’த்ருஷ்யம்’ படத்திற்கான பிராயச்சித்தம்!
சந்தர்ப்ப சூழ்நிலையால் குற்றத்தில் ஈடுபட்ட தனது மனைவியையும் மகளையும் காப்பதற்காக, பல்வேறு யுக்திகளைச் செய்கிறார் அந்தக் குடும்பத்தின் தலைவர். அதன் வழியாக, ‘இவர்கள்தான் குற்றவாளிகள்’ என்று தெரிந்தும் கைது செய்ய இயலாமல் திணறுகிறது காவல் துறை. தமிழில் ‘பாபநாசம்’ என்ற பெயரில் வெளிவந்த ‘த்ருஷ்யம்’ படத்தின் கதை இது.
குற்றம் செய்த நாயகனைக் கொண்டாடிய நாம், அதே போன்றதொரு செயலை ஒரு வில்லன் மேற்கொண்டால் என்ன செய்வோம்? இக்கதையில் நாயகனுக்குப் பதிலாக வில்லன் இடம்பெற்றால் என்னவாகும்? அதே போன்றதொரு புத்திசாலித்தனத்தைக் குரூரமான செயல்களை நிறைவேற்ற அந்த நபர் பயன்படுத்தினால், அதனைக் கண்டறியவே முடியாதா? இந்தக் கேள்விகளோடு, நம்மை ‘நெரு’ படத்தைப் பார்க்கச் செய்திருக்கிறார் இயக்குனர் ஜீத்து ஜோசப். ஆமாம், ‘த்ருஷ்யம் கதையில் அறம் இருக்கிறதா’ என்று கேட்டவர்களுக்காக அவர் தந்திருக்கும் படமே ‘நெரு’.
இந்த படம் எப்படிப்பட்ட அனுபவத்தை நமக்குத் தருகிறது?
பாதிக்கப்பட்ட இளம்பெண்!
சாரா முகம்மது (அனஸ்வரா ராஜன்) எனும் இளம்பெண் மைக்கேல் (சங்கர் இந்துசூடன்) எனும் நபரால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகிறார். அவர் ஒரு பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி. சம்பவம் நடந்த நேரத்தில், தந்தை முகம்மதுவும் (ஜகதீஷ்) தாய் பர்வீனும் (ஸ்ரீதான்யா) ஒரு திருமண நிகழ்ச்சிக்குச் சென்றிருக்கின்றனர். பணிப்பெண்ணும் அந்த நேரத்தில் வீட்டில் இல்லை. அதனை நன்கு தெரிந்தே மைக்கேல் இந்த அவலத்தை நிகழ்த்தியிருக்கிறார்.
விஷயமறிந்து விசாரணை செய்ய வருகின்றனர் போலீசார். முதலில் எந்த துப்பும் கிடைக்கவில்லை என்றாலும், சாராவின் சிற்பத்திறன் குற்றவாளியை அடையாளம் காட்டுகிறது.
முகம்மது போலவே சாரா திறமையான மண் சிற்பங்கள் செய்பவர். வல்லுறவுக்கு ஆளானபோது கொன்றுவிடுவதாக மைக்கேல் மிரட்டியதால், குற்றவாளியை அடையாளம் காணும் நோக்கில் அவரது உருவத்தைத் தனது கைகளால் உணர்வதில் மட்டுமே சாரா கவனம் செலுத்தியிருக்கிறார். இது அத்தனையும் நீதிமன்ற விசாரணையில் வெளிப்படுகிறது.
ஆனால், சம்பவம் நடந்தபோது மைக்கேல் ஊரிலேயே இல்லை என்று வாதிடுகிறார் மூத்த வழக்கறிஞர் ராஜசேகர் (சித்திக்). அதற்கேற்ப சாட்சிகளையும் உருவாக்குகிறார். தமது தரப்பைப் பலவீனப்படுத்தும் வகையிலான சாட்சியங்களை அரசுத் தரப்பு வழக்கறிஞர் சமர்ப்பிக்காதபடி, அவரை விலைக்கு வாங்குகிறார். மைக்கேலின் தந்தை மும்பையில் மிகப்பெரிய தொழிலதிபர் என்பதால், சாரா தரப்பில் எவரும் ஆஜராக முடியாதபடி ‘லாபி’ செய்கிறார்.
இந்தச் சூழலில், சாராவுக்காக ஆஜராகிறார் வழக்கறிஞர் விஜயமோகன் (மோகன்லால்). ராஜசேகரின் ஜூனியராக இருந்த அவர், ஒருகட்டத்தில் நீதிமன்ற ஆவணங்களைத் திருடிச் சென்றதாகக் குற்றம்சாட்டப்பட்டு பார் கவுன்சில் நடவடிக்கைக்கு ஆளானவர். நீதிமன்ற விசாரணையில் பங்கேற்பதில் ஒவ்வாமை கொண்ட அவர், பெரிய இடைவெளிக்குப் பிறகு சாரா வழக்கை ஏற்றுக்கொள்கிறார்.
