திருநெல்வேலின்னா அல்வா, மதுரைன்னா மல்லிப்பூ என்று தொடங்கி ஒவ்வொரு ஊரையும் ஏதேனும் ஒன்றோடு இணைத்துச் சொல்வது எளிதாக அடையாளப்படுத்த உதவியாக இருக்கும்; அதையும் தாண்டி, ஒவ்வொரு பகுதியையும் அடையாளம் காட்ட பல விஷயங்கள் உண்டு. திரைப்படங்களைப் பொறுத்தவரை, அது போன்ற அம்சங்களை மிகச்சரியாகக் காட்டுவது அவசியம். இல்லாவிட்டால், அழகுணர்ச்சியூட்டுவதைத் தவிர அவற்றால் வேறு எந்தப் பயனும் இல்லை என்றாகிவிடும்.
சென்னை ராயபுரம் பகுதியிலுள்ள கடலோர மக்களின் வாழ்க்கையைச் சொல்ல முனைந்திருக்கிறது லோகேஷ்குமார் இயக்கியுள்ள ‘என்4’ திரைப்படம். வடசென்னையிலுள்ள குறிப்பிட்ட சில மனிதர்களின் வாழ்க்கையைச் சொல்ல எத்தனித்திருக்கும் இத்திரைப்படம், அவர்களைத் திரையில் எப்படிக் காட்டியிருக்கிறது? இந்த கேள்விக்குப் பதிலளிக்க, ரொம்பவே தடுமாறியிருக்கிறார் இப்படத்தின் இயக்குனர்.
எதிர்பாராத சம்பவம்!
மீன் வியாபாரம் செய்யும் கண்ணம்மா (வடிவுக்கரசி) தன் வீட்டில் சூர்யா (மைக்கேல் தங்கதுரை), கார்த்தி (அப்சல் ஹமீது) என்ற இரு சகோதரர்களையும், சவுந்தர்யா (கேப்ரியேலா), அபிநயா (வினுஷா தேவி) என்ற இரு சகோதரிகளையும் வளர்த்து வருகிறார். நால்வருமே, சிறு வயதில் ஒரு ஆதரவற்றோர் காப்பகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள். சூர்யாவும் சவுந்தர்யாவும் திருமணம் செய்யும் எண்ணத்தில் இருக்க, கார்த்தியும் அபிநயாவும் ஒருவரையொருவர் காதலித்து வருகின்றனர்.
இன்னொரு புறம் விஜய்யும் (அக்ஷய் கமல்) சுவாதியும் (பிரக்யா நாகரா) காதல் புரிகின்றனர். மேல்தட்டு வர்க்கப் பின்னணி கொண்ட விஜய், தன் கல்லூரி நண்பர்களோடு சேர்ந்து ஊர் சுற்றுகிறார்; போதைபொருட்களைச் சுகிக்கிறார்; அவர்களது நண்பர்களில் சிலர் வடசென்னையின் கடலோரப் பகுதியைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர்.
இவ்விரு தரப்பும் எதிரெதிராக நிற்கக் காரணமாகிறது ஒரு சம்பவம். இரவு நேரத்தில் கடலோரமாக சூர்யா, சவுந்தர்யா, கார்த்தி, அபிநயா நால்வரும் நடந்து வருகின்றனர். அப்போது, யாரோ ஒருவரால் அபிநயா சுடப்படுகிறார். குண்டு அவரது வயிற்றில் பாய்கிறது; அதோடு, கீழே விழுவதால் பின்னந்தலையிலும் அடிபடுகிறது.
