாயை மீட்டாரா? என்ன நடந்தது என்பது குறித்த கதை தான் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்.

அதேசமயம் பணக்காரர்களின் நாய்களையும் கடத்தி பணம் பறிக்கும் வேலையில் வடிவேலு ஈடுபட்டு வருகிறார்.

அப்படி தன் குழுவினருடன் ஒரு நாயை கடத்திக் கொண்டு வருகிறார். அந்த நாய் வில்லன் ஆனந்தராஜுடையது என்பது தெரிய வருகிறது. அங்கிருந்து தான் பிரச்சனை ஆரம்பம் ஆகிறது.

ஹைதராபாத்தில் இருக்கும் வசதியானவரிடம் இருந்து தன் குடும்பத்திற்கு  ராசியான நாயை நாய் சேகர் மீட்க முயற்சிப்பதை இரண்டாம் பாதியில் காட்டியிருக்கிறார்கள்.

அந்த முயற்சியில் நாய் சேகர் ஜெயித்தாரா என்பதுதான் படத்தின் இரண்டாம் பாகத்தின் கதை. நாய்களை கடத்தும் கதைநாயகன் என்பது வித்தியாசமான கதையாக இருந்த போதிலும் திரைக்கதையை குதறி எடுத்திருக்கிறார்கள். இப்படத்தின் முதல் பாதி திரைக்கதையில் நகைச்சுவை வறட்சி தலைவிரித்தாடுகிறது. 

வடிவேலு நாய் கடத்துபவர் என காட்ட நினைத்து வைக்கப்பட்ட பெரும்பாலான காட்சிகள் எரிச்சல் அடைய வைக்கிறது. ஆனந்த்ராஜ் – வடிவேலு நேருக்கு நேர் சந்திக்கும் காட்சிகள் சுவாரஸ்யம்.

காமெடி நடிகர்கள் கூட்டமாக இருந்தும் அவர்களால் திரைக்கதைக்கு தேவையான நகைச்சுவையை கொடுக்க முடியாததாலும், அழுத்தமில்லாத காட்சிகளாலும், வடிவேலு தன்னால் முடிந்த நடிப்பையும், உழைப்பையும் கொடுத்தும்ப்கூட படத்தை காப்பாற்ற முடியவில்லை.

படம் எப்படி இருந்தாலும் சில படங்கள் வணிகரீதியாக திரையரங்குகளில் கல்லா கட்டிவிடும். படத்தின் பெயர் அறிவித்த நாள் முதல் “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” படத்தின் தகவல்கள், அதிகாரபூர்வ செய்திகள், முதல் சிங்கிள்ஸ், பாடல் வெளியீடு, டிரைலர் வெளியீடு என எல்லாவற்றிலும் பிரம்மாண்டத்தையும், பிரமிப்பையும் ஏற்படுத்தி வந்தது.

அதற்குரிய வரவேற்பு திரையரங்குகளில் நேற்றையதினம் காலைக்காட்சி முதலே இல்லை என்கின்றனர் தியேட்டர் வட்டாரத்தில். அதனை முதல் நாள்” நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” தமிழ்நாடு முழுவதும் சுமார் ஐம்பது லட்ச ரூபாய் அளவில் மொத்த வசூல் செய்துள்ள தகவல் உறுதிப்படுத்துகிறது.

மாண்டஸ் எதிரொலி: இரண்டாவது நாளாக விமான சேவை ரத்து!

மாண்டஸ் புயல்: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

+1
0
+1
0
+1
1
+1
3
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *