சோசியல் மீடியா மேஜிக் : கும்பமேளா கண்ணழகி: பாசிமணி டு பாலிவுட்!

Published On:

| By Kumaresan M

சோசியல் மீடியாவுக்கு உள்ள சக்தி பலரும் அறிந்ததே. சாதனையாளரை சாதாரணமான ஆளாக மாற்றி விடும். சாதாரணமானவரை சாதனையாளராக்கி விடும். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர்தான் நர்ஸ் ஜூலி. மெரினா பீச்சில் நடந்த போராட்டத்தின் போது, ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். அப்போது, ஜூலி போட்ட கோஷமும் அவரின் அழகும் நெட்டிசன்களை கவர்ந்தது. இதையடுத்து, ஜூலி தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் தீயாக பரவியது . வீரத்தமிழச்சி என்ற பட்டத்தையே அப்போது தமிழக இளைஞர்கள் ஜூலிக்கு கொடுத்து அழகு பார்த்தனர். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டதன் விளைவாக ஜூலியின் வாழ்க்கையே மாறிப்போனது. நர்சாக இருந்தவர் , இப்போது நடிகையாக உயர்ந்துள்ளார். சோசியல் மீடியாவின் சக்தி இதுதான். எதுவுமே இங்கு சட்டென்று பற்றிக் கொள்ளும் என்று சொன்னால் அது மிகையல்ல.

அதே போல, இப்போது உத்தரபிரதேசத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அது என்னவென்று பார்க்கலாம். உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கியது. இந்த சமயத்தில் மூன்று முக்கிய நதிகள் இணையும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினால் புண்ணியம் கிடைக்கும் என நம்பிக்கை. கும்பமேளாவில் எப்போதுமே கோடிக்கணக்கான மக்கள் திரள்வார்கள். இந்த முறை உலககெங்கிலும் இருந்து 45 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் , கும்பமேளாவில் பங்கேற்ற 16 வயது இளம் பெண் ஒருவரின் வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது. மோனலிசா என்ற பெயர் கொண்ட அந்த பெண் சாதாரணமாக பாசிமணி விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்தவர். மயக்கும் கண்களுடன் காணப்பட்ட அந்த இளம் பெண்ணை ஒருவர் வீடியோ எடுத்து சமூகவலைத் தளத்தில் வெளியிட, இப்போது சோசியல் மீடியா பவரால் பாலிவுட் படத்தில் அவர் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த மோனலிசா என்பவர் கும்பமேளாவில் ருத்ராட்சம், பாசிமணி விற்பதற்காக தனது தாய், தந்தை மற்றும் குடும்பத்தினரோடு வந்து கடை போட்டுள்ளார். இந்தியர்களுக்கே உரிய நிறத்தில் அழகான புருவங்கள் மிகவும் களையான புன்னகை முகத்தோடு மோனலிசா காணப்பட்டார்.

இன்றைய உலகில் மேக்கப் போடாத இளம் பெண்களை காண்பது அரிது. மோனலிசாவின் மேக்கப் போடாத எளிமையான முகம் அனைவரையும் கவர, யூடியூபர்கள் பலரும் அவரை வீடியோ எடுக்க குவிந்தனர். மோனலிசாவின் வீடியோ இணையத்தில் பரவ, பரவ பலரும் அவரின் அழகையும் மயக்கும் கண்களையும் கண்டு வியந்து போனார்கள். தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் அவரை காண அங்கு வந்துள்ளனர். வட நாட்டு மீடியாக்களும் அவரிடத்தில் பேட்டி எடுக்க மொய்க்கத் தொடங்கின.

ஒரு சிலர் மோனலிசாவிடம் ருத்ராட்சம் வாங்குவது போல அவருடன் பேசி பழக முயன்றுள்ளனர். தனக்கு வியாபாரம் நடந்தால் போதும் என மோனலிசாவும் பேச்சுகொடுத்துள்ளார். இதனால், கூட்டமும் அலை மோதியது. இது அந்த பகுதியில் தேவையில்லாத பிரச்னைகள் ஏற்படவும் காரணமாக அமைந்தது.

ஒரு கட்டத்தில் 9 பேர் கொண்ட கும்பல் மோனலிசா தங்கியிருந்த டெண்டுக்கு வந்து புகைப்படம் எடுக்க கேட்டுள்ளனர். அவரின் தந்தையும் போட்டோ எடுக்க அனுமதித்துள்ளார். அப்போது, கோபமடைந்த மோனலிசாவின் சகோதரர் அந்த கும்பலில் இருந்தவர்கள் வைத்திருந்த செல்போனை பறித்து புகைப்படங்களை அழிக்க முயற்சித்துள்ளார். இந்த சமயத்தில் ஏற்பட்ட தகராறில் மோனலிசாவின் சகோதரரை அந்த கும்பல் தாக்கியுள்ளது. இதனால், மோனலிசா கடும் வேதனை அடைந்துள்ளார்.

இதுகுறித்து மோனலிசா கூறுகையில், ‘9 பேர் சேர்ந்து எனது சகோதரரை அடித்தனர். எனக்கு இங்கு இருக்கவே பயமாக இருக்கிறது. டெண்டில் மின்சாரமும் இல்லை. எப்போது, வேண்டுமானாலும் எதுவும் நடக்கலாம் என்கிற நிலையே காணப்படுகிறது ‘ என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் ,தனது மகள் தேவையில்லாமல் மற்றவர்கள் கவனத்தை ஈர்ப்பதால், பாசி மணி விற்பனையும் பாதிக்கப்பட மோனலிசாவின் தந்தை கடுப்பானார். இதையடுத்து, மோனலிசாவின் தந்தை மகளின் பாதுகாப்பு கருதி சொந்த ஊரான இந்தூருக்கே திருப்பி அனுப்பி விட்டதாக சொல்கிறார்கள்.

மோனாலிசாவின் தாத்தா கூறுகையில், ‘மோனலிசாவுக்கு திடீரென கிடைத்த இந்த பாப்புலரிட்டி அவரின் வேலையை பாதித்தது. முதலில் சாதாரணமாக இருந்த அவர், இப்போது, மக்கள் அவரை காண அலைமோதுவதால் சோர்வடைந்துள்ளார். தினமும் எத்தனை பேருடன்தான் படம் எடுக்க முடியும். பேட்டிகள் கொடுக்க முடியும். அவளால் இயல்பாக இருக்க முடியவில்லை’ என்கிறார்.

இதற்கிடையே மீடியா பிரபலத்தால் சில நாட்களிலேயே மோனலிசாவை இன்ஸ்டாவில் பின்தொடருபவர்களின் எண்ணிக்கையும் லட்சக்கணக்கில் உயர்ந்துள்ளது. மோனலிசாவின் புகைப்படத்தை பதிவிடும் பலரும் பிரபல இயக்குநர்களை டேக் செய்து சினிமாவில் வாய்ப்பு கொடுக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அதே போல, மோனலிசாவை தேடி பாலிவுட் பட வாய்ப்பு வந்துள்ளது. ராம் கி ஜென்மபூமி, தி டயரி ஆஃப் வெஸ்ட் பெங்கால் ஆகிய படங்களை இயக்கிய சனோஜ் மிஸ்ரா , மோனலிசா போன்ஸ்லேவுக்கு நடிக்க வாய்ப்பு கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து சனோஜ் மிஸ்ரா கூறுகையில், டயரி ஆப் மணிப்பூர் என்ற பெயரி படம் எடுக்கிறேன். இந்த படத்தில் மோனலிசாவை நடிக்க வைக்க அவரின் குடும்பத்தினருடன் பேசுவேன். அவரின் பிரவுன் கலரும் கண்களுடம் படத்துக்கும் பெரும் பலமாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், சனோஜ் மிஸ்ரா இயக்கிய படங்கள் அப்படி ஒன்றும் பாலிவுட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கவில்லை என்பதால், சனோஜ் மிஸ்ரா இல்லாமல் வேறு யாராவது அந்த பிரவுன் பியூட்டியை பாலிவுட்டில் அறிமுகம் செய்து வைத்தால் நன்றாக இருக்கும் என்கிறார்கள் மோனலிசாவின் ரசிகர்கள்.

புச்சிபாபு இயக்கத்தில் ஆர்சி 16 என்ற தெலுங்கு படத்தில் ராம் சரண் நடித்து வருகிறார். ஜான்வி கபூர் ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்தில் மற்றொரு ஹீரோயினாக நடிக்க மோனலிசாவுக்கு வாய்ப்பு வந்துள்ளதாகவும் வதந்தி உலவிக் கொண்டிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel