டெல்லியில் 30.10.2022 அன்று நடைபெற்ற 68-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், தேர்ந்தெடுக்கப்பட்ட திரைக்கலைஞர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்கினார்.
அய்யப்பனும் கோஷியும் என்கிற மலையாளபடத்தின் இயக்குநர் சச்சிக்கு சிறந்த இயக்குநருக்கான விருது வழங்கப்பட்டது.
இயக்குநர் சச்சி மறைந்ததை அடுத்து, அவரது மனைவி சஜி இந்த விருதை பெற்றார்.
கண்ணீர் வழிந்த கண்களுடன் விருதை பெற அவர் மேடையேறிய போது விழா அரங்கத்தில் அமர்ந்து இருந்தவர்களிடம் ஒரு நிமிடம் கனத்த மெளனம், அமைதி நிலவியது. விருதை அவர் பெற்றபோது அரங்கம் அதிர கரவொலி எழுந்தது.
இதே அய்யப்பனும் கோஷியும் படத்தில் ”களக்காத்த சந்தனமேரம் வெகுவாக பூத்திருக்கு” என்ற பாடலை பாடிய நஞ்சியம்மாவுக்கு பெண்களுக்கான பிரிவில் சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில், இது தொடர்பாக மறைந்த இயக்குநர் சச்சியின் மனைவி சஜி தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
“நீங்கள் ஒருமுறை நாம் இந்திய குடியரசுத் தலைவருடன் இணைந்து உணவருந்துவோம் என்று கூறினீர்கள்.
என் நெற்றியில் முத்தமிட்ட பிறகு தேசிய விருதை நீங்கள் பெறுவீர்கள் என்றிருந்தபோது, இன்று அந்த முத்தத்தை உங்களிடமிருந்து பெறாமலேயே உங்கள் சார்பாக தேசிய விருதை ஏற்றிருக்கிறேன்.
உலகமே கைதட்ட வேண்டும் என நீங்கள் விரும்பிய பாடலும், அதன் பாடகி நஞ்சியம்மாவும் இன்று உலகின் உச்சத்தில் இருக்கிறார்கள்.
ஆம், நீங்கள் உண்மையில் வரலாற்றைத் தேடவில்லை உங்களைத் தேடி வந்தவர்களுக்காக நீங்கள் ஒரு வரலாற்றை உருவாக்கியிருக்கிறீர்கள்.
இன்று அந்த வரலாற்று தருணம்.
பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த கல்வியறிவற்ற, பாடகி நஞ்சியம்மா குடியரசுத் தலைவரிடம் இருந்து விருது பெறும் அந்த வரலாற்று தருணத்திற்கு நாங்கள் சாட்சியாக இருப்போம்.
அதோடு, ‘அய்யப்பனும் கோஷியும்’ போன்ற ரத்தினத்தை உருவாக்கி, நஞ்சியம்மா போன்ற ஒரு திறமையைக் கண்டறிந்ததற்காக உங்கள் சார்பில் நான் விருதை பெறுகிறேன்
அன்புள்ள சச்சி… என் இதயம் மகிழ்ச்சியால் நிரம்பியுள்ளது, அதே சமயம் நீங்கள் இல்லாத துக்கத்தால் கனத்துவிட்டது.
இந்த தருணத்தை நீங்கள் சொர்க்கத்திலிருந்து பார்ப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். நாம் கண்ட கனவுகள் நனவாகிவிட்டன. நீங்கள் கண்ட கனவை நோக்கி நான் பயணிக்க இருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
இராமானுஜம்
வேலைவாய்ப்பு : இந்தியன் வங்கியில் பணி!
கொடியேரி பாலகிருஷ்ணன் உடலுக்கு முதல்வர் நேரில் அஞ்சலி!