விமர்சனத்தைச் சந்தித்த அமீர்கான் படம்: வசூலை குவிக்குமா?

சினிமா

அமீர்கான் நடித்திருக்கும் ’லால்சிங் சத்தா’ திரைப்படம், படம் வெளியான முதல் நாளிலேயே 20 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது.

இந்தி சினிமாவில் நம்ம ஊரு கமல்ஹாசன் போன்று நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப தீவிரமான முயற்சிகளை மேற்கொள்பவர் அமீர்கான்.

இவர், எந்த ஒரு படத்தையும் அவசரகதியில் நடித்து முடிக்ககூடியவர் அல்ல. கமல்ஹாசன் போன்று பொதுவெளியில் அரசியல் சார்ந்து விமர்சனங்களைக் கூறத் தயங்காதவர் அமீர்கான்.

இந்திய சினிமாவில் வணிகரீதியாக பெரும்பகுதி பாக்ஸ்ஆபீஸ் வசூலை வாரிக் கொடுக்கும் நடிகர்கள் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

இந்திய சினிமாவில் மிகச் சிறந்த படைப்புகளைக் கொடுப்பது மலையாள சினிமா. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் சம பலத்தில் வாழும் கேரள மாநிலத்தில், மத மோதல்கள் அவ்வப்போது இருந்தாலும் சினிமாவை, மதங்களை கடந்து ரசிக்கின்றனர்.

அதனால்தான் ஆளும் அரசியல்வாதிகளையும், மதங்களின் பெயரால் நடக்கும் மோசடிகளை, மூடநம்பிக்கைகளை விமர்சித்து திரைப்படம் தயாரிக்க முடிகிறது. இதில் வெற்றி பெறவும் வைக்கிறார்கள்.

மலையாள சினிமாவில் 80% வியாபாரம் இஸ்லாமிய நடிகர்கள் தயாரிக்கும், நடிக்கும் படங்கள் மூலம் நடைபெறுகிறது. அதேநிலைதான் இந்தி திரையுலகிலும் உள்ளது. ஆனால் கேரளாவில் இருக்கும் சகிப்புத்தன்மை இங்கு இல்லை.

“இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதால் குழந்தைகளின் பாதுகாப்புக் கருதி நாட்டைவிட்டே வெளியேறிவிடலாம் என்று தனது மனைவி அறிவுறுத்தினார்” என கடந்த 2015ம் ஆண்டு கலந்துரையாடல் ஒன்றில் நடிகர் அமீர்கான்பேசியிருந்தார்.

alt="movie reviews amir khans laal singh chaddha"

இதனை விமர்சிக்கலாம், எதிர்க்கலாம். ஆனால் அவர் நடிக்கும் திரைப்படங்களை பாதிக்கும் வகையில் #Boycott லால் சிங் சத்தா என்று ட்விட்டர் பதிவுகள் மூலம் ட்ரெண்ட் செய்யப்பட்டது. சுமார் 180 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட படம் லால்சிங் சத்தா. இப்படம், தயாரிக்கப்பட்டு முடிந்த பின்னும் கொரோனா பொது முடக்கம் காரணமாக இரண்டு வருடங்களாக முடங்கி இருந்தது.

இப்படம், ஆகஸ்ட் 11 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு அதற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளை நடத்த நாடு முழுவதும் பயணம் செய்தார் அமீர்கான். மீண்டும் அதே ஹேஷ்டேக்கை பெரும்பாலோனோர் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அதாவது, அமீர்கான் திரையுலக வாழ்க்கையில், ‘லால்சிங் சத்தா’ படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமையும் என சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டு வந்தது.

இதனால் டெல்லியில் பத்தியாளர்களைச் சந்தித்த நடிகர் அமீர்கான், “கடந்த காலங்களில் எனது பேச்சு, பேட்டிகள் மூலம் யாரையேனும் சங்கடப்படுத்தி இருந்தால் அதற்காக வருந்துகிறேன். மன்னிப்பு கோருகிறேன். அதற்காக, ’லால் சிங் சத்தா’ படத்தை புறக்கணிக்கக் கூறி வெளியிடும் பதிவுகளை தவிர்க்க வேண்டுகிறேன்” எனவும் கூறியிருந்தார்.

இந்த வருடம் இதுவரை வெளியான 30க்கும் மேற்பட்ட முக்கியமான இந்திப் படங்கள் வணிகரீதியாக தோல்வியடைந்திருக்கிறது. இந்தி சினிமா மீண்டு எழுமா என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ’லால்சிங் சத்தா’ திரைப்படம் நேற்று (ஆகஸ்ட் 11) வெளியானது. இதைத் தொடர்ந்து மீண்டும் படத்திற்கு எதிராக #Flop ஹேஷ்டேக்கை பகிர்ந்து படம் பற்றிய கிண்டல் கேலியுமான கார்ட்டூன்கள் வலைத்தளங்களில் பதிவாக தொடங்கியது.

