வைகைப்புயல் வடிவேலு நடித்துள்ள நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.
வடிவேலு நடித்த நாய் சேகர் கதாபாத்திரத்தை மையமாக வைத்து “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” என்ற படத்தை இயக்குநர் சுராஜ் இயக்கியுள்ளார். லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் நகைச்சுவை நடிகர் ரெட்டின் கிங்ஸ்லி, விஜய் டிவி சிவாங்கி, நடிகர் ஆனந்தராஜ், ஷிவானி நாராயணன் மற்றும் விஜே விக்னேஷ் காந்த் ஆகியோர் நடிக்கின்றனர்.
வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் குறித்த அறிவிப்பு வெளியானது முதலே ரசிகர்கள், படம் திரைக்கு எப்போது வரும் என்று எதிர்பார்த்தனர். இந்நிலையில்தான் லைகா புரோடக்ஷன்ஸ் படம் டிசம்பர் 9 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
அதுமட்டுமின்றி நடிகராக மட்டும் இல்லாமல் நல்ல பாடகராகவும் திகழும் வடிவேலு நீண்ட இடைவேளைக்குப் பிறகு இப்படத்தின் முதல் பாடலான “எங்க அப்பத்தா” பாடலை பாடியிருந்தார்.
இது படத்திற்குக் கூடுதல் சிறப்பாக அமைந்ததோடு, பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றது. தொடர்ந்து வடிவேலு குரலில் படத்தின் இரண்டாவது பாடல் ”ஓ மை காட் நாம பணக்காரன்” இன்று (நவம்பர் 26) வெளியாகி உள்ளது.
திடீரென்று ஒருவர் பணக்காரன் ஆனால் எந்த மாதிரியான விஷயங்களைச் செய்வானோ அதை எடுத்துக் காட்டும் விதமாகப் பாடல் அமைந்துள்ளது.
குறிப்பாக “அரை டேங்க் பெட்ரோல் போட போறேன்”, “பேங்க்குக்கே லோன் தர போறேன்”, “ஆல் டே சிக்கன், சண்டே மட்டன்” என்ற வரிகள் கவனம் பெறுகின்றன.
வடிவேலு குரலில் இப்பாடல் வெளியான 1 மணி நேரத்திற்குள்ளேயே 1 லட்சம் பார்வைகளைக் கடந்து விட்டது.
மோனிஷா
“தவறு செய்தால் காப்பாற்றமாட்டோம்”: அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர்!
பிறந்தநாளில் அமைச்சர் பதவி?: உதயநிதி பதில்!