ஜெயிலர்னு இதுக்குதான் பேர் வச்சிருக்கணும்!
சில ஆண்டுகளுக்கு முன் வெளியான திரைப்படப் பட்டியலை எடுத்துப் பார்த்தால், குறிப்பிட்ட பண்டிகை நாளில் சில திரைப்படங்கள் கொத்தாக வெளியானதைக் காணலாம். அவற்றில் ஓரிரண்டு மட்டும் ப்ளாக்பஸ்டர் ஆக, மற்றவை சுமாரான வெற்றிகளைப் பெறும் அல்லது தோல்விப்படங்களாக மாறியிருக்கும். குறிப்பிட்ட இடைவெளிக்குப் பிறகு அந்த சுமார் அல்லது தோல்விப் படங்களைப் பார்த்தால், அவற்றின் மேக்கிங் ‘சூப்பராக’ தெரியும். ‘அந்த காலத்துல இது ஏன் ஓடலை’ என்ற கேள்வி நமக்குள்ளே உடனடியாகத் தோன்றும். அந்த வரிசையில் சேர்ந்துவிடக் கூடாது என்று சில திரைப்படங்கள் ‘படாத பாடு’ படும். ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய், நிமிஷா சஜயன், எமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘மிஷன்: சேஃப்டர் 1’ பார்த்தபோது, அதுவே மனதில் தோன்றியது. காரணம், முழுமையாகத் தயாராகிச் சில காலம் காத்திருப்பு பட்டியலில் இருந்த படம் இது.
தாமதமாக வெளியானாலும், இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறும்விதமாக உள்ளதா?
வெளிநாட்டில் ஏற்படும் சிக்கல்!
மனைவியை இழந்து சனா (இயல்) எனும் பெண் குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார் குணசேகரன். கடுமையான அறுவைச்சிகிச்சையை மேற்கொண்டால் மட்டுமே சனாவின் உயிரைக் காப்பாற்ற முடியுமென்ற இக்கட்டான நிலைமை அவரைச் சூழ்ந்திருக்கிறது. அதனால், சேமிப்பில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு லண்டனில் உள்ள ஒரு மருத்துவமனையில் மகளைச் சேர்க்க முனைகிறார்.
உடனடியாக வங்கியில் இருந்து பணத்தை லண்டனுக்குப் பரிமாற்றம் செய்ய முடியாத சூழலில், நண்பர் உதவியோடு ‘ஹவாலா’ வழியே அதனைச் செய்யத் தயாராகிறார். சம்பந்தப்பட்ட நபர் தரும் பத்து ரூபாயை எடுத்துக்கொண்டு மகளுடன் லண்டன் புறப்படுகிறார்.
லண்டன் சென்றதும் செயிண்ட் பீட்டர் மருத்துவமனையில் சனாவைச் சேர்க்கிறார். கையில் பணம் இல்லாமல் சாலையோரமாகத் தங்குகிறார். அந்த மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றும் நான்சி (நிமிஷா சஜயன்) சனா மீது அக்கறை காட்டுகிறார்.
நான்சியின் தம்பி தாமஸூம் (விராஜ்) அந்த மருத்துவமனையில்தான் பணியாற்றுகிறார். பணம் எப்படியாவது சம்பாதிக்க வேண்டுமென்ற வெறி அவரது மனதில் இருக்கிறது. குணசேகரன் கையில் இருக்கும் பத்து ரூபாயை லவட்ட அவர் ஒரு சதித்திட்டம் தீட்டுகிறார். அதற்காகச் சில அடியாட்களை வரவழைக்கிறார்.
அந்த அடியாட்கள் பர்ஸை பிடுங்க முயற்சிக்கையில், குணசேகரன் அவர்களைத் தாக்குகிறார். அதனைத் தடுக்க வரும் அந்நாட்டு போலீசாரையும் தவறுதலாகத் தாக்கிவிடுகிறார். அதனால், அவர் மீது வழக்கு பதிவாகிறது. இரண்டு நாட்கள் அடுத்தடுத்து விடுமுறை என்பதால், ஹிண்ட்ஸ்பெர்க் சிறைச்சாலையில் குணசேகரன் அடைக்கப்படுகிறார்.
கொடூரமான குற்றவாளிகள் சிலர் உள்ள ஹிண்ட்ஸ்பெர்க் சிறைச்சாலையில் சாண்ட்ரா ஜேம்ஸ் (எமி ஜாக்சன்) எனும் பெண் ஜெயிலராக இருக்கிறார். தனது மகள் மருத்துவமனையில் உயிருக்குப் போராடுவதாகக் குணசேகரன் சொல்வதை அவர் கேட்கத் தயாராக இல்லை.