வெற்றி பெறுவதற்கான சாத்தியங்கள் மிகக்குறைவு என்ற நிலையில், அந்த வழக்கை விஜயமோகன் எவ்விதம் கையாண்டார்? அதில் அவருக்கு வெற்றி கிட்டியதா? சாராவுக்கு நீதி கிட்டியதா என்று சொல்கிறது ‘நெரு’வின் மீதி.
வில்லனுக்குத் தண்டனை கிடைக்கும் விதமாகவே முடிவு அமைந்திருக்கும் என்பது கடைக்கோடி ரசிகனுக்கும் தெரியும். ஆனால், அதற்கு இடைப்பட்ட காட்சிகளை நீதிமன்ற விசாரணை முறைகளோடும் பரபரப்பான திருப்பங்களுக்கேற்ற திரைக்கதை உத்திகளோடும் பொருந்திப் போகச் செய்த வகையில் நம்மை அசத்தியிருக்கிறது சாந்தி மாயாதேவி மற்றும் ஜீத்து ஜோசப்பின் எழுத்தாக்கம்.
அழுத்தமான நடிப்பு!
ஓரிரு காட்சிகளில் முக்கியக் கலைஞர்கள் வந்துபோவதும், படத்தில் வரும் அனைவருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவதும் மலையாளத் திரையுலகில் சகஜம் எனும் அளவுக்கு நிலைமை அங்கிருக்கிறது. ’நெரு’வும் அதிலொன்றாக உள்ளது.
அனஸ்வரா ராஜன், அவரது பெற்றோராக வரும் ஜகதீஷ் – ஸ்ரீதான்யா, மோகன்லாலை இக்கதைக்குள் இழுத்து வரும் அஹானா பாத்திரத்தை ஏற்ற சாந்தி மாயாதேவி, இன்ஸ்பெக்டராக வரும் கணேஷ்குமார், எதிர்தரப்பு வழக்கறிஞராக வரும் சித்திக், அவரது மகளாக நடித்த பிரியாமணி, மைக்கேலாக நடித்த சங்கர் இந்துசூடன், அவரது கார் டிரைவராக வரும் தினேஷ் பிரபாகர் என்று படத்தில் வரும் அனைவருமே அழுத்தமான நடிப்பைத் தந்துள்ளனர்.
மோகன்லால் எப்படி நடித்திருக்கிறார் என்று கேட்பவர்களுக்கு, ‘பத்தோடு மேலும் ஒன்று’ என்று சொல்லவியலாத அளவுக்குச் சிறப்பான பங்களிப்பைத் தந்திருக்கிறார் என்பதே நமது பதில். கமர்ஷியல் படமாக இருந்தாலும், கலைப்படமாக இருந்தாலும், திரைக்கதையில் தனது பாத்திரத்தின் தன்மை எப்படியெல்லாம் மாறும் என்பதைத் துல்லியமாக அறிந்து நடிப்பதில் வல்லவர் அவர் என்பதற்கு இப்படமும் ஒரு சான்று.
படத்தில் பெரும்பகுதி ஒரு நீதிமன்ற அறைக்குள் நடப்பதாகக் காட்டப்பட்டாலும் கூட, பார்வையாளர்கள் வறட்சியை உணராத அளவுக்கு கேமிரா கோணங்களிலும் நகர்விலும் தன்னுழைப்பைக் கொட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சதீஷ் குரூப்.
வி.எஸ்.விநாயக்கின் படத்தொகுப்பு, மிகச்சீரான முறையில் கதை திரையில் விரிய உதவியிருக்கிறது. அனஸ்வராவிடம் சித்திக் குறுக்கு விசாரணை செய்யும் காட்சி அதிலொன்று.
விஷ்ணு ஷ்யாமின் பின்னணி இசையானது திரைக்கதை எங்கும் தொய்வடைவதாக எண்ணவிடாமல் தடுத்துள்ளது.
இன்னும் ஒலிப்பதிவு, டிஐ, கலை வடிவமைப்பு என்று பல துறைகளிலும் மிகநேர்த்தியான பங்களிப்பைக் கொண்டுள்ளது இத்திரைப்படம்.
ஒரு நடிகையாக மட்டுமல்லாமல், தான் ஒரு வழக்கறிஞர் என்பதை வெளிக்காட்டும் வகையில் சிறப்பானதொரு ‘நீதிமன்ற விசாரணை’ திரைக்கதையில் இடம்பெறுமாறு செய்துள்ளார் சாந்தி மாயாதேவி. அவருடன் சேர்ந்து எழுத்தாக்கம் செய்துள்ள இயக்குனர் ஜீத்து ஜோசப், திரைக்கதையின் ட்ரீட்மெண்டை முடிவு செய்த வகையில் நம்மை ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார்.
ஆமாம், இதில் பார்வையாளர்கள் உணர்ச்சிமேலிடும்படியான எந்தவொரு உத்தியையும் அவர் திரைக்கதையில் பயன்படுத்தவில்லை. அதேநேரத்தில், அடிப்படையான மனித உணர்ச்சிகள் எங்கும் விலகியிருக்காதவாறு எழுத்தாக்கத்தைக் கையாண்டுள்ளார்.
மைக்கேல் எனும் பாத்திரம் உண்மையிலேயே குற்றம் செய்ததா இல்லையா என்பதை வழக்கறிஞர் ராஜசேகரனும் அவரது மகள் பூர்ணிமாவும் உரையாடுவதன் வழியே நமக்கு உணர்த்துவது அதற்கொரு உதாரணம். திரைக்கதையின் தொடக்கத்திலேயே ‘குற்றவாளி இவர்தான்’ என்று பார்வையாளர்களுக்குச் சொல்லிவிடுவதால், அந்த குற்றம் எப்படி மறைக்கப்பட்டது என்பதை அறிவதில் நமது கவனம் தானாகச் செல்கிறது.
‘த்ருஷ்யம்’ படத்திற்கு எதிர்த்திசையில் நமது உணர்வைக் கொண்டுசெல்லும்படியாக அக்காட்சிகளை ஜீத்து ஜோசப் அமைத்திருப்பது இன்னொரு சிறப்பு. அந்த வகையில், இப்படத்தினை த்ருஷ்யம் தந்ததற்கான பிராயச்சித்தம் என்றுகூடச் சொல்லலாம்.
மனிதம் பேசுகிறது!
கதையின் மையப்பாத்திரமான மாற்றுத்திறனாளி பெண் தன்னை பாதிப்புக்குள்ளாக்கிய நபருக்குத் தண்டனை வாங்கித் தர முனைகிறார். அவரது போராட்டத்தை நிறைவேற்றி வைக்கும் பொறுப்பு மட்டுமே நாயகனுக்கு. அதனை ஹீரோயிசமாக இல்லாமல் மனிதத்திற்குத் தரும் மரியாதையாக வெளிப்படுத்துகிறது ‘நெரு’.
வழக்கில் ஆஜராக மாட்டேன் என்று சொல்லும் நாயகன் பாத்திரம், பாதிக்கப்பட்ட பெண்ணை நேரில் பார்த்தபிறகும் கூட மனம் மாற மாட்டார். ஆனால், அப்பெண்ணை எவராலும் கடைத்தேற்ற முடியாது எனும் தொனியில் எதிர்தரப்பு வழக்கறிஞர் பேசுவதைத் தொலைக்காட்சியில் கண்டபிறகு தன்னால் முயன்றதைச் செய்து பார்ப்போமே என்று களத்தில் இறங்குவார். அந்த வழக்கறிஞரால் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டது கூட, நாயகனுக்குப் பெரிதாகத் தோன்றவில்லை என்பதும் இடையே உணர்த்தப்படும்.
படம் முழுக்க இது போன்ற தொனியே திரைக்கதையில் தென்படும். இதில் உச்சம் தொடும் விதமாக கிளைமேக்ஸ் காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.
தாய், தந்தையைத் தவிர வேறெவரையும் தொட்டுப் பார்த்தறியாத சாரா, தன்னைச் சிதைத்த குற்றவாளியைத் தொட்டுணர்ந்து சிலையாக வடித்து அவரது அடையாளத்தைக் காட்டிக் கொடுப்பார். அத்திறமையின் வழியாகத் தனக்கு நீதி பெற்றுத்தந்த நாயகனை, அக்காட்சியில் தொட்டுப் பார்த்து உணரத் துடிப்பார். அந்த இடத்தில், பெற்றோருக்கு அடுத்தபடியான நம்பிக்கைக்குரிய நபராக அப்பெண்ணின் மனதில் அவர் இடம்பிடித்திருப்பார். அதனை அக்கலைஞர்களின் பாவனைகள் வழியே வெளிப்படுத்த வைத்த விதமே ஜீத்து ஜோசப்பின் டைரக்ஷனை கொண்டாடச் செய்கிறது.
ஆதலால், நீதிமன்றக் காட்சிகள் தரும் அயர்வை மீறி எந்தவொரு கமர்ஷியல் பட விரும்பியையும் ‘நெரு’ ஈர்ப்பது நிச்சயம் என்று தாராளமாகச் சொல்லலாம்!
உதய் பாடகலிங்கம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தங்கம் தென்னரசு டிக் ஷனரி: அப்டேட் குமாரு
வெளியானது அயலான் ட்ரெய்லர்… 5 வருடங்கள் தாமதத்திற்கு காரணம் என்ன?