அபிநயாவைத் துப்பாக்கியால் சுட்டது விஜய். ஆனால், போலீசாரோ அந்த துப்பாக்கியைக் கண்டெடுத்ததாக ஒரு இளைஞரைக் கைது செய்கிறது. அந்த வாலிபரின் சகோதரர், அப்பகுதியில் செயின் பறிப்பு உள்ளிட்ட சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுபவர். இதனால், அவரது ஆட்களும் துப்பாக்கியால் சவுந்தர்யாவைச் சுட்ட நபரைத் தேடி அலைகின்றனர். அந்த இளைஞரோடு திரிபவர்களும் சரி, அவரது சகோதரரின் அல்லக்கைகளும் சரி; ‘சிறப்பா ஒரு சம்பவத்தை சிறப்பா செய்யணும்’ என்று எந்நேரமும் சொல்லிக்கொண்டே திரிகின்றனர். ஆனால், எதிர்பாராமல் நிகழும் ஒரு சம்பவத்தால், அவர்களது வாழ்க்கையே நிர்க்கதியாகிறது.
குண்டடிபட்ட சவுந்தர்யா உயிர் பிழைத்தாரா? விஜய் குறித்த உண்மை வெளியுலகுக்குத் தெரிய வந்ததா என்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது ‘என்4’ திரைக்கதையின் மீதமுள்ள பகுதி. இக்கதையில் குறிப்பிடப்படும் என்4 என்பது கடற்கரை காவல்நிலையத்தைப் பயன்படுத்தப்படும் வார்த்தையாகும்.
எதுக்கு இப்படியொரு படம்?
வடசென்னை மக்களின் வாழ்வை மையப்படுத்தி பல்வேறு படங்கள் வந்திருக்கின்றன. கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்று குற்றவுலகை மட்டும் மையப்படுத்தாமல், வெவ்வேறுவிதமான பின்னணியிலுள்ள மக்களின் வாழ்வைச் சொல்வதாக அப்படங்கள் அமைந்தன. அவர்களது தினசரி வாழ்க்கையிலுள்ள கஷ்ட நஷ்டங்களைப் பேசின. அங்கு நிலவும் வேறுபாடுகளை மீறி, வெளியிலிருப்பவர்கள் பார்வையிலிருந்து விலகிச் செல்லும் அவர்களது வாழ்க்கை முறையைத் திரையில் விளக்கியிருக்கின்றன.
ராயபுரம், காசிமேடு பகுதிகளில் கடலோரத்தில் நடக்கும் மீன் வியாபாரத்தைக் கண்ணில் காட்டும்போது, நமக்கும் அப்படியொரு படத்தைப் பார்க்கவிருக்கிறோம் என்ற எண்ணம் ஏற்படுகிறது. ஆனால், அந்த நம்பிக்கை படம் முடியும் வரை மெய்ப்படவே இல்லை.
சந்தர்ப்பவசத்தால் ஒரு குற்றம் நிகழ்வதாகச் சொன்னாலும், அதனால் பாதிக்கப்பட்டவர்களின் நியாயத்தைத் திரையில் சொல்லியிருக்க வேண்டும். ஆனால், யாரைக் கெட்டவர்களாகக் காட்டுவது என்று இக்கதையில் விளக்கத் தவறியிருக்கிறார் இயக்குனர். போதைப்பொருள் பயன்பாடுதான் ஒரு குற்றம் நிகழக் காரணம் என்று சொல்லும்போது, அக்கதையில் வரும் ஒவ்வொரு பாத்திரமும் அதோடு எந்த புள்ளியில் சம்பந்தப்படுகிறது என்பதையும் விளக்கியாக வேண்டும். ‘என்4’ அதனைச் செய்யவில்லை அல்லது தெளிவாக வெளிப்படுத்தத் தயங்கியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். அதனால், துண்டுப்படங்களின் தொகுப்பாகவே தென்படுகிறது இத்திரைப்படம்.
அந்த காரணத்தினாலேயே மைக்கேல் தங்கதுரை, கேப்ரியேலா, வினுஷா, அப்சல், அக்ஷய் கமல், பிரக்யா, அனுபமா, அபிஷேக் உட்படப் பலரது கடின உழைப்புக்குப் பலன் கிட்டாமல் போயிருக்கிறது.
திவ்யாங்கின் ஒளிப்பதிவும் பாலசுப்பிரமணியனின் இசையமைப்பும் ஒரு கதையை அழகாகச் சொல்ல உதவுகின்றன. ஆனால், டேனி சார்லஸின் படத்தொகுப்பு அதனைக் கோர்வையாக காட்டவில்லை. சில காரணங்களால் பல காட்சிகள் அரைகுறையாக இடம்பெற்றிருப்பது நன்றாகவே புலனாகிறது. அதனால், முதல் அரை மணி நேரம் கழிந்தவுடனேயே ‘எதுக்கு இப்படியொரு படம்’ என்ற கேள்வி தானாக எழுகிறது. அதற்கு இயக்குனர் மட்டுமே முழுப்பொறுப்பு.
மெருகேற்றப்படாத திரைக்கதை!
திரையில் சில மனிதர்களின் குணாதியசங்களை, அவர்களது வாழ்வைச் சொல்ல சில காட்சிகள் போதும்; ஆனால், ஒவ்வொருவரது பின்னணியையும் விளக்கிக் கதையின் முக்கிய முடிச்சு எதுவென்று காட்டும்போதே இடைவேளை வந்துவிடுகிறது. அதாவது, கதையே அங்குதான் தொடங்குகிறது. அதற்கான தீர்வைத் தேடி கிளைமேக்ஸ் வரை கதாபாத்திரங்கள் அங்குமிங்கும் அலைகின்றன.
ஒரு சுபமான முடிவு கிட்டும்போது இன்னொரு பிரச்சனை துவங்குகிறது; அதனைத் தீர்க்க நினைத்தால் இன்னொன்று என்று காட்சிகள் நகர்கின்றன. கதையின் பின்பாதியில் வரும் இந்த உத்தி நிச்சயம் பரபரப்பூட்ட உதவும். ஆனால், திறம்பட அதனைக் கைக்கொள்ளாத காரணத்தால் அதற்கான பலன்கள் கிடைக்கவில்லை.
இவ்வளவு உழைப்பைக் கொட்டி காட்சிகளைப் பதிவு செய்வதற்கு முன்னதாக, காகிதத்தில் இதன் திரைக்கதையை எழுதும்போதே மெருகேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கலாம். இந்த படைப்பு எதனை, யாரை அல்லது என்ன பிரச்சனையை முன்னிலைப்படுத்துகிறது என்ற தெளிவோடு களமிறங்கியிருக்கலாம். சில பாத்திரங்களை, அவற்றின் செயல்பாடுகளை வெளிப்படையாகக் காட்டினால் பிரச்சனைகள் வருமெனும்போது முன்கூட்டியே தவிர்த்திருக்கலாம்; அதனை மீறிக் காட்சிப்படுத்தியபிறகு, சில யுக்திகளின் காரணமாக அவற்றைத் திரையில் சொல்ல முடியாமல் போயிருக்கலாம். ஆனால், அந்த திரைமறைவு விஷயங்களைத் தாண்டி ஒரு சுவையான காட்சியனுபவத்தைப் பார்வையாளர்களுக்குத் தர வேண்டியது இயக்குனரின் கடமை.
அது நிகழாததால், பார்வையாளர்களின் கவனிப்பைப் பெறாத படைப்புகளின் வரிசையில் சேர்ந்திருக்கிறது ‘என்4’. ‘ஒரு சம்பவம் செய்யணும்’ என்று சொல்லிக்கொண்டு படம் முழுக்க ஒரு வில்லன் கும்பல் திரியும். படம் பார்த்து முடிந்ததும் பரிதாபகரமாக தியேட்டரை விட்டு வரும்போது, எதிரே வருபவர்களின் சிறப்பான கவனிப்பு ‘இதுதான் அந்த சம்பவமோ’ என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ளத் தூண்டுகிறது.
உதய் பாடகலிங்கம்
மெஸ்ஸியை துரத்தும் ரொனோல்டோ: ஜாம்பவான்கள் படைத்த சரித்திர சாதனை!
IPL 2023: காயத்தால் விலகிய நட்சத்திர வீரர்கள்!