மலையாள நடிகர் ‘மோகன் லால்’ இயக்குநராக அறிமுகமாகும் ‘பரோஸ்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்ட பொருட் செலவில் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் இந்தத் திரைப்படத்தின் கதாநாயகனாக மோகன் லாலே நடித்துள்ளார்.
தற்போது இந்தத் திரைப்படம் வருகிற டிச.25ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காணொலி ஒன்றை நடிகர் மோகன் லால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் இந்த ரிலீஸ் தேதி குறித்து பேசும் இயக்குநர் ஃபாசில், ‘ இந்த ரிலீஸ் தேதியை மோகன் லால் தேர்வு செய்தது மிக ஆச்சர்யமாக இருந்தது.
ஏனென்றால், இதே தேதியில் 1980ஆம் ஆண்டில் வெளியான ‘மஞ்சில் விரிஞ்ச பூக்கள்’ படத்தின் மூலம் தான் நடிகர் மோகன் லால் திரைத்துறையில் அறிமுகமானார். அதே போல், எனது இயக்கத்தில் மோகன் லால் நடித்து மாபெரும் வெற்றித் திரைப்படமான ‘மணிச்சித்திரத்தாழ்’ திரைப்படம் வெளியானதும் இதே தேதியில் தான். இந்த ரிலீஸ் தேதி குறித்து மோகன் லால் அறிந்திருக்கவில்லை. மிக தற்செயலாகவே இந்தத் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டது ஆச்சர்யம் அளிக்கிறது’ எனப் பேசியுள்ளார்.
இந்த ’பரோஸ்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி சமீபத்தில் நடந்த ஹேமா கமிட்டி விவகாரம் முதல் பல்வேறு காரணங்களால் பல முறை தள்ளிப் போனது. இது எழுத்தாளர் ஜிஜோ புன்னோஸ் எழுதிய ’பரோஸ்: கார்டியன் ஆஃப் டி காமாஸ் டிரசர்’ என்கிற நாவலைத் தழுவி உருவான திரைப்படமாகும். கலவூர் ரவிகுமார் இந்தப் படத்திற்கு வசனம் எழுதியுள்ளார்.
சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஜானதன் மில்லர் ஒலிப்பதிவு செய்துள்ளார். அஜித் குமார் படத்தொகுப்பு வேலைகளை மேற்கொண்டுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் பியானோ வாசிப்பாளரான லிடியன் நாதஸ்வரம் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
– ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
சீனாவில் வெளியாகும் ‘மகாராஜா’!
தியேட்டரில் இருந்து ரசிகர்கள் தலைவலியுடன் செல்லக்கூடாது- கங்குவா டீமுக்கு ரசூல் பூக்குட்டி அட்வைஸ்!