சந்தோசமா இருக்க… ரஜினி சொன்ன குரங்கு கதை!

சினிமா

மனிதர்கள் சந்தோசமா வாழவேண்டுமென்றால், குரங்கைப் போல் இருக்கக் கூடாது என்று சென்னையில் நடைபெற்ற ஆன்மீக நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கூறிய கதை பலரையும் கவர்ந்துள்ளது.

இந்திய திரையுலகில் உச்சநட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிக்கும் ஒவ்வொரு படங்களைப் பார்க்க உலகளவில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. அதேபோன்று ஸ்டைலாக பேசும் அவரது மேடைப்பேச்சுக்கும் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் உண்டு. தனது படவிழாக்களில் அவர் பேசிய பல பேச்சுகள் சமூகவலைதளங்களில் வெளியாகி டிரெண்டிங்கில் கலக்கிவிடும். இந்நிலையில் சென்னையில் நேற்று மாலை யோகதா சத்சங்க சொசைட்டி ஆஃப் இந்தியா சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற ஆன்மிக நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று யோகதா சத்சங்க புத்தகத்தை வெளியிட்டார் ரஜினி.

தொடர்ந்து அவர் பேசுகையில், ”குரங்குகள் இளநீர் ரொம்ப சாப்பிடும். அப்படி ஒரு கடையில் வெட்டி வைத்திருந்த ஒரு இளநீரில் கையை விட்டு உள்ளே இருக்கும் தேங்காயை எடுக்க முயற்சி செய்தது. ஆனால் உள்ளே விட்ட கையை வெளியே எடுக்க பார்க்கிறது. எவ்வளவோ முயன்றும் கை வெளியே வரவில்லை. மாறாக உள்ளே இருக்கும் தேங்காயை விடாமல் கையை எடுக்க முயன்றதால் ரத்தம் வடிந்தது. கடைசியில் தேங்காயை விட்டுவிட கை எளிதாக வெளியே வந்துவிட்டது. அந்த குரங்கு மாதிரி தான் மனிதர்களும். நம்மிடம் உள்ள ஆசையை விட்டுவிட்டால் மகிழ்ச்சியாக வாழலாம்.

அறிவு என்றால் புத்தி, சிந்தனை, நீ யார், எங்கிருந்து வந்தவன், சாதி எல்லாம் சேர்ந்தது தான். பணம், புகழ், பெயர், உச்சி, பெரிய பெரிய அரசியல்வாதிகளை பார்த்தவன் நான். ஆனால் சந்தோஷம், நிம்மதி 10% கூட பார்த்தது இல்லை. எப்போதும் நேர்மறையான எண்ணத்துடன் இருக்க வேண்டும். இந்த உலகத்தை விட்டு செல்லும் போது சொத்தை சேர்த்து வைத்து செல்வதை விட நோயாளியாக இல்லாமல் செல்வது முக்கியம். நோயாளியாக இருந்தால் அவருக்கும், பிறருக்கும் கஷ்டங்கள் ஏற்படலாம். இதனால் உடல் ஆரோக்கியம் ஒருவருக்கு ரொம்ப முக்கியம். சந்தோஷமாக மருத்துவமனை செல்லாமலேயே நடமாடி கொண்டிருக்கும் போது போய் சேர்ந்து விட வேண்டும்.” என்று கூறினார்.

கிறிஸ்டோபர் ஜெமா

+1
0
+1
1
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *