இன்று தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவர் என்ற அந்தஸ்தைப் பெற்றிருப்பவர் சூர்யா. வெற்றிகளுக்கான வரைகோடு ஏற்றத்தையும் இறக்கத்தையும் சந்தித்தாலும், அவரது முயற்சிகள் எதுவுமே நிராகரிக்கத் தக்கதாக இருந்ததில்லை. இதோ, இப்போதும் அப்படியொரு கவனத்தையே ‘கங்குவா’ படம் உருவாக்கி வருகிறது.
அப்படிப்பட்ட சூர்யாவுக்கு நட்சத்திர அந்தஸ்து தந்து, தமிழின் தவிர்க்கமுடியாத நாயகனாக மாற்றிய பெருமை ‘காக்க.. காக்க’ படத்திற்கு உண்டு. அந்தப் படம் வெளியாகி, இன்றோடு 20 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன.
நட்சத்திர அந்தஸ்து!
முதல் பட ஆக்கத்தின்போது, சிவாஜி கணேசனையே ‘இவரெல்லாம் ஒரு நடிகரா’ என்று விமர்சித்திருக்கிறது இந்த உலகம். ஒருவரைப் புடம் போடுவதற்கு அது போன்ற அவமானங்களே ஆகச்சிறந்த தகுதிகள்; எந்தவொரு துறையிலும் சாதனையாளர்கள் அவற்றைக் கடந்தே வந்திருக்கின்றனர். சூர்யாவும் அப்படிப்பட்ட நிலைகளைத் தாண்டியவர் தான்.
1997ல் வெளியான ‘நேருக்கு நேர்’ படத்தில் அறிமுகமாகி, அதற்கடுத்த ஆண்டில் காதலே நிம்மதி, சந்திப்போமா படங்களில் தோன்றி, அடுத்து என்ன செய்வது என்ற பதைபதைப்போடு பெரியண்ணா, பூவெல்லாம் கேட்டுப்பார் படங்களில் நடித்து முடித்தார். 2000ஆவது ஆண்டில் வெளியான ’உயிரிலே கலந்தது’ படப்பிடிப்பில், ஒரேநேரத்தில் ரகுவரனையும் ஜோதிகாவையும் தனது வழிகாட்டிகளாக உணர்ந்தார். ஒருவர் தட்டிக்கொடுத்து ஆதரித்தார் என்றால், இன்னொருவர் தடாலடியாகப் பேசி சூர்யாவைத் தூங்கவிடாமல் செய்தார். அதன் தொடர்ச்சியாக ‘ப்ரெண்ட்ஸ்’, ‘நந்தா’, ‘உன்னை நினைத்து’, ‘மௌனம் பேசியதே’ என்று வெற்றிப்படங்களில் சூர்யா இடம்பிடித்தார். அவரது திரைப்பயணத்தை மடைமாற்றியதில் இயக்குனர் பாலாவுக்குப் பெரும்பங்குண்டு. அதுபோலவே, அதனை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் சென்றவர் இயக்குனர் கௌதம் மேனன்.
மாதவன், அஜித், விக்ரம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நிராகரித்த ‘காக்க.. காக்க’ கதையில் அதுவரை தனித்துவமான வெற்றிகளைத் தராத சூர்யாவைப் பொருத்திப் பார்த்தது மிகப்பெரிய விஷயம். அதனைத் தயாரிக்க முன்வந்தார் கலைப்புலி எஸ்.தாணு. திரைத்துறையில் வெற்றிக்கணக்குகள் மட்டுமே செல்லுபடியாகும் என்ற சூத்திரம் அறிந்தவர்களுக்கு, அதுவொரு விஷப் பரீட்சை; ஆனால், புதிய திசையில் அடியெடுத்து வைப்போம் என்று நம்புபவர்களுக்கு அப்படம் ஒரு முன்னுதாரணம். படத்தின் பட்ஜெட் மட்டுமல்லாமல், அதன் திரைக்கதை ட்ரீட்மெண்ட், நடிப்பு, பாடல்கள், கிளைமேக்ஸ் என்று ஒட்டுமொத்த உள்ளடக்கமும் அதுவரை சூர்யா எதிர்கொண்ட திரைப்பட அனுபவங்களில் இருந்து மாறுபட்டதாக இருந்தது. அது ரசிகர்களுக்கும் பிடித்துப் போனது. அந்த வகையில், சூர்யாவுக்கு நட்சத்திர அங்கீகாரம் பெற்றுத் தந்த படமென்று ‘காக்க.. காக்க’வைத் தாராளமாகச் சொல்லலாம்!
கெட்டப் மாற்றம்!
