நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர், தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில், சூரரைப்போற்று படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
2020ம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த சூரரைப் போற்று படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியானது. இதில் சூர்யாவுடன், அபர்ணா முரளி, ஊர்வசி, மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். இந்தப் படம் ஓடிடியில் வெளியான நாள் முதல், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. வசூலையும் வாரிக்குவித்தது. முக்கியமாக, இப்படத்தில் சினேகன் எழுதிய ’காட்டு பயலே… கொஞ்சி போடா’ பாடல் யூடியூபில் பயங்கர வைரலானது. பட்டிதொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது.

ஜி.வி.பிரகாஷ் ட்வீட்
இந்த நிலையில், இன்று (ஜூலை 22) அறிவிக்கப்பட்ட 68வது தேசிய திரைப்பட விருதுகளில், சூரரைப் போற்று படத்துக்கு, சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இசையமைப்பாளர், சிறந்த திரைக்கதை ஆகியவற்றுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, சூரரைப்போற்று படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருது கிடைக்கப் பெற்றிருக்கும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “ஒருநாள் நீ பெரிதாக சாதிப்பாய்; ஒருநாள் நீ வெல்வாய்; ஒருநாள் உனக்குப் பிடித்ததுபோல் எல்லாம் நடக்கும். நீண்டகாத்திருப்புக்குப்பின் அந்த நாள் வந்துவிட்டது” எனப் பதிவிட்டு அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
முக்கியமாய், அவருடைய தந்தை வெங்கடேஷுக்கு நன்றி சொல்லியுள்ளார். அதுபோல், அவருடைய குடும்பத்தினருக்கும், சூரரைப்போற்று படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், அவருடன் பணியாற்றும் இசைக்குழுவினருக்கும் நன்றி சொல்லியிருக்கும் அவர், ட்வீட்டின் இறுதியில், ’இன்றைய நாள் என் வாழ்வின் முக்கியமான நாள்’ எனப் பதிவிட்டுள்ளார்.
ஜெ.பிரகாஷ்