முபாசா : விமர்சனம்!

Published On:

| By christopher

சாதாரண சிங்கம் வனராஜாவான கதை!

அனிமேஷன் படங்கள் பார்ப்பதில் இருக்கும் முக்கியச் சிறப்பம்சம், இவ்வுலக இன்ப துன்பங்களை விட்டு சில மணி நேரம் விலகியிருப்பதுதான். அதேநேரத்தில், அது போன்ற படங்களில் பெரும்பாலானவை குழந்தைகளைக் குறிவைத்து உருவாக்கப்படுபவை என்பதால் தன்னம்பிக்கையை, தன்மானத்தை, தற்சார்பை அதிகரிக்கும் பல விஷயங்கள் நிறைந்திருக்கும். அந்த எண்ணத்தை அதிகப்படுத்துவதாக அமைந்தது, 2019இல் வெளியான ‘தி லயன் கிங்’. அதன் அடுத்த பாகமாகத் தற்போது வெளியாகியிருக்கிறது ‘முபாசா’.

இந்தப் படம் ‘தி லயன் கிங்’ கதை நிகழும் காலகட்டத்திற்கு முன்பிருந்த கதாபாத்திரங்களைப் பற்றிப் பேசுகிறது. ஜெஃப் நாதன்ஸன் எழுத்தாக்கம் செய்துள்ள இப்படத்தை பேரி ஜென்கின்ஸ் இயக்கியிருக்கிறார்.

தமிழ் பதிப்பில் அர்ஜுன் தாஸ், அசோக்செல்வன், நாசர், சிங்கம்புலி, ரோபோ சங்கர், விடிவி கணேஷ், ஸ்மிருதி உள்ளிட்ட பலர் இரவல் குரல் தந்திருக்கின்றனர். இவர்களது பெயர்கள் இறுதியாக வரும் டைட்டில் கார்டில் இடம்பெற்றிருப்பது இப்படத்தின் இன்னொரு சிறப்பு.

சரி, ‘முபாசா’ படம் தரும் அனுபவம் எப்படிப்பட்டதாக உள்ளது?

வாழ்வைத் தேடி..!

எங்கோ ஒரு வறண்ட மலைப்பிரதேசத்தில் தாய், தந்தையுடன் சிறு சிங்கக்குட்டியான முபாசா வாழ்ந்து வருகிறது. திடீரென ஏற்படும் காட்டாற்று வெள்ளத்தில் அது சிக்கிக்கொள்ள, அதன் தாய் தந்தையரால் காப்பாற்ற முடியாமல் போகிறது.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட முபாசா, ஓரிடத்தில் கண் விழிக்கிறது. அப்போது டாகா எனும் சிங்கக்குட்டி அதனை முதலைகளிடம் இருந்து காக்கிறது.
டாகாவின் தாய் ஈசே முபாசாவின் மீது அன்பு காட்டினாலும், தந்தை ஒபாசிக்கு எரிச்சலும் ஆத்திரமும் முட்டுகிறது.

தனக்குப் பிறகு அந்தப் பிரதேசத்தின் சிங்கராஜாவாக டாகா திகழ வேண்டுமென்பதே ஒபாசியின் ஆசை. அதற்கு இடையூறாக இருக்கக் கூடாது என்று கருதி, முபாசாவை பெண் சிங்கங்களுடன் வளரச் செய்கிறது.

வேட்டையில் சிறந்து விளங்குகிற முபாசா, வளர வளர ஒரு ஆண் சிங்கத்துக்கே உரிய பலத்தைப் பெறுகிறது. டாகாவின் மனதில் பயம் பெருகி நிற்பதால், அது போன்ற நிலையை அடைய முடிவதில்லை.

இந்த நிலையில், பனிக்காட்டில் வாழ்கிற சில சிங்கங்கள் டாகாவைத் தாக்க முயற்சிக்கின்றன. அதனைக் காக்க, அந்த சிங்கங்களில் ஒன்றைக் கொல்கிறது முபாசா.

கொல்லப்பட்ட சிங்கம், வெறி பிடித்த பனிக்காட்டு சிங்கங்களின் தலைவனான ஹிரோஸின் ஒரே ஆண் குட்டியாகும். அதனால், அது கொலைவெறி கொள்கிறது.

