band shakti win grammy
உலகளாவிய சிறந்த இசை ஆல்பத்திற்கான ‘கிராமி’ விருதை வென்றிருக்கிறது ‘ரிமெம்பரிங் சக்தி’ இசைக்குழு.
பிரிட்டிஷ் இசைக்கலைஞர் ஜான் மெக்லாலின் உருவாக்கிய இந்தக் குழுவில் இந்தியாவைச் சேர்ந்த பாடகர் சங்கர் மகாதேவன், வயலின் கலைஞர் கணேஷ் ராஜகோபாலன், தாள வாத்தியக் கலைஞர் செல்வகணேஷ் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
இவர்களது ‘திஸ் மொமண்ட்’ எனும் ஆல்பமே இந்த விருதைப் பெறக் காரணமாக அமைந்தது. இது எல்லாமே நமக்குத் தெரிந்த விஷயம் தான்.
இவர்களில் சங்கர் மகாதேவனைப் பாடகராக மட்டுமல்லாமல் ‘சங்கர் – இஷான் – லாய்’ என்ற பெயரில் இசையமைப்பாளராகவும் நமக்குத் தெரியும்.
‘ஆளவந்தான்’, ‘விஸ்வரூபம்’ படங்களுக்கு இவரும், இவரது நண்பர்களும் இசையமைத்திருக்கின்றனர். இது போக ‘ராக் ஆன்’, ‘தில் சாஹ்தா ஹை’, ‘லக்ஷ்யா’, ‘டான்’ உட்படப் பல இந்தி ஹிட் படங்களைத் தந்திருக்கின்றனர்.
அதேபோன்று செல்வகணேஷும் தமிழில் சில நல்ல திரையிசையை வழங்கியவரே..! அவை நாம் அடிக்கடி தொலைக்காட்சிகளில் கேட்கிற, முணுமுணுக்கிற பாடல்கள் என்பது சிலரது நினைவில் ஒட்டாத ஒரு விஷயம்.
தந்தை காட்டிய வழி!
செல்வகணேஷ் பிரபல கடம் இசைக்கலைஞர் விக்கு விநாயக்ராமின் மகன். திருவல்லிக்கேணி மக்கள் தினசரி வாழ்வில் இவர்களை எதிர்கொள்ளாமல் இருக்கவே முடியாது. அந்த அளவுக்கு அப்பகுதியோடு பின்னிப் பிணைந்தது இவர்களது வாழ்க்கை.
தாத்தா டி.ஆர்.ஹரிஹர சர்மா உருவாக்கிய ‘ஸ்ரீ ஜெய கணேஷ் தாள வாத்ய வித்யாலயா’வில் தாளக்கருவிகளை இசைக்கக் கற்றுக்கொண்டவர் செல்வகணேஷ்.
பின்னாளில் தன் தந்தையிடமும், உறவினரான சுபாஷ் சந்திரனிடமும் அடுத்தடுத்த நிலைகளைக் கற்றுத் தேர்ந்தார். சர்வதேச அளவில் பல்வேறு ஜாம்பவான்களோடு இணைந்து இசையில் தடம் பதித்தவர் விநாயக்ராம்.
தொண்ணூறுகளில், தந்தை காட்டிய வழியில், கஞ்சிரா இசைக்கலைஞராகத் தனித்துவம் பெறத் தொடங்கினார் செல்வகணேஷ்.
கர்நாடக இசைக்கச்சேரிகள் மட்டுமல்லாமல் ஜாஸ், ராப் உட்படப் பல்வேறு மேற்கத்திய இசை வடிவங்களோடும், அதில் புகழ்மிக்கவர்களாக விளங்கிய கலைஞர்களோடும் பரிச்சயம் ஆனார்.
ஹரிபிரசாத் சௌராஸியா, சிவ்குமார் சர்மா, பண்டிட் ஜஸ்ராஜ், எல்.வைத்தியநாதன் தொடங்கி ஜான் மெக்லாலின், ஜாஹிர் ஹுசைன், ஷான் லேன், ஜோனாஸ் ஹெல்பெர்க் என்று பலருடன் இணைந்து இசை நிகழ்ச்சிகளில் இவர் பங்கேற்றிருக்கிறார்.
ஜாஹிர் ஹுசேன் உடன் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகே சர்வதேச இசைக்கலைஞர்களின் அறிமுகமும், அவர்கள் வெளிப்படுத்திய இசையும் தனக்குக் கிடைத்ததாகப் பேட்டியொன்றில் குறிப்பிட்டிருக்கிறார் செல்வகணேஷ்.
தமிழ் திரையிசையில்..!
செல்வகணேஷ் சர்வதேச அளவில் புகழ்மிக்க இசைக்கலைஞராகத் திகழ்ந்தாலும், அந்த இசையைக் கேட்டிராதவர்களுக்கு அவர் குறித்து அறிமுகப்படுத்துவதே நியாயம்.
‘வெண்ணிலா கபடிக்குழு படத்தின் இசையமைப்பாளர்’ என்று சொன்னால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இவரை நன்கு தெரியும்.
அந்தப் படம் உட்பட தமிழிலும், தெலுங்கிலும் 13 திரைப்படங்களுக்கு அவர் இசையமைத்திருக்கிறார். அவற்றில் சில பாடல்கள் பலருக்குப் பிடித்தமானதாகவும், ரிங்டோன் ஆகவும் இருக்கக் கூடும்.
‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தில் சரண்யா மோகனைத் திருவிழாக் கூட்டத்தில் விஷ்ணு விஷால் தேடியலைவதாக வரும் ‘லேசா பறக்குது மனசு’ பாடல், அந்த பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கும். மிக அருமையான மெலடி அது.
