மலையாள திரையுலகில் ‘தட்டத்தின் மறையத்து’ என்கிற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வினித் சீனிவாசன். இவர் பிரபல நடிகர் சீனிவாசனின் மகன்.
தொடர்ந்து கடந்த பத்து வருடங்களாக டைரக்க்ஷன் மட்டுமல்லாமல் ஒரு நடிகராகவும் வெற்றியை பெற்றுள்ளார் வினீத் சீனிவாசன். பாடலாசிரியர் தயாரிப்பாளர் கதாசிரியர் என பல முகங்கள் இவருக்கு உண்டு
இந்த வருட தொடக்கத்தில் இவர் இயக்கத்தில் வெளியான ஹிருதயம் மலையாள படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று 50 கோடிக்கு மேல் வசூலித்தது.

இந்த நிலையில் நவம்பர் 11 அன்று கதையின் நாயகனாக வினித் சீனிவாசன் நடிப்பில் மலையாளத்தில் வெளியான முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ் என்கிற படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
அபினவ் சுந்தர் நாயக் இயக்கி இருந்த இந்த படத்தில் சுராஜ் வெஞ்சரமூடு, தான்வி ராம், ஜெகதீஷ், சுதி கோப்பா உள்பட பலர் நடித்திருந்தார்கள்.
படத்தின் மூலம் கதாநாயகன் நல்ல விஷயங்களை மக்களுக்கும், ரசிகர்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்பது பொதுவிதி. ஆனால், இந்தப் படத்தில் நாயகனாக வரும் வினித் சீனிவாசன் லட்சியத்தை அடைய வேண்டும் என்றால் தவறுகளும் சரியே என்று கூறுகிற வகையில் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
இது போன்ற திரைக்கதையுள்ள படத்தை மலையாளத்தில் எடுக்கப்பட்டுள்ளதால் எந்த பிரச்னையும் இல்லாமல் வெளியாகியுள்ளது.
இதுவே வேறு மொழிகளில் எடுக்கப்பட்டிருந்தால், பல எதிர்ப்புகளை நிச்சயம் சந்தித்திருக்கும். ஏனென்றால், மலையாள சினிமா ரசிகர்கள் அரசியல் வேறு சினிமா வேறு என பிரித்து பார்க்கும் பழக்கம் உள்ளவர்கள்.
அந்த மாநிலத்தை ஆளும் அரசுகளும் படைப்பு சுதந்திரத்திற்கு எதிராக அரசு அதிகாரத்தை பயன்படுத்துவதில்லை.

அதனால் தான் முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ் படத்தை தயாரித்து வெளியிட முடிந்திருக்கிறது படத்தையும் வெற்றிபெற வைத்திருக்கிறார்கள் அம்மாநில மக்கள்.
நேற்று (18.11.2022) நடந்த படம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய வினீத் ஸ்ரீனிவாசன் “படத்திற்கு மக்களும், மீடியாக்களும் கொடுத்த ஆதரவுக்கு மிக்க நன்றி. இது நாங்களே எதிர்பார்க்காத ஒன்று. இந்த உற்சாகத்தில் தொடர்ந்து நாங்கள் இணைந்து பணியாற்றும் ஆர்வத்தை கொடுத்திருக்கிறது. அதன் அடிப்படையில் முகுந்தன் உன்னி அசோசியேட்சின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளோம். 2024ம் ஆண்டு மக்களின் பார்வைக்கு அதனை கொண்டு வருவோம்”என்றார்.