விமர்சனம்: ’ஃபைட் கிளப்’!

Published On:

| By Kavi

நாம் ஏற்கனவே பார்த்து, ரசித்துக் கொண்டாடிய அதே கதையை வைத்து மீண்டும் ஒரு படத்தை எடுக்க நினைப்பது, அதுவும் தனது முதல் படத்தின் கதையை இப்படி அமைப்பது, அந்த இயக்குநர் கத்தி மேல் நடப்பதை போன்ற ஒரு செயல் தான்.

ஆனால், சிறப்பான மேக்கிங் மூலமும், புதுமையான கதை சொல்லல் விதத்தின் மூலமும் அதை சுவாரஸ்யமாகச் செய்யலாம் என்பதற்கு ஏற்கனவே பல படங்கள் எடுத்துக்காட்டாக உள்ளன.

அந்த வகையில், ’ஃபைட் கிளப்’ படத்தின் மூலம் அதை ஓரளவு சிறப்பாகவே கொடுக்க முயற்சித்துள்ளார் அறிமுக இயக்குநர் அபாஸ் ரஹ்மத்.

இந்தப் படத்தின் புதுமையான திரைக்கதையும், மேக்கிங் மீதுள்ளான நம்பிக்கையே இயக்குநர் லோகேஷ் கனகராஜிற்கு இந்தப் படத்தை தயாரிக்க காரணமாக இருந்திருக்கக் கூடும்.

வடசென்னையைச் சேர்ந்த ஒரு கோபக்கார இளைஞனின் வாழ்க்கையை, அவன் வாழ்கின்ற சூழலும், சந்திக்கின்ற மனிதர்களும் எப்படியெல்லாம் மாற்றுகின்றனர் என்பதே ‘ஃபைட் கிளப் படத்தின் சுருக்கமான கதை.

‘ஆரண்ய காண்டத்தை நினைவுப்படுத்தும் காட்சிகள்!

 

இன்னோர் பார்வையில் அதிகாரம், போதை, தேவையில்லாத வீராப்பு போன்றவைகள் சூழ்ந்த ஒரு உலகிற்குள் நடக்கும் ஒரு சுழற்சி முறை சண்டையை இந்த ‘ஃபைட் கிளப்’ நமக்கு கடத்துகிறது.

இந்தக் கதையின் களமாக வடசென்னையை குறிப்பிட்டிருந்தாலும், இந்தப் படத்தில் காண்பிக்கப்படும் பல இடங்கள் வடசென்னை போல் இல்லை என்பதே உண்மை. மேலும், அப்படி குறிப்பிடுவது மேலும் ஒரு முறை வடசென்னை என்றாலே இப்படித் தான் என முத்திரை குத்தும் செயலாகவே உள்ளது.

ஆனால், படத்தின் பல இடங்களின் ஒளிப்பதிவு, அந்த இடங்களை காட்சிப்படுத்தும் முறை என அனைத்தும் இயக்குநர் தியாகராஜ குமார ராஜாவின் ‘ஆரண்ய காண்டம்’ படத்தை நியாபகப்படுத்துகிறது. அது போல் இதுவும் இயக்குநரின் தனி உலகில் நடப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கக் கூடும்.

படத்தின் ஆரம்பமே ஒரு நீளமான ஸ்டடி ஷாட்டில் தொடங்குகிறது. ஒரு சில கதாபாத்திரங்கள் தூரத்தில் இருந்து நேரே நம்மை நோக்கி அருகில் வருகின்றனர். அங்கிருந்து கட் செய்தால் கோவிந்த் வசந்தாவின் அட்டகாசமான ரீமிக்ஸ் செய்யப்பட்ட பீதோவனின் இசையில் படம் தொடங்கும் போதே நம்மை அதற்குள் இழுத்துச் செல்கிறது. இது போன்ற சிறப்பான காட்சி வடிவமைப்பு இந்தப் படத்தில் ஆங்காங்கே இருந்தது.

நடிகர் விஜய்குமார் நமது பக்கத்து வீட்டு பையன் போல் காட்சியளிக்கிறார். அவர் பேசும் சென்னை தமிழ் மிக இயல்பாக உள்ளது. மேலும், பல மாஸ் காட்சிகளில் சிக்ஸ் பேக் உடம்புடன் ஒரு மாஸ் ஹீரோவைப் போல் திரையில் காட்சியளிக்கிறார்.

அவரைத் தவிர்த்து கிருபாகரன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் சங்கரதாஸ், நாம் நமது தெருவில் பார்க்கும் பல கவுன்சிலர்கள், எம்.எல் .ஏ -க்களை நியாபகப்படுத்துகிறார். ஊரின் பெரிய மனுஷனாக பெஞ்சமின் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் கார்த்திகேயன் சந்தானம் சிறிது நேரம் திரையில் தோன்றினாலும் அவரது தாக்கம் படம் முழுக்க உள்ளது.

ஆனால், இவர்கள் அனைவரையும் விட நம் கவனத்தை அதிகம் ஈர்ப்பவர் நடிகர் அவினாஷ் ரகுதேவன். தந்திரமாக தனக்குத் தேவையான அனைத்து நகர்வுகளையும் நகர்த்தும் ஒரு சகுனி கதாபாத்திரத்திற்கான அனைத்து அம்சங்களையும் வெளிப்படுத்தி மிரட்டியிருக்கிறார்.

இந்தக் கதாபாத்திரம், இந்தப் படத்தில் எழுதப்பட்ட மிகச் சிறந்த கதாபாத்திரம் என்றே சொல்லலாம். மற்றபடி, கோலிவுட்டின் சம்பிரதாய ஹீரோயின், ஹீரோவின் நண்பர்கள் என பல கதாபாத்திரங்கள் சரியாக எழுதப்படவில்லை. கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக உள்ளது. குறிப்பாக இடைவேளை காட்சியில் வரும் ‘ராவண மவனே’ பாடல் அந்த காட்சிக்கு மேலும் வலு சேர்க்கிறது.

படம் சொல்வது என்ன?

ஆரம்பத்தில் வந்த நீளமான ஷாட்டில் தொடங்கி, படத்தின் பல இடங்களில் ஒளிப்பதிவாளர் லியோன் பிரிட்டோவின் ஒளிப்பதிவு நம் கவனத்தை ஈர்க்கிறது. ஓரிரண்டு ஸ்டடி ஷாட்ஸ், இரண்டாம் பாதியில் வரும் காவல் நிலையக் காட்சி படமாக்கப்பட்ட விதம், கலங்கரை விளக்கத்தின் வெளிச்சத்தை வைத்து எடுக்கப்பட்ட ஒரு காட்சி எனப் பல காட்சிகளில் நம்மை ரசிக்கவைப்பது லியோன் பிரிட்டோவின் கேமராவே.

அப்படிப்பட்ட வித்தியாசமான காட்சி வடிவமைப்பிற்கு இயக்குநர் அபாஸ் ரஹ்மத்தின் எழுத்தும் உதவி இருக்கிறது என்பதே தெரிகிறது. ஆரம்பத்தில் வரும் ஒரு கொலை காட்சி, சில பல மாண்டேஜ்கள் மற்றும் குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சிகளில் கிருபாகரனின் எடிட்டிங் மிக சிறப்பாக உள்ளது.

இந்தப் படத்தின் இது போன்ற கூறுகளே பார்வையாளர்களுக்கு புதுமையான ஒரு அனுபவத்தைத் தருகிறது. நமக்கு பழக்கப்பட்ட கதையாயினும் அதை முன்னே பின்னே மாற்றி மாற்றி ‘நான் லீனியர்’ முறையில் கூறியது படத்தை மேலும் சுவாரஸ்யம் ஆக்குகிறது.

ஒரு இடத்தின் காட் ஃபாதர் போல் ஒருவர் இருக்கிறார். அவரின் மரணத்தால் அந்த இடத்தில் ஏற்படும் சண்டைகளுக்குள் கதாநாயகன் மாட்டிக்கொள்ளும் விதம் நமக்கு வடசென்னையை நியாபகப்படுத்தியிருந்தாலும் அது ஒரு பெரிய உறுத்தலாகத் தெரியவில்லை.

ஆனால், நாயகனின் கதாபாத்திர வடிவமைப்பு கொஞ்சம் சிறப்பாக எழுதப்பட்டிருந்தால் கிளைமாக்ஸ் காட்சியில் அவர் வந்து நிற்கும் இடத்தை பார்க்கும் போது நம்மால் அதை மேலும் ரசித்திருக்க முடியும். மொத்தத்தில் இந்த ’ஃபைட் கிளப்’-இல் சண்டை போடுபவர்கள் சாகலாம், ஆனால் அந்த சண்டை சாகாது என்பது கடத்தப்படுகிறது.

அதற்கான மேக்கிங்கில் இருந்த தெளிவு, திரைக்கதையிலும் இருந்திருந்தால் இந்த ‘கிளப்’-இல் நாமும் சேர்ந்து ரசித்துக் கொண்டாடப் பல இடங்கள் இருந்திருக்கும் என்பதே திண்ணம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– ஷா

மகளிர் உரிமைத் தொகை : விண்ணப்பிக்காதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு!

குவைத் மன்னர் ஷேக் நவாப் காலமானார்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share