உதயசங்கரன் பாடகலிங்கம்
காதலில் பரஸ்பர சம்மதம் முக்கியம்!
காதல் என்பது இரு மனங்களின் இணைவு. அதில் யாரேனும் ஒருவர் மட்டும் ‘உனக்கும் சேர்த்து நானே காதல் கொண்டேன்’ என்று ஒருதலைக் காதலில் மூழ்குவதை ஒப்புக்கொள்ள முடியாது. அதோடு விட்டுவிடாமல், அதில் மூழ்கி முத்தெடுக்கவும் சிலர் விரும்புவார்கள்.
காதலின் பெயரில் பல கொடுமைகள் அவர்களால் தான் அரங்கேறுகின்றன. அதனைப் பேய் பிசாசுகள் நிகழ்த்தினால் என்னவாகும் என்பதை ஆயிரம் ஜென்மங்கள், பிள்ளை நிலா உட்படப் பல தமிழ் படங்களில் நாம் பார்த்து வந்திருக்கிறோம். அவற்றில் இருந்து சற்றே வேறுபட்டு நம்மைப் பயத்தில் இருக்கையைப் பிறாண்டச் செய்கிறது ‘Munjya’ இந்தி திரைப்படம்.
முஞ்யா என்றால் பிரம்ம ராட்சசன் என்று அர்த்தம். பிரம்ம ராக்கதன் என்றும் இது தமிழில் குறிப்பிடப்படுகிறது. இளம் வயதில் தீய செயல்களில் ஈடுபடும் வேதியர் அந்த நிலையை எட்டுவதாகப் புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த புனைவை அடிப்படையாகக் கொண்டு ‘முஞ்யா’ திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
யோகேஷ் சந்தேகரின் கதையை அடிப்படையாகக் கொண்டு நிரேன் பட் திரைக்கதை வசனம் எழுதியுள்ள இப்படத்தினை ஆதித்யா சர்போத்கர் இயக்கியுள்ளார். ‘ஸ்திரீ’ படத்தின் தயாரிப்பாளர்களான தினேஷ் விஜன், அமர் கௌசிக் இதனைத் தயாரித்துள்ளனர்.
சரி, இந்தப் படத்தின் சிறப்பம்சம் என்ன?
பயமுறுத்தும் பிரம்மராட்சசன்!
கொங்கன் மண்டலத்தை ஒட்டிய மகாராஷ்டிராவைச் சேர்ந்த கடலோர எல்லைப் பகுதி. அங்கு கோட்யா எனும் சிறுவன் பெற்றோருடன் வாழ்ந்து வருகிறார். பக்கத்து வீட்டில் வசிக்கும் முன்னி என்ற சிறுமி மீது அவருக்குக் காதல். ஆனால், அவரை விட வயதில் மூத்த அந்தப் பெண்ணுக்குச் சிறு வயதில் திருமணம் நடத்த ஏற்பாடாகிறது. அதனை நடத்தவிடாமல் செய்து, முன்னியைத் தன்வசப்படுத்துவதற்காகச் சில பில்லிசூனியச் சடங்குகளில் ஈடுபடுகிறார் கோட்யா. அதன்பிறகு, அவர் உயிரிழக்கிறார்.
கோட்யாவின் வீட்டில் நடந்த ஒரு சடங்கு முடிந்து பத்து நாட்களுக்குள் அவர் மரணமடைந்த காரணத்தால், புராணத்தில் சொல்லப்பட்டவாறு ’பிரம்ம ராட்சசனாக’ திரிவார் என்று அக்கிராமத்தில் உள்ளவர்கள் நம்புகின்றனர். அதனால், ஈமச்சடங்குகள் நடந்த இடத்திற்கு அருகேயிருக்கும் மரத்தில் அவரது ஆன்மாவைப் பிணைப்பதற்கான பூஜைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதையடுத்து, கோட்யாவின் ஆவி ‘முஞ்யா’வாக மாறி அந்த மரத்தில் அடைபடுகிறது.
