தெலுங்கு நடிகர் மோகன் பாபுவுக்கு தெலங்கானா, ஆந்திராவில் ஏகப்பட்ட சொத்துக்கள் உள்ளன. கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களும் உள்ளன.
அவருக்கும் இளைய மகன் நடிகர் மஞ்சு மனோஜுக்கும் சொத்துப் பிரச்சினை இருந்து வருகிறது. மூத்த மகன் நடிகர் மஞ்சு விஷ்ணு அப்பாவுக்கு ஆதரவாக உள்ளார். ஹைதராபாத்தில் உள்ள ஜல்பள்ளி பகுதியில் உள்ள பங்களாவில் மோகன்பாபுவும், இரு மகன்களும் வசிக்கின்றனர்.
இந்த நிலையில், தந்தைக்கும், மகனுக்கு சொத்து தகராறு காரணமாக மோதல் ஏற்பட்டது. அப்போது, அங்கு செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களை மோகன் பாபு மைக்கை பறித்து தாக்கினார். இது தொடர்பாக அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தெலங்கானா,ஆந்திராவில் பத்திரிகையாளர் சங்கங்கள் மோகன் பாபுவை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
இதையடுத்து, தனக்கு உடல் நலம் சரியில்லை என்று கூறி, ஹைதரபாத்திலுள்ள கான்டிடென்டல் மருத்துவமனையில் மோகன்பாபு அட்மிட் ஆகியுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவருக்கு அதிகளவில் பிரஷ்ஷர் இருந்துள்ளது. கடுமையான உடல் வலியுடன் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடலில் சில இடங்களில் காயங்களும் இருந்துள்ளன. அவருக்கு சி.டி. ஸ்கேன் எடுத்து பார்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஹைதராபாத் போலீஸ் கமிஷனர், இன்று (டிசம்பர் 11) காலை மோகன் பாபுவின் மகன் இருவரையும் விசாரணைக்கு நேரடியாக ஆஜராகும்படி உத்தரவிட்டிருந்தார். இருவரிடத்திலும் கமிஷனரே நேரடியாக விசாரணை நடத்தினார்.
இதற்கிடையே, தனது மகனுக்கு ஆடியோ வெளியிட்டு நடிகர் மோகன்பாபு உருக்கமாக சில விஷயங்களை கூறியுள்ளார்.
அதில்,’நீ சிறுவனாக இருந்ததில் இருந்து படிப்பு வரை பார்த்து பார்த்து செய்தேன். ஒவ்வொரு வீட்டிலும் பிரச்னைகள் உண்டு. அவற்றை தீர்க்க முயல வேண்டுமே தவிர, பிரச்னைகள் ஆக்க கூடாது. பிரச்னைகள் ஏற்பட்டால், பெற்றோர் குழந்தைகளை வெறுத்து விடுவார்களா? மோகன்பாபு பல்கலைக்கழகம் ஆந்திரா, தெலங்கானாவில் மிகச்சிறந்த பல்கலைக்கழகம். என்னை பொறுத்த வரை அது கோயிலுக்கும் மேல். ஒரு பல்கலைக்கழகத்தை நடத்துவது என்பது மிக கடினமான விஷயம். அதில் பல பிரச்னைகள் உள்ளன. இதை நீ புரிந்து கொள்ள வேண்டும் ‘என்று தெரிவித்துள்ளார்.
திருப்பதியில் அமைந்துள்ள மோகன்பாபு பல்கலைக்கழகத்தின் வேந்தராக நடிகர் மோகன்பாபு உள்ளார். இந்த பல்கலைக்கழகம் 1992 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதை நிர்வகிப்பதில்தான் குடும்பத்துக்குள் பிரச்சினை எழுந்ததாக சொல்லப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-எம்.குமரேசன்
10.5%… ஸ்டாலின் பேச்சுக்கு எதிர்ப்பு – ராமதாஸ் போராட்ட அறிவிப்பு!