சுகேஷ் சந்திரசேகர் பணமோசடி வழக்கில் ஜாக்குலின் பெர்னாண்டஸை குற்றவாளியாக குற்றப்பத்திரிக்கையில் அமலாக்கத் துறை சேர்த்துள்ளது.
முன்னாள் ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் ப்ரோமோட்டர் ஷிவிந்தர் மோகன் சிங்கின் மனைவி அதிதி சிங்-ஐ ஏமாற்றி ரூ. 215 கோடி பணமோசடி செய்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்.
இவர் அதிதி சிங் மற்றும் அவரது சகோதரியிடம் மத்திய உள்துறை மற்றும் சட்ட செயலாளர் போல் ஆள்மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபட்டார்.
இவரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.
இவர், பாலிவுட் நடிகையான ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு கோடிக்கணக்கில் பரிசு பொருட்கள் வழங்கியது தெரியவந்தது.
அதுமட்டுமல்லாமல், ஜாக்குலின் குடும்பத்தாருக்கு 1,72,913 அமெரிக்க டாலரை வழங்கியுள்ளார்.
இதனை தொடர்ந்து ஜாக்குலின் வெப் சீரிஸ் திட்டத்துக்காக திரைக்கதை எழுத்தாளர் ஒருவருக்கு முன்பணமாக ரூ. 15 லட்சம் பணம் சுகேஷ் சந்திரசேகர் வழங்கியதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் ஜாக்குலினை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது அமலாக்கத் துறை. அதன்படி ஆஜரான அவரிடம் விசாரணை மேற்கொண்டது.
தற்போது ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளியாக கருதப்பட்டு, இவரது பெயரை அமலாக்க துறை குற்றப்பத்திரிக்கையில் சேர்க்க உள்ளது. ரூ.215 கோடி மிரட்டி பணம் பறித்த வழக்கில் ஜாக்குலின் பெர்னாண்டஸை கூட்டாளி என்று அமலாக்கத் துறை கூறியுள்ளது.
இதனை தொடர்ந்து டெல்லியில் உள்ள சிறப்பு பணமோசடி தடுப்புச் சட்ட நீதிமன்றத்தில் புதிய குற்றப்பத்திரிக்கையை அமலாக்கத் துறை தாக்கல் செய்யவுள்ளது.
மோனிஷா
திருமண மோசடியில் ஈடுபட்ட துணை நடிகை மாயம்!