திரைப்படங்களைக் காட்டிலும் இசைத் துறை வளர வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
டி.சீரிஸ் சார்பில் பூஷன் குமார் தயாரிப்பில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து, அவரே எழுதியுள்ள பாடலை பாடி, நடனம் அமைத்து, நடித்து, இயக்கி இருக்கும் ‘ஓ பெண்ணே’ பாடல் வெளியீட்டு விழா நேற்று(9.10.2022) சென்னையில் நடைபெற்றது.
நடிகர் கமல்ஹாசன் இப்பாடலை வெளியிட்டார்.
இந்தப் பாடல் வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் தேவிஶ்ரீபிரசாத் பேசுகையில், “கமல் சாருக்கு எனது அன்புகளும், நன்றிகளும்.
நான் எந்த பணியை மேற்கொண்டாலும் அவர் எனக்கு உறுதுணையாகவும், உத்வேகம் கொடுக்க கூடியவராக எப்போதும் இருக்கிறார்.
இந்த சர்வதேச பாடலின் ஐடியாவை முதன்முதலில் அவரிடம்தான் நான் கூறினேன். அவருடைய உத்வேகம்தான் நான் இந்தப் பாடலை முடிக்க காரணமாக இருந்தது.
அவருக்கு இசையின் மேல் இருக்கும் பிரியம்தான், என்னையும் அவரையும் ஒன்றிணைத்தது. அதனால்தான் அவர் இதை வெளியிட வேண்டும் என்று விரும்பினேன்.
சுயாதீன கலைஞர்கள் வெளியே வர வேண்டும் என்பதற்காகத் தான் கொரோனா காலத்தில் ராக் ஸ்டார் என்ற நிகழ்வை நடத்தினேன்.
இந்தப் பாடலின் நோக்கமே சுயாதீன கலைஞர்கள் அனைத்து மொழிகளிலும் தங்கள் திறமையை காட்ட வேண்டும் என்பதுதான்.
இனிமேல் வரும் சுயாதீன கலைஞர்களும் பல மொழிகளில் தங்கள் பாடல்களை உருவாக்க வேண்டும். பல மொழிகளை கற்றுக் கொண்டு, பல மொழிகளில் இசையமைக்க வேண்டும்.
இந்த பான் இந்தியன் பாப் ஆல்பத்திற்கு உங்கள் ஆதரவு தேவை. சமீபத்தில் இந்தியில் இந்தப் பாடல் வெளியானது, அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது” என்றார்.
நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் பேசுகையில், “தேவிஶ்ரீபிரசாத்தை எனக்கு பல நாட்களாக தெரியும். இவர் என்னை அதிகமாக வியக்க வைத்துக் கொண்டே இருக்கிறார்.
பல சாதனைகள் படைத்து அடுத்தடுத்து என உத்வேகமாக நகர்ந்து கொண்டே இருக்கிறார். அது சிறந்த இசை கலைஞர்களுக்கே உண்டான சிறப்பம்சம்.
இவருக்கு வெற்றி கண்டிப்பாக வந்தே தீர வேண்டும். இவருக்கு வெற்றி தாமதமாகிறது என்று எண்ணி நான் வருத்தப்பட்டு இருக்கிறேன். இவருக்கு உங்களது ஆதரவு கண்டிப்பாக தேவை.
திரை இசை பாடல்களைத் தாண்டி, சுயாதீன பாடல்கள் நிறைய வர வேண்டும். இசைக் கலைஞர்கள் அதை செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது.
திரை இசை அவர்களுக்கு ஒரு கட்டுப்பாடுதான். சுயாதீன பாடல்கள்தான் இசைக் கலைஞர்கள் தங்களுடைய முழு திறமையும் வெளிக்காட்ட ஒரு பாதையாக இருக்கும்.
மற்ற நாடுகளில் திரை பிரபலங்களைவிட சுயாதீன கலைஞர்கள் பிரபலமாகி இருக்கிறார்கள். திரைப்படங்களைவிட மிகப் பெரிய துறையாக இசைத் துறை வளர வேண்டும்,
அதற்கு உண்டான தகுதி அதில் இருக்கிறது. அதனால், அதற்கு உங்கள் அனைவரது ஆதரவு தேவை. பழைய காலத்தில் இது அதிகமாக இருந்தது.
இப்போது மீண்டும் அது வர வேண்டும். தேவிஶ்ரீபிரசாத்தின் இந்தப் பாடல் பெரும் வெற்றியைப் பெற வேண்டும்.
தமிழ் சினிமாவிலும் இவர் மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்ய வேண்டும். இந்தப் பாடலுக்கு உறுதுணையாக இருந்த பூஷன் குமாருக்கு நன்றி. இந்த பாடலுக்கு உங்கள் ஆதரவை தாருங்கள்” என்றார்.
இராமானுஜம்
பிக்பாஸ் வீட்டில் ஜி.பி முத்து : வைரலாகும் வீடியோ!
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!!!