‘க்ளிஷே’ கதை ஓகே, காமெடி இருக்குதா?!
’என்னடா டைட்டில் டிசைனை பார்த்தா ப்ளைவுட் விளம்பரம் மாதிரி இருக்கு’ என்று கிண்டலடிக்க வைத்தாலும், சட்டென்று உற்றுநோக்க வைத்தது ‘மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங்’. சரி, ஏதாவது ஹாலிவுட் படத்தோட உல்டாவா இருக்கும் என்ற யோசனையை நீளச் செய்தால், ‘அப்படி இருக்க வாய்ப்பில்ல’ என்றது அப்படத்தின் ட்ரெய்லர்.
‘ஜம்ப்கட்ஸ்’ யூடியூப் சேனல் புகழ் ஹரிபாஸ்கர் நாயகனாக நடித்திருக்கிற இப்படத்தில் நாயகியாக ‘பிக்பாஸ்’ புகழ் லாஸ்லியா நடித்திருக்கின்றனர். இளவரசு, ஆர்ஜே ஷரா, ரேயான், ’குட்நைட்’ உமா ராமச்சந்திரன், ஸ்ரீராம் பார்த்தசாரதி, ‘விக்கல்ஸ்’ ஹரி முனியப்பன் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். Mr.Housekeeping Movie Review

அருண் ரவிச்சந்திரன் எழுத்தாக்கம் செய்து இயக்கியிருக்கும் இப்படத்தை ‘ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்’ முரளி தயாரித்திருக்கிறார். ’மெர்சல்’ படத்திற்குப் பிறகு அந்நிறுவனம் தயாரிக்கும் படம் இது என்பதுவே, இதன் மீது எதிர்பார்ப்பினை அதிகப்படுத்தியது.
எதிர்ப்பினைப் பூர்த்தி செய்திருக்கிறதா ‘மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங்’?
கதை என்ன?
கல்லூரியில் படிக்கும்போது ஒரு பெண்ணின் மீது காதல் பித்து கொண்டு திரிகிற ஆண். ஆனால், அப்பெண் அவரை ஏறெடுத்துக் கூடப் பார்ப்பதில்லை. அது மட்டுமல்லாமல், ‘உன் மீது எனக்கு எப்போதும் காதல் வராது’ என்கிறார்.
கல்லூரிக் காலத்திற்குப் பிறகு, தான் வசிக்கும் பகுதியில் ஒரு பெண்ணை விரும்புகிறார். அது, ஒருதலைக் காதல். திடீரென்று அப்பெண்ணுக்குத் திருமணம் என்றவுடன், அவர் மனம் சுக்குநூறாகிறது.
உருப்படியாக வேலை ஏதும் செய்யாமல் இருக்கும் அந்த ஆண், தனது பணத்தேவைக்காக ஓரிடத்தில் வீட்டு வேலை செய்யச் செல்கிறார். அந்த வீட்டில் வசிப்பது, அவர் கல்லூரியில் காதலித்த அதே பெண்.
ஐடி நிறுவனமொன்றில் வேலை. கை நிறைய சம்பளம். வசதி வாய்ப்புகள் மிக்க பெற்றோர் சம்பாதித்த வீடு என்று அந்தப் பெண் இன்னொரு உலகில் வாழ்கிறார். ஆனால், கீழ் நடுத்தர வர்க்க குடும்பத்தைச் சேர்ந்த அந்த ஆண், ‘அப்பெண்ணைக் காதலிக்க இன்னொரு வாய்ப்பு’ என்று அந்த வீட்டில் வேலைக்குச் சேர்கிறார்.