அமீர்கானின், ’லால் சிங் சத்தா’வை புறக்கணிப்பதாக கூறுவது ஜனநாயக மற்றும் சர்வாதிகார சித்தாந்தத்தை முன்வைப்பதுபோல் இருப்பதாக காங்கிரஸ் தலைவர் திக்விஜய்சிங் முதல்நபராக கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், ‘இதற்குப் பின்னால் இருப்பது யார்? மோடி ஷாட்ரோல் ஆர்மியை தவிர, யார் அவர்கள்? ஜனநாயகமற்றவர்கள் எதேச்சதிகாரம் மற்றும் சர்வாதிகாரம் கொண்டவர்கள் ரோபோவைப்போல வேலை செய்கிறார்கள்’ என ட்விட் செய்துள்ளார்.

பல்வேறு திரையுலக பிரச்சினைகளில் கருத்து கூறும் திரைக் கலைஞர்கள் மௌனம் சாதித்து வருகின்றனர். படம் வெளியான பின்பு மண்ணுக்கேற்ற மாற்றங்களுடன் லால்சிங் சத்தா திரைப்படத்தை அமீர்கான் தயாரித்து நடித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. பிரதான மொழியில் இருந்து மறு ஆக்கம் செய்யப்படும் திரைப்படங்கள் மண்ணுக்கேற்ற வகையில் மாற்றங்கள் செய்யும்போது கைகூடாத திரைமொழியால் அச்சுறுத்தக்கூடிய படங்களாகவே பெரும்பாலும் இருக்கும்.

alt="movie reviews amir khans laal singh chaddha"

ஆனால், இந்தப் படம் ரீமேக் எனக் கூறப்பட்டாலும், தேவையான இடங்களில் நிலப்பரப்புக்கு தகுந்தாற்போல சில காட்சிகளும், திரைக்கதையும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. எல்லாவற்றையும் தாண்டி, ஹாலிவுட்டிலிருந்து மிதந்துவந்த அந்த வெண்சிறகு அமீர்கானிடம் வந்து சேர்ந்திருக்கிறது. படத்தின் உயிரே, அதன் நாயக கதாபாத்திரம்தான்.

அதனை தனது அப்பாவித்தனமான முகபாவனை, குழந்தைத்தனமான உடல்மொழி, வெள்ளந்திச் சிரிப்பு என ‘லால் சிங் சத்தா’ கதாபாத்திரத்தை மெனக்கெடலுடன் மெருகேற்றியிருக்கிறார் அமீர்கான்.

குறிப்பாக அந்தந்த காலக்கட்டங்களுக்கு தகுந்தாற்போல உடல் எடையை குறைத்தும், கூட்டியும் படத்திற்காக அவர் செலுத்தியிருக்கும் உழைப்பு பாராட்டவைக்கிறது. கரீனா கபூர், மோனா சிங் இருவரின் நடிப்பும் காட்சிகளுக்கான நேர்த்தியைக் கூட்டுகின்றன. நாக சைதன்யா சிறிது நேரமே வந்தாலும், நடிப்புக்காக கூடுதல் உழைப்பைக் கொடுத்துச் சென்றிருக்கிறார்.

ஷாருக்கானின் சிறப்புத் தோற்றம் தியேட்டரில் அப்லாஸ் அள்ளுகிறது என விமர்சனங்கள் வரத் தொடங்கியிருக்கிறது. அதேபோன்று இந்திய மண்ணுக்கேற்றபடி கதை மாறுகிறபோது, இந்திய அரசியலையும் வழக்கம்போல அமீர்கான் விடவில்லை. ’ஆபரேஷன் புளு ஸ்டார்’, ‘எமர்ஜென்சி’, ‘கார்கில் போர்’, ‘ரத யாத்திரை’ போன்ற வரலாற்றுச் சம்பவங்களை, படத்தில் கவனமாக பதிவு செய்திருக்கிறார்.

குறிப்பாக மத மோதல்களையும், வன்முறைகளையும், உயிரைக் கொல்லும் வைரஸுடன் ஒப்பிட்டு எழுதப்பட்ட வசனம் கவனம் ஈர்ப்பதாக உள்ளது என பாராட்டப்பட்டு வருகிறது. இதனால் படத்திற்கு எதிரான பிரச்சாரங்கள் நீர்த்துப் போகும். முதல் நாள் சுமார் 20 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்த படம் ,வரும் நாட்களில் அதிகரிக்க கூடும் என்கின்றனர் திரைவிமர்சகர்கள்.
இராமானுஜம்

‘அழகு ஆர்த்தி’ : பாராட்டிய விக்னேஷ் சிவன்

+1
0
+1
1
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *