மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக நயன்தாரா மற்றும் அவர் நடித்த ‘அன்னபூரணி’ படக்குழுவினர் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நடிகை நயன்தாரா, ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், கார்த்திக்குமார், ரெடின் கிங்ஸ்லி ஆகியோரின் நடிப்பில் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி வெளியான திரைப்படம் ’அன்னப்பூரணி’.
அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாராவின் 75வது திரைப்படமாக வெளிவந்த இத்திரைப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது.
சென்னை கனமழை நேரத்தில் வெளியானது உள்ளிட்ட சில காரணங்களால் வசூலில் பின்னடைவை சந்தித்தது.
எனினும் சமீபத்தில் நெட்பிளிக்ஸ் தளத்தில் அன்னபூரணி திரைப்படம் தமிழ் மட்டுமன்றி தென்னிந்திய மொழிகளோடு இந்தியிலும் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் மும்பையை சேர்ந்த சிவசேனா முன்னாள் தலைவரான ரமேஷ்சோலங்கி என்பவர், அன்னப்பூரணி திரைப்படம் மத உணர்வைப் புண்படுத்துவதாகவும், லவ்ஜிகாத்தை ஆதரிப்பதாகவும் கூறி, மும்பை எல்டி மார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், “பகவான் ஸ்ரீராமரின் அயோத்தி கோவில் குடமுழுக்கு விழா வரும் 22ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், நெட்ஃபிளிக்ஸில் அன்னபூரணி என்ற இந்து எதிர்ப்பு திரைப்படம் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஃபர்ஜான், கதாநாயகியை இறைச்சி சாப்பிட வைப்பதற்காக ராமர் இறைச்சி சாப்பிடுவார் என்று கூறுவதுபோலவும்,
அர்ச்சகர் மகளான கதாநாயகி நமாஸ் செய்வது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் அன்னபூரணி திரைப்படம் வேண்டும் என்றே எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து படத்தில் நடித்த நடிகை நயன்தாரா, நடிகர் ஜெய், தயாரிப்பாளர்கள் ரவீந்திரன், ஜதின் சேத்தி, புனித் கோயங்கா, ஜீ ஸ்டூடியோ தலைமை அதிகாரி ஷரிக் பட்டேல், நெட்பிளிக்ஸ் இந்தியா தலைவர் மோனிகா ஷெர்கில் உள்ளிட்டோர் மீது மும்பை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
”திமிர்பிடித்த பாஜக அரசுக்கு எதிரான நீதியின் வெற்றி”: ராகுல்காந்தி
இன்று நள்ளிரவு முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்!
முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி: திட்டமிட்டபடி ஸ்டிரைக் – போக்குவரத்து தொழிற்சங்கங்கள்!