’கொல கொலயா முந்திரிக்கா’ படத்தில் இடம்பெற்ற ‘ஒரு வரம் தருகிறாய் தாயே’ பாடல், இன்னொரு அற்புதமான மெலடி மெட்டு. எஸ்.பி.பி-யும், சித்ராவும் அதற்கு உயிர் தந்திருப்பார்கள்.
’இறுதிச்சுற்று’, ‘சூரரைப் போற்று’வுக்கு முன்னதாக சுதா கொங்கரா இயக்கிய ‘துரோகி’யில் ‘கொஞ்சம் கொஞ்சம் வேண்டும்’ எனும் பாடலைத் தந்திருப்பார் செல்வகணேஷ்.
விரகதாபத்தைத் திரையில் கொட்டும்விதமாக அமைந்த அந்தப் பாடல், அது வெளியான காலகட்டத்தில் பெரிதாகக் கவனம் பெறவில்லை.
’நில் கவனி செல்லாதே’வில் இடம்பெற்ற ‘பார்வை உந்தன் பார்வை’ பாடலைக் கேட்டபோது, ‘இதை எப்படி இத்தனை நாட்களாக மிஸ் செய்தோம்’ என்றே தோன்றியது. அந்த அளவுக்கு ‘வசீகரா’ போல அது நம்மைக் கவர்ந்து இழுக்கும்.
‘விழிகளிலே விழிகளிலே புதுவித மயக்கம் யார் தந்தா’ எனும் ‘குள்ளநரி கூட்டம்’ படப் பாடல் நம் அனைவருக்கும் நன்கு தெரிந்த ஒன்று.
தவறாக மொபைல் எண்ணுக்கு ‘ரீசார்ஜ்’ செய்துவிட்டு ரம்யா நம்பீசனைத் தேடிச் செல்லும் விஷ்ணு விஷால், மெல்ல அவரோடு காதல் கொள்வதை ‘மாண்டேஜ்’ ஆகக் காட்டும் இந்த பாடல்.
அந்தச் சூழலையும் அக்கதாபாத்திரங்களின் மனமாற்றங்களையும் நம் மனதில் அழுந்தப் பதிய வைக்கும்விதமாக இப்பாடல் இருக்கும்.
‘நிர்ணயம்’ படத்தில் இடம்பெற்ற ‘ஏதோ மாயம் நீ செய்தாய்’ கூட சட்டென்று நம் மனதோடு ஒட்டிக்கொள்ளும் ரகமே.
’ரெட்ட வாலு’ படத்திலுள்ள ‘குலுகுலுங்குது குலுகுலுங்குது குத்த வச்ச கொடி குலுகுலுங்குது’ பாடல் ரொம்பவே ‘அண்டர்ரேட்டட்’ என்று சொல்லலாம். அந்த அளவுக்கு, இப்போது கேட்டாலும் புதிதாகத் தெரியும்; புத்துணர்ச்சி தருவதாக இருக்கும்.
’அர்த்தநாரி’யில் வரும் ‘மந்திர விழியால் மாயங்கள் செய்தாய்’ பாடல், செல்வகணேஷ் பங்கேற்ற ‘ப்யூஷன் கான்சர்ட்’ போன்றே வித்தியாசமானதொரு அனுபவத்தைத் தரும். பலவித தாள லயங்களில் அமைந்த அந்த பாடல் நாம் கொண்டாட மறந்த நல்முத்துகளில் ஒன்று.
‘வெண்ணிலா கபடிக்குழு’ போலவே, அதன் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்ற ‘ஒத்தைப் பார்வையில் வித்தை காட்டியே என்னை கவுத்திட்டியே’ பாடலும் நிறைய ரசிகர்களின் இதயத்திற்கு மிக நெருக்கமானதாக மாறியது.
மேற்சொன்ன பாடல்கள் அனைத்தும் காதல் ரசம் பிழியும் ரகத்தைச் சேர்ந்தவை. ‘இன்ஸ்டாரீல்ஸ்’களில் சுடச்சுட பதிவேற்றம் செய்ய ஏற்றவை. அதேநேரத்தில், அந்த படங்களில் இடம்பிடித்த இதர பாடல்களும் கூட நம்மை ஈர்த்தவை தான்.
செல்வகணேஷ் இசையமைத்தவற்றில் ’வெண்ணிலா கபடிக்குழு’ தவிர மற்ற படங்கள் பெரியளவில் கவனம் பெறவில்லை. அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்.
ஆனாலும், அவற்றில் அவரது பங்களிப்பு சிறப்பானது என்பதை எவராலும் மறுக்க முடியாது. ‘அதை இவ்வளவு லேட்டாவா அப்சர்வ் பண்ணீங்க’ என்பவர்களிடம், உதட்டு பிதுக்கலைத் தவிர வேறேதும் பதில் இல்லை.
கிராமி விருது வென்ற செல்வகணேஷைக் கொண்டாடும் விதமாக இசைக்கச்சேரிகளில் அவர் தந்த அற்புதத் தருணங்களைச் சிலர் நினைவுகூறலாம்.
அவர் பங்களித்த சர்வதேச ஆல்பங்களை சிலர் புரட்டியெடுத்து கேட்கலாம்; அதற்கு ஈடாக, ரசனைமிகு தமிழ் சினிமா ரசிகர்களாக நாம் அவரது திரைப்படப் பாடல்களைக் கேட்டு மகிழ்வோம்!
-உதய் பாடகலிங்கம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சென்னை திரும்பும் முதல்வர்: குவியும் திமுக நிர்வாகிகள்!
தொடர் சரிவில் தங்கம்… இன்றைய விலை இதுதான்!
band shakti win grammy