ஹிரோஸ் தலைமையில் சிங்கக்கூட்டம் வந்திருப்பதை மோப்பசக்தியால் உணர்ந்து முன்னரே எச்சரிக்கை செய்கிறது முபாசா. அது சொல்வது உண்மை என்று தெரிந்ததும், அங்கிருக்கும் சிங்கங்கள் அயர்ச்சி கொள்கின்றன. காரணம், தங்களது வலிமையால் அக்கூட்டத்தை எதிர்க்க முடியாது என்பதே.

அந்த நிலையில், முபாசாவுடன் டாகாவை அனுப்பி வைக்கிறது ஒபாசி. ஈசே உட்பட மற்ற சிங்கங்கள் எதிர்த்துச் சண்டையிட்ட மரணிக்கத் தயாராகின்றன.
அவற்றைக் கொன்று குவித்துவிட்டு டாகாவையும் முபாசாவையும் ஹிரோஸ் படை துரத்துகிறது. அவற்றிடம் இருந்து தப்பித்து உயிரைக் காத்துக் கொள்வதற்காக, அவை அருவி, காடு, மலை, பனிச்சிகரங்களை கடந்து செல்கின்றன.

அந்த பயணத்தில் ரஃபிகி எனும் குரங்கு, ஜாஸு எனும் இருவாய்ச்சி பறவை, ஷராபி எனும் பெண் சிங்கம் ஆகியன அவற்றுடன் இணைகின்றன. முபாசாவைப் போலவே, தாங்கள் வாழ்க்கை குறித்த தேடலுடன் அவையும் அந்தப் பயணத்தில் இணைகின்றன. ரஃபிகி கனவில் கண்ட நிலத்தை ஆள்வோம் என்ற நம்பிக்கையோடு ஒன்று சேர்ந்து பயணிக்கின்றன.

அதன்பிறகு என்னவானது? துரத்தும் ஹிரோஸ் படையை எதிர்த்து அக்கூட்டத்தால் வெற்றி பெற முடிந்ததா? தாங்கள் நினைத்த கனவு நிலத்தை கண்டடைய முடிந்ததா என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.

’தி லயன் கிங்’ படத்தில் முபாசாவின் குட்டியான சிம்பாவின் கதை சொல்லப்பட்டது. இப்படமோ சிம்பாவின் குட்டியான கியாராவுக்கு முபாசா எவ்வாறு காட்டின் ராஜா ஆனது என்பதனை ரஃபிகி ஒரு கதையாக விவரிப்பதாக அமைந்துள்ளது.

இதுதான் கதை என்று ரசிகர்களுக்குக் தெரிந்தபோதும், அதனை மீறித் திரையில் தவழும் காட்சிகள் அவர்களை ஈர்க்கவைக்கும் வகையில் சிறப்பானதாக அமைய வேண்டும். அதற்கேற்ப விஎஃப்எக்ஸ் இப்படத்தில் சிறப்பாக இருக்கிறது. பல ‘கூஸ்பம்ஸ் மொமண்ட்’களை தருகிறது. அதுவே படத்தின் யுஎஸ்பி.

குதூகலமான காட்சியனுபவம்!

இந்தப் படத்தில் முபாசா பாத்திரத்துக்கு அர்ஜுன் தாஸும், டாகாவுக்கு அசோக்செல்வனும், ரஃபிகி பாத்திரத்துக்கு விடிவி கணேஷும், ஹிரோஸுக்கு நாசரும், ஷராபிக்கு ஸ்மிருதியும் குரல் கொடுத்திருக்கின்றனர்.

இது போக முதல் பாகத்தில் வந்த சிங்கம்புலி, ரோபோ சங்கர் கூட்டணியோடு எம்.ராஜேந்திரன், கீர்த்தி வாசன் உட்படப் பலர் இதில் இரவல் குரல் தந்திருக்கின்றனர்.
இப்படத்தை ஆங்கிலத்தில் பார்ப்பது ஒருவகை அனுபவம் என்றால், தமிழில் காண்பது இன்னொரு வகையான அனுபவத்தைத் தருவதாக அமையும்.