அந்த கோட்யாவின் சகோதரிக்கு தற்போது எழுபது வயதாகிறது. அவருக்கு (சுஹாஸ் ஜோஷி) இரண்டு மகன்கள். அதில் மூத்த மகன் இறந்துவிட, மருமகள் பம்மி (மோனா சிங்) மற்றும் பேரன் பிட்டு (அபய் வர்மா) உடன் அவர் புனேயில் வாழ்கிறார். இளைய மகன் பாலு (அஜர் புர்கர்) பூர்விகக் கிராமத்தில் வசிக்கிறார்.
சிறு வயதில் புனேயில் தன் வீட்டருகே வசித்த பேலா (ஷர்வாரி) என்ற பெண்ணை விரும்புகிறார் பிட்டு. அவருக்குப் பிட்டுவை விட வயது அதிகம். ஆனாலும், அவர் தனது காதலைக் கைவிடுவதாக இல்லை. அதேநேரத்தில், நேரடியாக அதனை அவரிடம் தெரிவிக்கவும் முடியாமல் தவிக்கிறார்.
அமெரிக்காவில் இருந்து திரும்பி வரும் பேலா, கூடவே குபா எனும் அமெரிக்க நபரை அழைத்துவந்து ‘எனது காதலன்’ என்று பிட்டுவிடம் அறிமுகப்படுத்துகிறார். அதனால், அவர் மனமுடைந்து போகிறார்.
அந்த காலகட்டத்தில், கிராமத்தில் இருக்கும் பிட்டுவின் சித்தப்பா மகள் ருக்குவின் (பாக்யஸ்ரீ லிமாயே) நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதில் கலந்துகொள்ளப் பாட்டி, தாய் சகிதம் கிளம்புகிறார் பிட்டு.
அங்கு, பூர்விக நிலத்தை விற்க வேண்டும் என்று பிட்டுவின் பாட்டியிடம் வற்புறுத்துகிறார் பாலு. அதற்கு அவர் மறுக்கிறார். அதன் தொடர்ச்சியாக, பாலுவுக்கு பம்மி உடன் மோதல் ஏற்படுகிறது. அப்போது, ’இவனோட அப்பா அந்த முஞ்யாவோட மரத்தை வெட்டப் போய் மலை மேல இருந்து கடல்ல விழுந்து செத்துப்போன உண்மையை யாரும் சொல்லலையா’ என்று பிட்டுவைப் பார்த்துச் சொல்கிறார் பாலு. அதுவரை தாயும் பாட்டியும் அதனைச் சொன்னதில்லை என்பதால், பிட்டு அதிர்ச்சி அடைகிறார்.
கோபத்தில் அங்கிருந்து கிளம்பி, அந்த முஞ்யா வைக்கப்பட்டிருக்கும் ’செத்துவாக்டி’ எனும் இடத்திற்குச் செல்கிறார் பிட்டு. தகவல் அறிந்ததும், அந்த கிராமத்தைச் சேர்ந்த எவரும் அங்கு செல்லத் தயாராக இல்லை. காரணம், முஞ்யா மீதான பயம். ஆனால், பிட்டுவின் பாட்டி மட்டும் ஒரு பிரம்பை எடுத்துக்கொண்டு அங்கு செல்கிறார்.
தனது சகோதரன் கோட்யா தான் ‘முஞ்யா’வாக திரிகிறார் என்ற உண்மை அவருக்குத் தெரியும். அந்த மரத்தில் பிட்டுவை முஞ்யா சிறை வைத்திருப்பது கண்டு பதறுகிறார். அவனை விட்டுவிடுமாறு கூறுகிறார். அந்த குரலில் இருக்கும் துணிவைக் கண்டதும், அப்படியே செய்கிறது முஞ்யா. ஆனால், பிட்டுவின் முதுகில் ஓங்கி அடித்து தனது கைதடத்தைப் பதிக்கிறது.
கடற்கரைக்கு வந்ததும் அந்த கைதடத்தில் இருந்து முஞ்யா உயிர்த்தெழுகிறது. பிட்டுவின் பாட்டியைக் கொல்கிறது. அதனைக் கண்டதும் மயக்கமுறுகிறார் பிட்டு.
அந்தக் கிராமத்தில் இருந்து புனே நகருக்கு வந்தபிறகும் கூட, முஞ்யா பிட்டுவை விடுவதாக இல்லை. அவரைத் தூங்கவிடாமல் இரவெல்லாம் பாடாய்படுத்துகிறது. ‘முன்னியைத் திருமணம் செய்து வை’ என்கிறது. அந்த முன்னி யார் என்று தெரியாமல் தவியாய் தவிக்கிறார் பிட்டு.
முஞ்யா பிறரது கண்களுக்குத் தெரியாது. ஆனால், அதன் இருப்பை உணர முடியும். ஆதலால், தனது தோழன் ஸ்பீல்பெர்க் சிங்கிடம் அந்த உண்மையைப் பகிர்கிறார் பிட்டு. அன்று முதல் அவரும் முஞ்யாவின் அட்ராட்சிட்டிகளுக்கு இலக்காகிறார்.
ஒருநாள், முஞ்யா அந்தப் பெண்ணின் முழுப்பெயர் முன்னி கனிட்கர் என்கிறது. கோட்யாவின் சிறுவயது தோழிகளில் யாராவது முன்னி கனிட்கர் என்ற பெயரில் இருந்தார்களா என்று பிட்டு, கிராமத்தில் இருக்கும் சகோதரி ருக்குவிடம் விசாரிக்கச் சொல்கிறார். அவரோ, பாட்டியின் தோழி பெயர் முன்னி என்றும், அவர்கள் பக்கத்து வீட்டில் வசித்ததாகவும் கூறுகிறார்.
அந்த முன்னி சிறுவயதிலேயே திருமணமாகி வெளியூர் சென்றுவிட்டதாகச் சொல்பவர், அவர் இருக்கும் குரூப் போட்டோவை வாட்ஸ்அப்பில் அனுப்புகிறார். அதில் முன்னியைப் பார்த்ததும் பிட்டுவுக்கு பொறி தட்டுகிறது. பேலாவின் பாட்டிதான் அந்த முன்னி.
அன்றிரவே பிட்டு, தனது தோழன் ஸ்பீல்பெர்க் சிங்குடன் சேர்ந்து முஞ்யாவை பேலா வீட்டுக்கு அழைத்துப் போகிறார். ஆனால், அங்கிருக்கும் பாட்டி முன்னியைப் பார்க்காமல், அவரது சிறுவயது தோற்றத்தை ஒத்திருக்கும் பேலாவைப் பார்க்கிறது முஞ்யா. ‘எனக்கு பேலாவைத் திருமணம் செய்துவை’ என்கிறது.
அதனைக் கேட்டதும், பிட்டு ஆடிப் போகிறார். இனி பேலாவை ஒருவழியாக்காமல் முஞ்யா இருக்காது என்று உணரும் அவர், அதனை மொத்தமாகத் தீர்த்துக்கட்ட முடிவெடுக்கிறார்.
அதன் தொடர்ச்சியாக, ஸ்பீல்பெர்க் சிங்கும் பிட்டுவும் பேய்களை ஓட்டுவதில் நிபுணர் என்று சொல்லிக்கொள்ளும் எல்விஸ் கரீம் பிரபாகரை (சத்யராஜ்) தேடிச் செல்கின்றனர்.
தன்னை நாடி வரும் மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடத்துவதாகச் சொல்லி, அவர் அவர்களை ஏமாற்றமடையச் செய்கிறார். ஆனால், பிட்டுவின் முதுகில் முஞ்யா பதித்த தடத்தைப் பார்த்ததும் அவர் மனம் மாறுகிறது. ‘முஞ்யாவை தீர்த்து கட்டுவதில் தான் ஒரு கில்லாடி’ என்கிறார். அவர்களிடம் சில தீர்வுகளைச் சொல்கிறார்.
எல்விஸ் கரீம் பிரபாகர் என்ன தீர்வைச் சொன்னார்? அதன்படி பிட்டு செய்தாரா? முஞ்யாவின் கொட்டம் அடங்கியதா என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.