அப்பெண்ணோ, அவரை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. ஒருகட்டத்தில் தான் நினைத்ததற்கு மாறான ஆண் இவர் என்று அப்பெண் உணர்கிறார். அந்த தருணத்திலும் கூட, ‘நீ என் பெஸ்டி’ என்றே சொல்கிறார். ஆனால், அந்த நபரோ அதனைக் காதல் என்று தவறாகப் புரிந்துகொள்கிறார்.
இந்த தவறான புரிதல் ஒருகட்டத்தில் பெரும்பிரச்சனையில் கொண்டுபோய் நிறுத்துகிறது.
வேறொன்றுமில்லை. இவரை பெஸ்டியாக தேர்ந்தெடுத்த கையோடு, அலுவலகத்தில் தனக்கு நெருக்கமான நபர் ஒருவரைக் காதலிக்கத் தொடங்குகிறார் அப்பெண். ‘ஒரு மாதம் நாம டேட்டிங் செய்யலாம்’ என்று இருவரும் முடிவு செய்கின்றனர்.
அந்த ஒரு மாத காலத்தில், அப்பெண்ணை உருகி உருகிக் காதலிக்கத் தொடங்குகிறார் முதல் நபர். அது, அவரை ‘டாக்ஸிக் லவ்வர்’ ஆக அப்பெண் முன்னே நிறுத்துகிறது.
அதன்பிறகு என்னவானது? அந்தப் பெண் யாரை தன் வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுத்தார்? காதலியிடம் வேலையாளாகச் சேர்ந்த அந்த ஆண், தன் மனதுக்குப் பிடித்த பெண்ணைக் காதல் எனும் பெயரில் துன்புறுத்துவது தவறு என்றுணர்ந்தாரா என்று சொல்கிறது ‘மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங்’ படத்தின் மீதி.
2கே கிட்ஸ்களின் காதல் வரையறைகளுக்குள் சிக்கிக் கொள்ளும் 90ஸ் கிட்ஸின் பார்வை என்னவாகும்? அப்படியொரு கதையாகவே அமைந்திருக்கிறது இப்படம்.
நிறையவே க்ளிஷே காட்சிகள், வசனங்கள் இருந்தாலும், சில நொடிகளுக்கு ஒருமுறை சிரிக்க வைத்துக்கொண்டே இருக்கிறது ‘மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங்’. அதுவே இப்படத்தின் யுஎஸ்பி.
தொலைக்காட்சியில் பார்க்கலாம்!
நாயகன் ஹரிபாஸ்கர் யூடியூப் பிரபலம் என்பதால், அவருக்காகவே தியேட்டரில் சில ரசிகர்கள், ரசிகைகள் திரண்டிருந்தார்கள். அவர்களது எதிர்பார்ப்பினைப் பொய்யாக்காமல் சிரிக்க வைத்திருக்கிறார் மனிதர்.

அதேநேரத்தில், ஏற்கனவே யூடியூப் வீடியோக்களில் தந்த ‘எக்ஸ்பிரஷன்களை’யே இதிலும் வெளிப்படுத்தியிருப்பதால், ‘அடுத்த படத்துல என்ன செய்வாரோ’ என்ற கேள்வியையும் எழுப்புகிறார்.
லாஸ்லியா அழகுப்பதுமையாக இதில் வந்து போயிருக்கிறார். திரையில் முரட்டுத்தனம், திமிர்த்தனம் திரிகிற அளவுக்கு, ‘தவறாகப் புரிந்துகொண்ட உணர்வு’ அவர் முகத்தில் மிளிரவில்லை.
இளவரசு, உமா ராமச்சந்திரன் ஜோடி இதில் நாயகனின் பெற்றோராக வந்து கலக்கியிருக்கிறது.
நாயகியின் பெற்றோரில் ஸ்ரீராம் மட்டுமே அதிக காட்சிகளில் தோன்றியிருக்கிறார்.
இன்னொரு நாயகன் போன்று காட்டப்பட்டிருக்கும் ரேயான், இரண்டாம் பாதியில் நிறைய காட்சிகளில் வந்து போயிருக்கிறார். ஆனாலும் பெரிய முக்கியத்துவம் தரப்படவில்லை.
பெரும்பாலான காமெடி ‘பஞ்ச்’களை ஹரிபாஸ்கரே குத்தகைக்கு எடுத்திருக்கிறார். மீதமுள்ள இடத்தில் ஆர்ஜே ஷரா, விக்கல்ஸ் ஹரி முனியப்பன் கூட்டணியின் காமெடி வசனங்கள் சில இடங்களில் வயிறு குலுங்கிச் சிரிக்க வைக்கிறது. ’ஹலோ’ கந்தசாமி வேறு இரண்டொரு காட்சிகளில் சிரிப்பூட்டியிருக்கிறார்.

