அவதூறு வழக்கில் கைதான மோகன் ஜி ஜாமீனில் விடுவிப்பு!
பழனி பஞ்சாமிர்தம் தொடர்பாக அவதூறு பரப்பியதை அடுத்து இயக்குநர் மோகன் ஜியை போலீசார் இன்று (செப்டம்பர் 24) கைது செய்த நிலையில், திருச்சி நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
திருப்பதி லட்டுவில் மாட்டு கொழுப்பு பயன்படுத்தப்பட்ட விவகாரம் ஏற்கெனவே தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே பழனி முருகன் கோவிலில் வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தியதாக அங்குள்ள ஊழியர்கள் தன்னிடம் தெரிவித்தனர் என ஊடகங்களுக்கு இயக்குனர் மோகன் ஜி சமீபத்தில் பேட்டியளித்தார்.
இதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்ததுடன், பஞ்சாமிர்தத்த்தில் கருத்தடை மாத்திரை பயன்படுத்தியதாக கூறும் தகவல் வதந்தி என அறிக்கை வெளியிட்டது. இதனையடுத்து பலரும் மோகன் ஜியின் கருத்துக்கு அதிருப்தி தெரிவித்தனர்.
இந்த நிலையில் அவதூறு பரப்பியதாக இன்று காலை மோகன் ஜியை சென்னை காசிமேட்டில் உள்ள அவரது வீட்டில் வைத்து திருச்சி சமயபுரம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
அவர் மீது திருச்சி சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உள்ள இந்து அறநிலையத்துறையில் மேலாளராக பணிபுரிந்து வரும் கவியரசு அளித்த புகாரின் பேரில் அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட இயக்குனர் மோகன் ஜி இன்று மாலை திருச்சி மூன்றாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி பாலாஜி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, ”இயக்குனர் மோகன் ஜிக்கு நாளை 3 மணிக்கு ஆஜராக நோட்டீஸ் கொடுத்துவிட்டு, இன்று காலை கைது செய்தது ஏன்” என சமயபுரம் காவல் நிலைய ஆய்வாளரிடம் கேள்வி எழுப்பினார்.
மேலும், “வழக்குப் பதிவு செய்து கைது செய்வதற்கான முகாந்திரம் இருந்தாலும், அவரை கைது செய்த முறை ஏற்கத்தக்கதல்ல என கருத்து தெரிவித்த நீதிபதி, இயக்குனர் மோகன் ஜியை சொந்த ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
அதிகாரப் பகிர்வு… துணை முதல்வர்… அதே நிலைதான்: ஆ.ராசாவுக்கு ஆதவ் அர்ஜூனா பதில்!