தண்டியக்காரர், சண்டாளர் என்று கந்தர்சஷ்டி கவசத்தில் இருக்கும் பலவிதமான பேய், பிசாசுகளின் பெயர்களில் ஒன்றாக ‘பிரம்ம ராட்சசன்’ இடம்பெற்றிருப்பதை நம்மில் சிலர் அறிந்திருப்பார்கள். அதற்கு உரிய விளக்கம் தந்துவிட்டு, ‘முஞ்யா’வின் திரைக்கதை தொடங்குகிறது. அந்த வேகமும் விறுவிறுப்பும் படத்தின் இறுதி வரை தொடர்வது தான் ‘முஞ்யா’வின் சிறப்பு.
சிறப்பான ஆக்கம்!
2018இல் வெளியான ‘ஸ்திரீ’ படத்தின் தமிழாக்கத்தினை ரசிகர்கள் பார்த்திருக்கலாம். அந்த படத்தில், ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தன்னையும் தனது காதலனையும் அவமானப்படுத்திக் கொன்ற கிராம மக்களை, அவர்களது வம்சாவளியினரை, குறிப்பிட்ட ஒரு விழாக்காலத்தில் ஒரு பெண் பேய் நிர்வாணமாக்கிக் கடத்திச் செல்வதாகச் சொல்லப்பட்டிருக்கும்.
பாலியல் தொழில் செய்துவந்த ஒரு பெண்ணின் மகனால் அந்த பேய் குறித்த கற்பிதங்கள் பொய்யாக்கப்பட்டு, பின்னர் அதையே தெய்வமாக அக்கிராமத்தின் வழிபடுவதாக அப்படம் முடிவடையும்.
ஒரு பேய் படத்தில் கூட பெண்ணியத்தைச் சிறிதும் சிந்தாமல் சிதறாமல் மிகச்சரியான வகையில் சொல்ல முடியும் என்பதைக் காட்டிய படம் ‘ஸ்திரீ’. அந்த வகையில், காதலில் பரஸ்பர சம்மதம் முக்கியம் என்பதைச் சொல்கிறது ‘முஞ்யா’. அதனை வசனமாகக் குறிப்பிடாமல், ஒரு சிலரது வாழ்வின் வழியே சொன்ன விதத்தில் வேறுபடுகிறது ‘முஞ்யா’.
இந்தக் கதையில், பல காலமாகத் தனது காதல் குறித்த வேட்கையுடன் தன்னைச் சிறை வைத்த இடத்தில் இருக்கிறது முஞ்யா. அங்கு வருபவர்களை எல்லாம் கொன்று குவிக்கிறது. அதிலிருந்து விடுபட வழியொன்று அமைந்தவுடன், தான் சார்ந்த குடும்பத்தில் பிறந்த பிட்டுவைப் பாடாய்படுத்துகிறது.
அந்த அனுபவத்தைக் கடந்துவந்த பிறகே, காதல் என்ற பெயரில் பேலாவைத் தொந்தரவு செய்யக் கூடாது என்ற முடிவுக்கு வருகிறார் பிட்டு. அதுதான் இப்படத்தின் கிளைமேக்ஸ் (இது ஸ்பாய்லர் என்று யாரும் அலற வேண்டாம்). அது போன்ற வித்தியாசமான சிந்தனைகளே, ‘முஞ்யா’வை வெறுமனே ஒரு பேய்படமாகக் கருதவிடாமல் தடுக்கிறது.
யோகேஷ் சந்தேகர், நிரேன் பட், ஆதித்ய சர்போத்கரின் ஒட்டுமொத்த உழைப்பில் இந்த ‘முஞ்யா’ திரையில் உயிர் பெற்றிருக்கிறது.
பேலாவாக வரும் ஷர்வாரி, பிட்டுவாக வரும் அபய் வர்மா, பம்மியாக வரும் மோனா சிங், பாட்டியாக வரும் சுஹாஸ் ஜோஷி, பாலுவாக வரும் அஜய் புர்கர், ருக்குவாக வரும் பாக்யஸ்ரீ லிமாயே, முஞ்யாவாக வரும் ஆயுஷ், ஸ்பீல்பெர்க் சிங் ஆக வரும் தரஞ்சோத் சிங், பேலாவின் அமெரிக்க காதலன் குபாவாக வரும் ரிச்சர்ட் லோவாட் உட்படப் பலரும் இதில் சிறப்பாக நடித்துள்ளனர்.
நம்மூர் சத்யராஜ் இதில் பேயோட்டும் எல்விஸ் கரீம் பிரபாகர் ஆக நடித்துள்ளார். தமிழில் இப்படிப்பட்ட வேடங்களைத் தவிர்ப்பவர் இந்தியில் மட்டும் தலைகாட்டியது ஏனோ? தெரியவில்லை.
‘பேடியா’ எனும் இந்திப் படத்தில் நடித்த வருண் தவான், அபிஷேக் பானர்ஜியும் கூட, இதன் செகண்ட் கிளைமேக்ஸில் தோன்றியுள்ளனர்; அந்த படத்தைக் காணாத காரணத்தால், அதன் கதைக்கும் முஞ்யாவுக்கும் அவர்கள் முடிச்சு இடுகின்றனர் என்பதை மட்டும் புரிந்துகொள்ள முடிகிறது.
இவர்களோடு ‘இந்திரவிழா’வில் நடித்த ஸ்ருதி மராதேவும் இப்படத்தில் தோன்றியிருக்கிறார். முஞ்யாவின் ‘பாய்ண்ட் ஆப் வியூ’வில் காட்டப்படும் ஷாட்களில் சௌரப் கோஸ்வாமியின் ஒளிப்பதிவு படுவேகத்தை எட்டுகிறது.
கதையின் கிளாசிக் தன்மையைப் புரிந்துகொண்டு, காட்சிகளை அடுக்கியிருக்கிறார் படத்தொகுப்பாளர் மோனிஷா பால்டவா.
திரைக்கதையை மேலும் விறுவிறுப்பாக உணர வைக்கும் வகையில் பின்னணி இசை தந்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜஸ்டின் வர்கீஸ். சச்சின் – ஜிகர் இசையில், ‘எண்ட் கிரெடிட்’டில் ஷர்வாரி ‘கெட்ட ஆட்டம்’ போடும் பாடல் சட்டென்று ஈர்க்கிறது.
இன்னும் டிஐ, விஎஃப்எக்ஸ், சவுண்ட் எபெக்ட்ஸ், காஸ்ட்யூம் டிசைன் உட்படப் பல தொழில்நுட்பங்களைப் பற்றி விலாவாரியாகப் பேசும் அளவுக்கு, அவற்றின் பங்களிப்பு இப்படத்தில் கலந்துள்ளது. சுருக்கமாகச் சொன்னால், இப்படம் சிறப்பான ஆக்கத்தைக் கொண்டுள்ளது.
வெறுமனே பேய்படம் என்று சொல்லி ஒலி வடிவமைப்பையும் விஎஃப்எக்ஸையும் வைத்துக்கொண்டு ஜல்லியடிக்காமல், அக்கதையை நியாயப்படுத்துகிற வகையிலான பின்னணியைக் கொண்டிருக்கும் விதத்தில் வேறுபடுகிறது இந்த ‘முஞ்யா’.
’பீல்குட்’ படங்களில் இருந்து பெறும் அனுபவத்தை ஒரு பேய் படத்தில் இருந்தும் நாம் பெற வேண்டுமானால், அதில் சமகாலச் சமூகம் சார்ந்த விஷயங்கள் பேசப்பட்டிருக்க வேண்டும். காதலுக்காகக் கொலையும் செய்கிற சில மனித மிருகங்கள் குறித்த செய்திகள் அவ்வப்போது வெளியாகும் காலகட்டத்தில், அவர்களை ‘முஞ்யா’ உடன் ஒப்பிடும்படியாக அமைந்துள்ளது இப்படம். அந்த ஒப்பீட்டை உணர்ந்தால், இது வெறும் பேய் படமாக மட்டும் தென்படாது!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: காங். தேர்தல் பணிக்குழு அறிவிப்பு!
விக்கிரவாண்டி: திமுக வேட்பாளர் அறிமுகம்… ஷாக் தந்த கூட்டம்!
தொடர்ந்து குறையும் தங்கம், வெள்ளி விலை – இன்றைய நிலவரம்!
ஹெல்த் டிப்ஸ்: நீங்கள் சரியாகத்தான் உடற்பயிற்சி செய்கிறீர்களா?
2 இந்திய வீரர்களை வீட்டிற்கு கிளம்ப சொன்ன பிசிசிஐ!