தாமுவின் கலை வடிவமைப்பு, பெரும்பாலான காட்சிகளில் அழகழகான பிரேமிங்கை பிடிக்க வகை செய்திருக்கிறது.
‘கமர்ஷியல் படம்னா நடிச்சிருக்கறவங்க முகம் திரையில பளிச்சுன்னு தெரியணும்’ என்று சொல்வதற்கேற்ப உள்ளது குலோத்துங்கவர்மனின் ஒளிப்பதிவு. ராமசுப்புவின் படத்தொகுப்பு, குழப்பமின்றி கதையை நாம் உணரச் செய்திருக்கிறது.
’பிரேமம்’ பட பாணியில் ஓம் சிவபிரகாஷ் இதில் ஒரு சண்டைக்காட்சியை வடிவமைத்திருக்கிறார். ஓஷோ வெங்கட்டின் இசையில் பாடல்கள் முதன்முறையாகக் கேட்கும்போதே பிடித்துப் போகின்றன. ஆனாலும், அவை ஏற்கனவே கேட்ட உணர்வை ஏற்படுத்துகின்றன.
தியேட்டரில் ரசிகர்கள் துள்ளி ஆடக்கூடிய இடங்களைக் கணித்து அதற்கேற்ற பின்னணி இசையைத் தந்திருக்கிறார். இடைவேளைக்கு முன்பான காட்சி அதற்கொரு உதாரணம். அதேநேரத்தில், அந்த இசை இன்னும் சில காலம் கழித்து சிலாகிக்கும்படியாகவோ, புதுமையானதாகவோ தெரிய வாய்ப்பில்லை என்பதையும் சொல்லியாக வேண்டும்.
இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம், இதன் திரைக்கதை.
தெரிந்த கதை, பழகிய காட்சிகள் என்றாலும், திரைக்கதையில் சின்னச்சின்னதாகச் சில புதிய விஷயங்களைப் புகுத்தியிருக்கிறார் இயக்குனர் அருண் ரவிச்சந்திரன். ‘க்ளிஷே’ என்று தெரிந்தபிறகும் நாம் சிரிப்பதுதான் இப்படத்தின் வெற்றி.
சீரியசான காட்சிகளையும் சிரிக்க வைப்பதற்கு ஏற்ப வளைத்திருக்கிறது இதன் திரைக்கதை. அதையும் மீறி, இரண்டாம் பாதியில் ‘நாயகன் எப்போ உண்மைய தெரிஞ்சுக்கப் போறார்’ என்கிற பதைபதைப்பு நம்மைத் தொற்றுகிறது.
அதனை இன்னும் அடிக்கோடிட்டுக் காண்பித்து, தியேட்டரில் படம் பார்க்கும் ரசிகர்களை இன்னும் கொஞ்சம் கூடுதலாகப் பதைபதைக்க வைத்திருந்தால் வேறொரு உயரத்தை இப்படம் தொட்டிருக்கும்.
நாயகன் ஹரிபாஸ்கரின் தோற்றம் கொஞ்சம் முதிர்ந்தாற் போலிருக்கிறது. கொஞ்சம் காஸ்ட்லியான யூடியூப் வீடியோ பார்ப்பது போன்ற தொனி, இப்படத்தில் நிறைந்து கிடக்கிறது. அனைத்துக்கும் மேலே இப்படத்தின் உள்ளடக்கம் ‘குறும்படம் பண்ணத்தான் கரெக்டா இருக்கும்’ என்று விமர்சிக்கும் வகையில் இருக்கிறது.
லாஜிக் மீறல்களைக் கணக்கெடுத்தாலும், பல கேள்விகள் வரிசை கட்டி நிற்கும். முக்கியமாக, ‘வெண்ணிற ஆடை மூர்த்தி’ பாணியில் சில இடங்களில் வரும் இரட்டை அர்த்த வசனங்கள் தேவையா என்ற கேள்வி அவற்றில் முக்கியமானது.

அவற்றுக்கு மத்தியில், ‘என்ன இருந்தா என்னய்யா, சிரிச்சீங்கள்ல’ என்கிற சத்தத்தைப் படம் நெடுக வாரியிறைத்திருக்கிறது ‘மி.ஹ.’ படக்குழு. அதற்கு ‘ஆம்’ என்றே பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.
’அப்படியொரு சிரிப்பை மிஸ் பண்ண வேண்டாமே’ என்பவர்கள் திரையரங்குகளுக்குச் சென்று ‘மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங்’கை பார்க்கலாம்.
ஓடிடியில் இப்படம் எப்படிப்பட்ட வெற்றியைப் பெறும் என்று தெரியாது. ஆனால், அடிக்கொரு தடவை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவதற்கு ஏற்ற உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கிறது இப்படம்.
’அப்படியொரு ரசனை எனக்கும் உண்டு’ என்பவர்கள் தொலைக்காட்சியில் இதனை சாவகாசமாகக் கண்டு ரசிக்கலாம்! Mr.Housekeeping Movie Review