கலையுலகம் இன்று (ஜனவரி 6) கொண்டாடி வரும் ‘கலைஞர் 100’ விழாவில் அவரது மகன் என்ற முறையில் நன்றி கூறவே இங்கு வந்திருக்கிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
தமிழ்நாட்டில் மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் சார்பில் சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸில் ’கலைஞர் 100’ விழா இன்று நடைபெற்றது.
இதில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, தனுஷ், கார்த்தி, சிவகார்த்திகேயன், ஜெயம்ரவி, வடிவேலு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஆந்திரா அமைச்சர் ரோஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மேலும் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள் மிகச் சிறப்பாக நடத்தி வருகிறார்கள்.
அதன்படி கலையுலகம் இன்று கொண்டாடி வரும் கலைஞர் 100 விழாவில் நான் உரையாற்ற வரவில்லை. தமிழ்நாடு முதலமைச்சர், திமுக தலைவர் மற்றும் கலைஞரின் மகன் என்ற முறையில் உங்களுக்கு நன்றி கூறவே வந்திருக்கிறேன்.
கலைஞர் வசனத்தை பேசி காட்டியே சினிமாவில் வாய்ப்பு தேடியவர்கள் பலர். அப்போது வசனம் மு.கருணாநிதி என்றால் படம் ஓடும்.
பெற்றோர் வைத்த பெயரை கூட கூப்பிடாமல் ‘கலைஞர்’ என்று தொண்டர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர் கருணாநிதி. அவர் மறைந்த போது தமிழ்நாடே கலங்கி நின்றது.
திமுக அரசு திரைத்துறையினருக்கு பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது. பூந்தமல்லியில் ரூ.540 கோடி மதிப்பில் நவீன திரைப்பட நகரம் அமைக்கப்பட உள்ளது. ரூ.25 கோடி மதிப்பில் 4 படப்பிடிப்பு தளங்கள், புரொடக்சன், போஸ்ட் புரொடக்சன் உள்ளிட்ட அனைத்து அனைத்து பணிகளும் மேற்கொள்ளும் எம்ஜிஆர் ஃபிலிம் சிட்டி நவீனப்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் என்று இல்லாமல் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற முறையில் இந்த விழாவை நடத்திய அனைவருக்கும் நன்றி” என்று ஸ்டாலின் பேசினார்.
விழாவின் நிறைவாக கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு கலைமலர் என்ற புத்தகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
கலைஞர் 100: ரஜினி சொன்ன சுவாரசிய சம்பவம்… ரசித்து கேட்ட ஸ்டாலின்
ஸ்டாலினுக்கு கலைஞர் கற்றுக்கொடுத்த ’அந்த’ அரசியல் பண்பு: கமல் பாராட்டு!