ஒரு திரைப்படத்தில் நாயகனாக நடித்து அது வெற்றியடைந்துவிட்டால், அந்த நடிகர் எதிர்கொள்ளும் புகழ் என்பது வார்த்தைகளில் அளவிட முடியாதது. தொடர் வெற்றிகளும் வித்தியாசமான பாத்திர வார்ப்புகளும், சில ஆண்டுகளிலேயே அவரை ’நட்சத்திர நடிகராக’ மாற்றும்.
அந்த அந்தஸ்து ஒருகட்டத்தில் முள் கிரீடமாக மாறும். ரசிகர்கள் எதிர்பார்ப்பதை எதிர்பாராத விதமாகக் கொடுப்பதற்காகக் கடுமையான பிரயத்தனங்களை மேற்கொள்ள வைக்கும். அந்த கட்டாயத்தைச் சுமப்பது மிகக்கடினம்.
ஆனால், இதை தொடர்ந்து வெற்றிகரமாகச் செய்து வருபவர்களே தொடர்ச்சியாக அத்துறையில் கோலோச்சுவார்கள். அந்த வகையில், மலையாளத்தின் முன்னணி நடிகராக சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வலம் வருபவர் மோகன்லால்.
எண்பதுகள் தொட்டு இன்று வரை, அவருக்கான புகழ் என்பது பல்வேறு ஏற்ற இறக்கங்களைத் தாண்டி தொடர்ந்து சிகரம் ஏறிக் கொண்டிருக்கிறது.
ரசிகனாய்.. அழகனாய்..!
மோகன்லாலின் ஒவ்வொரு படத்தையும் புதிதாய் பார்க்கையில், ஒரு விஷயம் மறக்காமல் நினைவுக்கு வரும். அந்த படத்தில் ஏற்ற பாத்திரத்திற்கு ஏற்றவாறு, அவர் அழகாகத் தென்படுவது முதலாவது. இரண்டாவது, அந்த படத்தின் கதையை, அது நிகழும் பின்னணியை, உடன் இருக்கும் சக பாத்திரங்களை ஒரு ரசிகனைப் போல அணுகுவது.
குறிப்பாக, காதல் காட்சிகளில் எதிரே இருக்கும் நாயகி பேசுவதைக் கேட்கும்போதும், பதிலளிக்கும்போதும், அவர் முகத்தில் ஒரு ரசிகன் தென்படுவான். அந்த உடல்மொழியே, அவரது திரை இருப்பை ஆராதிக்க வைக்கும்.
கேமிரா ‘ஆன்’ ஆகிவிட்டால் திரைக்கதையில் வரும் ஒரு பாத்திரமாகத் தன்னை முழுமையாக மாற்றிக் கொள்ளும் கலைஞர்களில் ஒருவர் மோகன்லால். சீரியசான பாத்திரங்களில் அவர் நடித்தால் ரசிகர்கள் அந்தக் கதையோடு ஒன்றிவிடுவார்கள்.
‘பரதம்’ ‘வனப்பிரஸ்தம்’ என்று சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்ற படங்கள் மட்டுமல்லாமல் பல படங்களை அதற்கு உதாரணமாகச் சொல்ல முடியும். லேசான சினிமாத்தனத்துடன் சாதாரண மனிதர்களின் வாழ்வைப் பிரதிபலிக்கும் சித்திரங்களிலும் அவரால் வெற்றிகரமாகப் பரிமளிக்க முடியும்.
2016இல் வந்த ‘முந்திரிவல்லிகள் தளிர்க்கும்போல்’ போன்று பல படங்கள் அந்த வரிசையில் இடம்பெறும். நகைச்சுவை மற்றும் காதல் படங்களில் அவர் அடிக்கும் லூட்டி பற்றி தனியாகப் பேச வேண்டும்.
அதே நேரத்தில், ‘மோனே தினேஷா’ என்றவாறே அவர் தொடை தட்டி மீசை முறுக்கும் கமர்ஷியல் மசாலா படங்களின்போது அதே ரசிகர்கள் தியேட்டரை அலறவிடுவார்கள். அந்த அளவுக்கு, அப்படங்களில் ஒரு நட்சத்திரமாக மட்டுமே திரையில் மிளிர்வார் மோகன்லால். அவரது நடிப்பின் மாயாஜாலம் எப்படிப்பட்டது என்பதை மேற்சொன்ன படங்களை அடுத்தடுத்து கண்டு ரசித்தால் உணர முடியும்.
கமர்ஷியல் ‘வித்தகன்’!
‘இருவர்’, ‘பாப்கார்ன்’, ’உன்னைப்போல் ஒருவன்’, ‘ஜில்லா’, ‘காப்பான்’ என்று விரல் விட்டு எண்ணும் அளவுக்கே தமிழில் நடித்திருக்கிறார் மோகன்லால். ‘கோபுர வாசலிலே’ படத்தில் வரும் ‘கேளடி என் பாவையே’ பாடலில் ஒரு ஷாட்டில் தலைகாட்டியிருப்பார்.
சமீபத்தில் வந்த ’ஜெயிலர்’ படத்தின் மூலம் மீண்டும் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் மோகன்லால். அதைவிடப் பன்மடங்கு கொண்டாட்டமான திரையிருப்பைத் தெலுங்கு படமான ‘ஜனதா கேரேஜ்’ஜில் வெளிப்படுத்தியிருப்பார்.
அதில் அவர் நிகழ்த்திய மாயாஜாலம், முதுமைக்காலத்தில் முன்னணி நடிகர்கள் எப்படித் திரையில் வெளிப்பட வேண்டுமென்பதை உணர்த்தியிருக்கும்.
கடந்த 15 ஆண்டுகளில் வெளியான மோகன்லாலின் படங்களில் ‘மான்ஸ்டர்’, ‘லூசிஃபர்’, ’புலி முருகன்’, ‘ரன் பேபி ரன்’, ‘கிறிஸ்டியன் பிரதர்ஸ்’ போன்றவை அவர் ஒரு ‘கமர்ஷியல் வித்தகன்’ என்பதை உணர்த்தின.
தொண்ணூறுகளின் இறுதியில் மோகன்லால் நிறைய கமர்ஷியல் ப்ளாக்பஸ்டர்களை தந்தார். ‘ஆறாம் தம்புரான்’, ‘ஒலிம்பியன் அந்தோணி ஆடம்’, ‘நரசிம்மம்’, ‘ராவணபிரபு’ என்று பல படங்கள் அந்த வரிசையில் இடம்பெறும்.
ஒரு ரசிகனாக, எனக்கு அவர் நடித்த ‘மசாலா படங்களே’ மிகவும் பிடிக்கும். அந்த வகையில் ‘உஸ்தாத்’தும் ‘ஸ்படிகம்’மும் மிகப்பிடித்தமான படங்களாக இன்றளவும் உள்ளன.
‘நாட்டுராஜாவு’ படத்தின் இறுதியில், ‘இவர்க்கு ஆர்க்கும் ஒண்ணும் அறியல்லா, காரணம் இவரொக்க குட்டிகளானு’ என்று மோகன்லால் பேசும் வசனமொன்று வரும். அந்த ‘பஞ்ச் டயலாக்’ இன்றுவரை மனதில் நிலை கொண்டிருக்கிறது.
அதில், படம் பார்க்க வந்த ரசிகர்களைப் பார்த்து சொல்வது போன்றிருக்கும் மோகன்லால் வசனம் பேசும் தொனி. மிகச்சில கமர்ஷியல் படங்களில் மட்டுமே அவர் இது போலச் செய்திருக்கிறார்.
இதர படங்களில் எல்லாம், ‘கேமிரா தூத்துக்குடியிலோ துபாயிலோ இருக்குது போல’ எனும் ரீதியில் அந்த பக்கமே தன் பார்வையைத் திருப்பாமல் நடிப்பது மோகன்லால் பாணி. பல நட்சத்திர நடிகர்களால் பின்பற்ற முடியாத ஒரு சிறப்பம்சம் என்றுகூடச் சொல்லலாம்.
அந்த வகையில் தன்னை எந்தெந்த வகையில் ரசிக்க வேண்டுமென்று ரசிகர்கள் விரும்புகிறார்களோ, அதனை அப்படியே திரையில் பிரதிபலிப்பவர் மோகன்லால். அப்படிப்பட்ட ஒரு நட்சத்திர நடிகருக்கு 64 வயது நிறைவடைந்திருக்கிறது.
அவரது மகன் பிரணவ் தற்போது இளையோருக்குப் பிடித்தமான நாயகனாக மாறி வருகிறார். இன்றைய சூழலிலும் கூட, மோகன்லால் நாயகனாகத் தொடர்கிறார். அவரது சக போட்டியாளர் மம்முட்டியும் கூட அப்படித்தான்.
துல்கர் சல்மான் நடித்து வரும் படங்களுக்கு நடுவே, அவர் டூயட் பாடும் படங்களும் வெளியாகின்றன. அதற்கேற்ற வகையில் மம்முட்டியும் மோகன்லாலும் இன்றும் இளமையாக வலம் வருகின்றனர்.
வெறுமனே உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதால் மட்டும் அதனை நிகழ்த்திவிட முடியாது. மனதையும் இளமையாக வைத்துக்கொண்டால் மட்டுமே, அந்த துள்ளலை உள்ளும் புறமும் நிகழ்த்த முடியும். அதுவே அவரது அடையாளமாகவும் விளங்குகிறது.
அந்த வகையில், 65-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மோகன்லால் மேலும் பல ஆண்டுகள் தனது இளமைத் துள்ளல் மிக்க நடிப்பு மூலம் நம்மை மகிழ்விக்க வாழ்த்துகள்!
உதய் பாடகலிங்கம்