இந்த படத்தில் சூர்யா நடித்த அன்புச்செல்வன் எனும் பாத்திரம், அடுத்த தலைமுறை நடிகர்கள் பலரைப் பாதித்தது. கமர்ஷியல் படம் என்றாலும் கூட, வழக்கமான மசாலாதனங்களில் இருந்து விலகிய கதைகளைத் தேர்ந்தெடுக்கலாம் என்ற வழிகாட்டுதலைத் தந்தது. ’காக்க.. காக்க’ படத்திற்காக விஜயகுமார், சைலேந்திரபாபு போன்ற போலீஸ் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார் சூர்யா. உண்மையான காவல் அதிகாரியைப் பிரதியெடுப்பது கடினம் என்றபோதும், யதார்த்தத்திற்கு நெருக்கமாக இருக்கும் வகையில் திரையில் தோன்றினார்.
இலங்கையின் நுவரேலியாவில் அமைக்கப்பட்ட வீடு செட்டில் இருந்து நீரில் விழும் இடைவேளைக் காட்சியில், அவர் ‘டூப்’ கூட பயன்படுத்தவில்லை. காவல் துறையினர் போன்ற தலைமுடி, உடையணியும் பாங்கு, உடல்மொழி, பேச்சு என்று தனது தோற்றத்தையே மாற்றிக்கொண்டார். வசன உச்சரிப்பு முதல் கேமிராவை பார்க்காமல் நடிப்பது வரை பல விஷயங்களில் நடிப்பில் தேர்ச்சி பெற்றவராகத் திரையில் தெரிந்தார். இந்த முன்னெடுப்புகள் தான் சூர்யாவின் அடுத்தடுத்த வெற்றிகளுக்கு அச்சாரம் இட்டன.
’காக்கா.. காக்க’ படத்திற்குப் பிறகு பிதாமகன், பேரழகன், ஆயுத எழுத்து, மாயாவி, கஜினி, ஆறு, சில்லுன்னு ஒரு காதல் என்று வெவ்வேறு படங்களில் நடித்தார் சூர்யா. ஒவ்வொன்றிலும் அவரது கெட்டப் வேறுபட்டிருப்பதைக் காண முடியும். சிறுவயதில் ‘சத்யா’வைப் பார்த்துவிட்டு, அதில் நாயகனாக வந்த கமல்ஹாசன் போன்று தன் கெட்டப்பை மாற்றிக்கொண்டவர் சூர்யா. ‘காக்க.. காக்க’ படத்திற்குப் பிறகு, அவரைப் பின்பற்றத் தொடங்கினர் பல ரசிகர்கள். இந்த மாற்றம் கற்பனைக்கு அப்பாற்பட்டது. அந்த வகையில், ஒரு ரசிகன் நட்சத்திரமாக மாறிய படமென்றும் இதனைச் சொல்லலாம்.
சூர்யா – ஜோதிகா எனும் ரீல் ஜோடியை ‘ரியல் லைஃப்’ ஜோடியாக மாற்றிய பெருமையும் இதற்கு உண்டு. இதில் நடித்தபிறகே, தனது திரை வாழ்க்கை சார்ந்த பல விஷயங்களில் சூர்யா மாற்றங்களைச் செயல்படுத்தினார்.
இன்று, குடும்ப வாழ்க்கை தாண்டி 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத் தயாரிப்புகள், சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் உட்படப் பலவற்றைத் தீர்மானித்ததில் ஜோதிகாவுக்குப் பங்குண்டு. அதேபோல, ‘36 வயதினிலே’ மூலமாக மீண்டும் ஜோதிகா நடிக்க வந்ததில் சூர்யாவுக்குப் பங்குண்டு. அந்த வகையில், ஒரு நட்சத்திர தம்பதிகளாகவும் தனிக்கவனம் பெற்றவர்களாக இருவரும் விளங்குகின்றனர்.
நல்லதொரு காட்சியனுபவம்!
’காக்கா.. காக்க’வில் ஹாரிஸ் ஜெயராஜ் தந்த பாடல்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களுக்குக் கற்கண்டாய் இனித்தன; ஆனாலும், திரைக்கதையில் நகைச்சுவைக்கென்று தனியிடம் கிடையாது. திரையில் காதல் நிறைந்து வழியும்; ஆனால், வழக்கமான காதல் காட்சிகள் இதில் இல்லை. அதேநேரத்தில் ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் கலை வடிவமைப்பும் இணைந்து வேறொரு காட்சியனுபவத்தைப் பார்வையாளர்களுக்குத் தந்தன.
’நாம எங்க போனாலும் அந்த ஊரை ஆளனும்’ என்று வில்லனாக நடித்த ஜீவனுக்குக் குரல் தந்து, பாரதிராஜா விட்டுச் சென்ற ஒரு பழக்கத்தை மீண்டும் வழக்கத்திற்குக் கொண்டு வந்தார் கௌதம் மேனன். மணிரத்னம் படங்கள் போன்று இதிலும் வசனங்கள் குறைவான அளவில் இருந்தன; அவற்றில் ஆங்கிலக் கலவையும் உண்டு. நாட்பட, அதையே தனது ஸ்டைல் ஆக்கிக் கொண்டார் கௌதம் மேனன். அதனாலேயே, அவர் நகர்ப்புறவாசிகளுக்கான திரைப்படங்களை எடுப்பவர் என்ற கருத்தும் உயிர்ப்போடு இருந்து வருகிறது.
இதில் முக்கியமான வேடமொன்றை ஏற்ற டேனியல் பாலாஜி, கௌதமின் மூன்றாவது படமான ‘வேட்டையாடு விளையாடு’வில் வில்லனாக நடித்துப் பெருங்கவனத்தைப் பெற்றார். இந்த படத்தில், அதுவரை சமகாலத் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்தவர்களை கௌதம் மேனன் பயன்படுத்தவில்லை. இப்படி முழுக்கவே புதிய அல்லது பிரபலமில்லாத முகங்களைக் காட்டும் வழக்கம் திரைத்துறையில் வெகு அரிதாகவே நிகழும். இந்த படம் வெற்றி பெற்றதனால், இது தொடர்புடைய அனைவருமே அடுத்தடுத்த வாய்ப்புகளைப் பெற்றனர். அந்த வகையில், இதுவொரு ‘ட்ரெண்ட்செட்டர்’ ஆக மாறியது.
தெலுங்கில் இதே படத்தை ‘கர்ஜனா’ என்ற பெயரில் வெங்கடேஷ், அசின் ஜோடியை வைத்து ‘ரீமேக்’ செய்தார் கௌதம் மேனன். இந்தியிலும் கன்னடத்திலும் கூட, இது ரீமேக் செய்யப்பட்டது. விஜய் அமிர்தராஜ் தயாரிப்பில், ஆங்கிலத்தில் எடுக்கத் திட்டமிடப்பட்டு பின்னர் அம்முயற்சி கைவிடப்பட்டது. அது நிகழ்ந்திருந்தால், ஹாலிவுட்டுக்குப் போன தமிழ் படம் எனும் பெருமை ‘காக்க.. காக்க’வுக்குக் கிடைத்திருக்கும். இவை தவிர்த்து, அதிகாரப்பூர்வமற்ற முறையில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
கமர்ஷியல் வெற்றியோடு சேர்ந்து தமிழ்நாடு அரசு வழங்கு திரைப்பட விருதுகளையும் பிலிம்பேர் விருதுகளையும் இப்படம் பெற்றது. இதற்குப் பிறகு, ‘வாரணம் ஆயிரம்’ படத்தில் மீண்டும் கௌதம் மேனன் உடன் இணைந்தார் சூர்யா. அதுவும் பெரிய வெற்றியைச் சுவைத்தது. சில ஆண்டுகளுக்கு முன்னர், இருவரும் இணைவதாக இருந்த படம் பல காரணங்களால் நின்றுபோனது.
‘காக்க.. காக்க’ டைட்டில் பாதிப்பில், அந்த காலகட்டத்தில் ‘கனகவேல் காக்க..’, ‘தடையறத் தாக்க..’, ‘தீயவர் குலைகள் நடுங்க..’ என்று பல படங்களுக்குப் பெயர்கள் வைக்கப்பட்டன. அதோடு சில காட்சிகள், நாயகன் நாயகி உடையமைப்பு, தோற்றம், வசனம் என்று பல அம்சங்கள் திரையில் பிரதியெடுக்கப்பட்டுள்ளன.
ஒரு திரைப்படத்தில் பணியாற்றிய அதே இயக்குனர், நடிப்புக்கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மீண்டும் ஒன்றிணைந்து, அதே படத்தை எடுக்க முனைந்தால் அதே போன்றதொரு வெற்றி நிச்சயம் கிடைக்காது. கால மாற்றம் ஒருபோதும் பழைய நிலைமைக்கு அழைத்துச் செல்லாது. அது, இப்படத்திற்கும் பொருந்தும்.
ஆனாலும் சூரரைப் போற்று, பசங்க 2, மாற்றான், 24, ஏழாம் அறிவு என்று விதவிதமான திரையனுபவங்களை நமக்குத் தந்து வருகிறார் சூர்யா. அவை வணிகரீதியாகவும் வெற்றிகளாக அமைந்துள்ளன. அந்தச் சமநிலையைத் தக்க வைப்பது நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய அம்சம். அதனைச் சூர்யாவுக்குக் கற்றுத் தந்த படமாக இருக்கும் ‘காக்க.. காக்க’வைக் கொண்டாடுவது, ஒரு நடிகராகவும் நட்சத்திரமாகவும் சூர்யா கடந்து வந்த பாதை எத்தகையது என்பதை அவரது ரசிகர்களுக்கு நினைவூட்டும்!.
உதய் பாடகலிங்கம்
’தென்பாண்டி சீமையிலே’ மெட்டில் பாரதிராஜாவுக்கு கவி பாடிய வைரமுத்து
’இந்தியாவில் வாழ விரும்பினால், மோடி, யோகிக்கு வாக்களியுங்கள்’: ஆர்பிஎஃப் வீரரின் வீடியோ வைரல்!
கொடநாடு: ஸ்டாலின் வாக்குறுதி என்னாச்சு? ஓபிஎஸ்-டிடிவி இணைந்து ஆர்பாட்டம்!