கொல்லிமலையால் உருவான ‘நாடு’!

சினிமா

ஸ்ரீஆர்க் மீடியா சார்பில் தயாரிப்பாளர்கள் சக்ரா மற்றும் ராஜ் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘நாடு’. 

இந்தப் படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான  நடிகர் தர்ஷன் கதாநாயகனாக நடிக்க, மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். 

முக்கிய வேடங்களில் சிங்கம்புலி, அருள்தாஸ், ஆர்.எஸ்.சிவாஜி, இன்பா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இன்றைக்கும் மக்கள் மனதில் இருந்து நீங்காத ‘எங்கேயும் எப்போதும்’ என்கிற படத்தின் இயக்குநர் சரவணன் தான் இந்தப் படத்தையும் இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (நவம்பர் 12) மாலை நடைபெற்றது 

விழாவில் இயக்குநர் சரவணன் பேசுகையில், “இப்போது சினிமாவில் வரும் பெரும்பாலான கதாபாத்திரங்கள் ரொம்பவே புத்திசாலித்தனமான, அறிவுக் கூர்மை வாய்ந்த கதாபாத்திரங்களாகவே காட்டப்படுகின்றன.

நாங்கள் அதிலிருந்து விலகி எளிய மனிதர்கள் பற்றிய கதையாக இந்தப் படத்தை உருவாக்கியுள்ளோம்.

கதை உருவான விதம்

இந்தப் படத்தில் மலைவாழ் மக்கள் பிரச்சனையை பேசி உள்ளோம். கொல்லிமலை பகுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. பல வருடங்களுக்கு முன்பு கொல்லி மலைக்கு சென்றிருந்த சமயத்தில் நேரிலேயே நான் கண்ட ஒரு நிகழ்வு என் மனதை பாதித்தது. ரொம்ப நாட்களாக மனதில் இருந்த அந்த நிகழ்வை மையப்படுத்தி இந்தப் படத்தின் கதையை உருவாக்கினேன்.

பிக்பாஸ் பார்ப்பதில்லை

இந்த படத்தில் ஹீரோவாக நடித்த தர்ஷனை அவர் ஆடிஷன் வருவதற்கு முன்புவரை நான் பார்த்ததே இல்லை. காரணம், நான் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதில்லை. ஆடிஷனுக்கு வருவதற்கு முன்பு கூட அவரது பாஸ்போர்ட் சைஸ் போட்டோவைத்தான் காட்டினார்கள். ஆனால் நேரில் அவரை பார்த்ததுமே இந்தக் கதாபாத்திரத்திற்கு அவர் சரியான நபர் என்று தோன்றிவிட்டது. உடனே அவரிடம் கதையை சொல்ல ஆரம்பித்து விட்டேன்.

அதேபோல இந்த படத்தின் ஒர்க் ஷாப்புக்கு வரும்போது பேண்ட், சர்ட் எல்லாம் போடாமல் லுங்கியை வாங்கி கட்டிக் கொண்டு வாருங்கள் என கூறிவிட்டேன். அதிலிருந்து இந்தக் கதையுடன் அவர் தினசரி பயணிக்க துவங்கி விட்டார். அதனால்தான் படப்பிடிப்பில்கூட அவர் ஸ்கிரிப்ட் பேப்பர் இல்லாமல் எல்லா வசனங்களையும் மனப்பாடமாக பேச முடிந்தது” என்றார்

படத்தின் நாயகியான மஹிமா நம்பியார் பேசுகையில், “இந்தப் படம் குறித்து இயக்குநர் முதலில் என்னிடம் தொலைபேசியில் 20 நிமிடங்கள் கதை சொன்னார்.

அப்போதே இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டேன். அதன் பிறகு நானே அவருக்கு போன் செய்து “இந்தப் படத்தில் நான் நடிக்கிறேன் சார்” என்றேன்.

அவரும் பெரிய அளவில் ஆச்சரியம் காட்டாமல் “அப்படியா?” என்று சொல்லி ஒப்புக் கொண்டார். அதைக் கேட்டதும் ஒருவேளை வேறு யாரிடமோ  பேசுவதற்கு பதிலாக தவறிப்போய் என்னிடம் கதை சொல்லிவிட்டாரோ என்றுகூட குழம்பினேன்.
படப்பிடிப்புக்கு சென்றபோது அவரிடம் “என்னை இந்தக் கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்ய என்ன காரணம்..?” என நேரிலேயே கேட்டு விட்டேன்.

அதற்கு அவர் சிம்பிளாக, “இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க சில பேரை அணுகலாம் என ஒரு பட்டியல் தயாரித்து வைத்திருந்தேன். அவர்களுக்கெல்லாம் போன் செய்து பேசியபோது அதில் எனக்கு மதிப்பளித்து திரும்பவும் பதிலளித்தவர் நீங்கள் ஒருவர் தான். அதனால்தான் உங்களையே கதாநாயகியாக தேர்வு செய்துவிட்டேன்…” என்றார்.

சிம்பிள் மேக்கப்

Naadu Movie formed by Kollimalai

மேலும் அவர், “ஒளிப்பதிவாளர் சக்திக்கு மைக்ராஸ்கோப் கண்கள். இதுவரை நான் நடித்த பல படங்களில் எளிமையான கிராமத்து கதாபாத்திரங்களில் நடித்து இருந்தேன். அதனால் எனக்கு மேக்கப்பும் ரொம்பவே எளிமையாகவே இருக்கும்.

இந்தப் படத்தில் கொஞ்சம் ரிச்சாக டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அதற்காக அழகாக மேக்கப் செய்து கொண்டு வந்தால், அவரோ, இது கிராமத்தில் இருக்கும் டாக்டர் கதாபாத்திரம். இதற்கு இவ்வளவு மேக்கப் தேவையில்லை என்று கூறி அவற்றை எல்லாம் கொஞ்சம், கொஞ்சமாக நீக்க வைத்துவிடுவார்.

இதனால் ஒவ்வொரு முறை மேக்கப் போடும்போதும் சக்தி சாருக்கு பிடிக்குமா என்று யோசிக்கும் அளவுக்கு வந்து விட்டேன். என்னை பொறுத்தவரை அவர் ஒளிப்பதிவில் நான் பயந்து, பயந்துதான் வேலை பார்த்தேன்.

இந்த படத்தில் எனக்கு ஒரே ஒரு பாடல்தான் என்றாலும் திருமண விசேஷ வீடுகளில் ஒலிக்கும்விதமாக ஒரு அருமையான குத்துப் பாடலை கொடுத்துள்ளார்கள். தீனா மாஸ்டர் நடனத்தில் அது அற்புதமான பாடலாக உருவாகியுள்ளது.

படத்தில் என்னைவிட தர்ஷன்-இன்பா கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது. ஒரு கதாநாயகன் என்கிற ஆரம்ப நிலையில் இருக்கும் தர்ஷனுக்கு இப்படி ஒரு போல்டான கேரக்டர் கிடைத்திருப்பது அவரை அடுத்தக் கட்டத்திற்கு அழைத்துச் செல்லும்” என்று கூறினார்.

கதாநாயகன் தர்ஷன் பேசுகையில், “ இயக்குனர் சரவணன் என்னிடம் கதை சொன்னபோது இந்த படத்தில் நான் இருக்கிறேனா என்று முதலில் என்னால் நம்ப முடியவில்லை.

கொல்லிமலையில் பிறந்து வளர்ந்த இளைஞனாக இதில் நடித்துள்ளேன். கதாநாயகி மகிமா நம்பியார் சீனியர் என்கிற ஈகோ பார்க்காமல் என்னிடம் சினிமா குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

வழக்கமாக இதையெல்லாம் நான் செய்ய மாட்டேன் என்று சொன்ன மகிமா, படப்பிடிப்பில் என்னை பலமுறை உற்சாகப்படுத்தி பாராட்டினார். இந்தப்படத்தில் என்னுடன் இணைந்து நடித்துள்ள நடிகர் இன்பாவுடன் நல்ல ஒரு நட்பு உருவானது. எங்களை பார்த்தவர்கள் திரையில் தோன்றுவதைவிட வெளியில் அவ்வளவு பிணைப்புடன் இருக்கிறீர்களே என்று ஆச்சரியப்பட்டார்கள்” என்று கூறினார்.”

Naadu Movie formed by Kollimalai

சூர்யா விக்ரம் போன்று தர்ஷன்

நடிகர் சிங்கம் புலி கூறுகையில், “ “கொல்லிமலை பகுதியில் உள்ள எல்லா ஊர்களுக்கும் ‘நாடு’ என்று முடியும்படிதான் பெயர் வைத்திருப்பார்கள். இந்தப் படத்தின் இயக்குநர் சரவணனை ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவியாளராக பணியாற்றியபோது இருந்தே தெரியும். அவர் இயக்கிய ‘எங்கேயும் எப்போதும்’ படம் பார்த்துவிட்டு இவருடன் ஒரு படத்திலாவது பணியாற்ற வேண்டும் என்று நினைத்தேன்.

அதன்படி இந்த வாய்ப்பு கிடைத்தபோது நான் படப்பிடிப்புக்கு சென்ற முதல் நாளே, “இந்த படத்தில் நான் நடிக்க வரவில்லை. உங்களுடன் இணைந்து சேவை செய்ய வந்திருக்கிறேன்” என்று கூறினேன். அந்த அளவிற்கு அவரது சமூக அக்கறை எனக்கு பிடிக்கும்.படத்தின் நாயகன் தர்ஷன் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்த பல இடங்களில் ஒரு பெண்ணை தன் தோளில் தூக்கிக் கொண்டு உயரமான இடங்களுக்கு ஓடுவார்.

காரணம் படப்பிடிப்பு நடக்கும் இடம் அப்படிப்பட்ட மலைப் பகுதி என்பதால். இதற்கு முன்பாக ‘பிதாமகன்’, ‘நான் கடவுள்’ ஆகிய படங்களில் நான் பணியாற்றியபோது விக்ரம், சூர்யா ஆகியோரின் கடின உழைப்பை  நேரில் பார்த்தவன் நான். அதனால்தான் அவர்கள் இன்று அந்த உயரத்தில் இருக்கிறார்கள். அதேபோன்ற ஒரு அர்ப்பணிப்பு உணர்வை தர்ஷனிடமும் பார்த்தேன்” என்றார்.

இராமானுஜம்

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் – சோயா உணவுகள் எல்லோருக்கும் ஏற்றதா?

சாகச காட்சியில் விபத்து: பற்றி எரிந்த விமானங்கள்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *