அரசியல் தலைவர்களில் தமிழ்நாட்டில் காமராஜருக்கு இணையாக முன் உதாரணமாக கூறப்படுபவர் மறைந்த காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான கக்கன்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகில் உள்ள தும்பை பட்டியில் எளிய குடும்பத்தில் பிறந்த கக்கன் மதுரை வைத்தியநாத அய்யரால் அரசியலுக்கு அழைத்து வரப்பட்டவர்.
மதுரை நாடாளுமன்ற தொகுதி, மேலூர், மற்றும் சமயநல்லூர் சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
தமிழ்நாட்டில் காமராஜர் தலைமையில் அமைக்கப்பட்ட அமைச்சரவையில் இடம்பெற்ற 9 அமைச்சர்களில் கக்கன் உள்துறை அமைச்சராக பணியாற்றியவர்.
அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. பிரபு மாணிக்கம் இயக்கும் இப்படத்தில் என் காதலி சீன் போடுறா, இரும்பு மனிதன் ஆகிய படங்களை தயாரித்த ஜோசப் பேபி கதாநாயகனாக நடித்து படத்தை தயாரித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் இவர் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனத்தை எழுதியதுடன் தயாரித்தும் இருக்கிறார்.
தேவா இசையமைத்துள்ள கக்கன் படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்வு நேற்று (ஜூலை 25) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்க வளாகத்தில் எளிமையாக நடந்தது.
விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ‘கக்கன்’ திரைப்பட ஒலிநாடா மற்றும் டிரைலரை வெளியிட்டார். விழாவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ‘கக்கன்’ திரைப்பட ஒலிநாடாவை, தியாகி கக்கனின் மகள் கே.கஸ்தூரிபாய், கக்கனின் பேத்தியும், சேலம் சரக காவல்துறை துணைத்தலைவருமான எஸ்.ராஜேஸ்வரி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
மேலும், கக்கன் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஜோசப் பேபி, இசையமைப்பாளர் தேவா, பாடல் ஆசிரியர் ஏகாதசி, ஒளிப்பதிவாளர் வெங்கி, இயக்குனர்கள் பிரபு மாணிக்கம், ராகோத் விஜய், படைப்பாக்க இயக்குனர் ஏ.எஸ்.சந்தோஷ் ராமா உள்ளிட்டோருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவு பரிசு வழங்கினார்.
விழா முடிவில் படக்குழுவினருடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். விழாவில் கக்கன் திரைப்பட டிரைலர் மற்றும் 2 பாடல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டன.
விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், மு.பெ.சாமிநாதன், எம்.எல்.ஏ.க்கள் துரை சந்திரசேகர், அசன் மவுலானா, தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மாநில துணைத்தலைவர்கள் கோபண்ணா, பொன்.கிருஷ்ணமூர்த்தி,
இமயாக கக்கன் (கக்கனின் தம்பி மகள்), மாநில பொதுச்செயலாளர்கள் தளபதி பாஸ்கர், ரங்கபாஷியம், பி.வி.தமிழ்செல்வன் (கக்கனின் தம்பி மகன்), மாநில செயலாளர் ஜி.தமிழ்செல்வன், எஸ்.சி. துறை தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் மற்றும் கக்கன் குடும்பத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இராமானுஜம்
கிச்சன் கீர்த்தனா: துள்ளு மாவு (ஆடி ஸ்பெஷல்)
டிஜிட்டல் திண்ணை: மோடியே நின்றாலும்… ஸ்டாலின் போடும் ராம்நாடு ஸ்கெட்ச்!