‘வாய் இருந்து என்ன பிரயோஜனம் இவ்வளவு வயசாகியும் வாலிபராகவே இருக்குதே’ என்கிற ரேஞ்சில் ரோபோ சங்கர், சிங்கம்புலி அடிக்கிற ‘கமெண்ட்கள்’ தியேட்டரில் பட்டாசு சிரிப்பைக் கொளுத்திப் போடும் ரகம். ஆனால், ‘தி லயன் கிங்’ ரீமேக் போல இதில் காமெடிக்கு பெரிதாக இடமில்லை.

விடிவி கணேஷ் போன்றோர் ‘இங்க என்ன சொல்லுது’ என்ற வசனத்தை உதிர்க்கிறபோது, நம்மால் சிரிக்காமல் இருக்க முடிவதில்லை.

பெரியோர்களைப் போலவே, குழந்தைகள் குதூகலிப்பதற்கான இடங்களும் இதில் நிறைய இருக்கின்றன.

‘போட்டோரியாலிஸ்டிக்’ அனிமேஷன் முறையில் இப்படம் உருவாக்கப்பட்டிருப்பதால், உண்மையாகவே சிங்கங்கள் வாழ்கிற இடத்திற்கு நேரில் போன அனுபவம் திரையில் கிடைக்கிறது.

ஜேம்ஸ் லேக்ஸ்டனின் ஒளிப்பதிவு, ஜோய் மேக்மில்லனின் படத்தொகுப்பு, டேவ் மெட்ஸ்கர், நிக்கோலஸ் பிரிடெலின் பாடல்கள் மற்றும் லின் மேனுவன் மிராண்டாவின் பின்னணி இசை ஆகியன இப்படத்தில் ரசிகர்களை ஈர்க்கிற அம்சங்களுடன் அமைந்திருக்கின்றன.

மியூசிகல் படமாகவும் இருப்பது குழந்தைகளைக் கவரும் என்றாலும், ‘இது போரடிக்குதே’ என்று சொல்லவும் வாய்ப்பு அதிகம். அதற்கு இடம் தராமல், ஆங்காங்கே திருப்பங்களைத் தந்து சுவாரஸ்யப்படுத்துகிறது ஜெஃப் நாதன்ஸனின் திரைக்கதையாக்கம்.

சிங்கத்தின் முகத்தில் காதல் தோல்விக்கான வருத்தத்தைக் காட்டுவதெல்லாம் சாதாரண விஷயமல்ல. அதனைச் சாதித்திருக்கிறார் இயக்குனர் பேரி ஜென்கின்ஸ்.
வால்ட் டிஸ்னியின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படம், ஒரு புதிய முயற்சியாகும்.

ஏனென்றால், தொண்ணூறுகளில் வந்த ’தி லயன் கிங்’ எனும் முழுமையான அனிமேஷன் படத்தை ‘போட்டோரியாலிஸ்டிக்’ அனிமேஷன் முறையில் ரீமேக் செய்து வெளியிட்டது மிகப்பெரிய மைல்கல் சாதனை. அதிலுள்ள சில பாத்திரங்களைக் கொண்டு முன்கதை அமைத்திருப்பது இன்னுமொரு சாதனை. அதனைத் தாங்கி வந்திருக்கிறது ‘முபாசா’.

படம் முழுக்க காமெடி, ஆக்‌ஷன் நிறைந்த அனிமேஷன் படமாக இது இல்லாவிட்டாலும், குடும்பத்தோடு சேர்ந்து கண்டுகளிக்கத் தக்கதாக இருக்கும். குறிப்பாக, மூன்று முதல் 12 வயதுள்ள குழந்தைகள் ‘முபாசா’வை பார்த்து குதூகலிப்பார்கள்.

ஒரு சாதாரண சிங்கம் வனராஜா ஆன கதையைக் கேட்டு ஊக்கம் பெறுவது தானே அடுத்த தலைமுறையின் வளர்ச்சியை வார்த்தெடுக்கும்..!

உதயசங்கரன் பாடகலிங்கம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஹெல்த் டிப்ஸ்: எடைக்குறைப்புக்கு உதவுமா வெஜிடபிள் ஜூஸ்?

பியூட்டி டிப்ஸ்: ஃபவுண்டேஷன் பல வகை… உங்களுக்கேற்றது எது?

டாப் 10 நியூஸ் : திமுக தலைமை செயற்குழு கூட்டம் முதல் தேசிய கணித தினம் வரை!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல்… கருவாடு பிரியரா நீங்கள்? ஒரு நிமிஷம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share