அடுத்த நாள் இரவு ஹிண்ட்ஸ்பெர்க் சிறைச்சாலையின் ஒட்டுமொத்தச் செயல்பாட்டையும் ஒரு பயங்கரவாத அமைப்பு தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறது. சிறையில் உள்ள கைதிகளின் கட்டுகளை அவிழ்த்துவிட்டு, அவர்களைத் தப்பிக்குமாறு கூறுகிறது.
மகளின் உயிரைக் காப்பாற்றத் தன்னிடம் உள்ள பத்து ரூபாயைக் கொண்டு பணத்தைப் புரட்டும் கட்டாயத்தில் இருந்தாலும், அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி குணசேகரன் தப்பிக்க முயல்வதில்லை. ‘வேறு வழியில்லை’ என்று அதனைச் செய்ய முயலும்போது, பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவரின் குரல் அவரைத் தடுத்து நிறுத்துகிறது.
அதன்பிறகு குணசேகரன் என்ன செய்தார்? அந்த சிறையில் இருந்து அவர் தப்பித்தாரா அல்லது அந்த பயங்கரவாத அமைப்பினரின் சதியை முறியடித்தாரா என்று சொல்கிறது ‘மிஷன்: சேஃப்டர் 1’ படத்தின் மீதி. திரையில் என்ன நிகழும் என்பதை உங்களால் எளிதாக யூகிக்க முடியும்.
சந்தர்ப்பச் சூழ்நிலையால் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் ஒரு நடுத்தர வயது நபர், அங்குள்ள சிறைச்சாலையில் அடைபடுவதுதான் மையக்கதை. அதனை வைத்துக்கொண்டு ‘ஆக்ஷன் கதகளி’ ஆடியிருக்கிறார் இயக்குனர் விஜய்.
ஸ்பாய்லர் என்றாலும், இதனைச் சொல்லியாக வேண்டியிருக்கிறது. இடைவேளைக்கு முன்பாக, ‘ஜெயிலர்’ என்று பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர் விளிக்கையில் அருண்விஜய் ஏற்ற குணசேகரன் பாத்திரம் பிரேமுக்குள் தலைநீட்டும். அதுதான், இப்படத்தின் முதல் திருப்பம்.
அது ஒரு ‘க்ளிஷே’ காட்சிதான். ஆனாலும், அது போன்ற காட்சிகள், ஷாட்களே இத்திரைக்கதையைப் பரபரவென்று நகர்த்த உதவியிருக்கிறது. கூடவே, ‘இதுக்குதான் ஜெயிலர்னு பேர் வச்சிருக்கணும்’ என்ற எண்ணமும் நம்முள் தோன்றுகிறது.
அசத்தல் அருண்விஜய்!
பிளாஷ்பேக் காட்சிகள் படத்தில் பதினைந்து நிமிடங்கள் வரை இடம்பெறுகிறது. அதில் கட்டுமஸ்தாக தோன்றியிருக்கிறார் அருண் விஜய். மீதமுள்ள காட்சிகளில் பெரிதாக உடல்நலத்தில் கவனம் செலுத்தாத தோற்றம் வேண்டும் என்பதற்கேற்ப, திரையில் வேறுபாட்டைக் காட்டியிருக்கிறார். அதே நேரத்தில், தான் ஏற்ற ஆக்ஷன் ஹீரோ பாத்திரத்திலும் பொருந்தியிருக்கிறார். அந்த அர்ப்பணிப்பும் ஈடுபாடும் நம்மை அசத்துகிறது.
நிமிஷா சஜயனுக்கு இதில் பெரிய வேடமில்லை. அவர் வந்து போகும் சில காட்சிகள் நேர்த்தியாக அமைந்துள்ளன.
எமி ஜாக்சனை பில்டப்புடன் காட்டி, இடைவேளைக்குப் பிறகு புஸ்ஸென்று ஆக்கிவிட்டனர். அவரது இருபக்கக் கன்னத்திலும் ஏற்பட்ட சரிவைக் காண்கையில், ‘பூக்கள் பூக்கும் தருணம்’ பாடலின் இடையே ‘கிறீச்’ என்ற ஒலி கேட்பது போலிருக்கிறது (இதனை ‘பாடி ஷேமிங்’கில் சேர்க்கப்படாது).
வில்லனாக வரும் பாரத் போபண்ணா அழகாகத் திரையில் தெரிகிறார். நன்றாக நடித்திருக்கிறார். வேறென்ன வேண்டும்.
ஆனால், வில்லன் கூட்டத்தை விட நம்மைப் பதைபதைக்கச் செய்வது விராஜின் பாத்திரம்தான். ‘சென்னை 600028’ படத்தில் மிர்ச்சி சிவா கும்பலை கிளைமேக்ஸில் அலறவிடுவாரே, அவரேதான். இதேமாதிரியான பாத்திரங்களில் நடித்து ‘டெம்ப்ளேட்’ ஆகிவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள் விராஜ்.
பஞ்சாபி இளைஞராக வரும் அபி ஹாசனும், லண்டன் சிறைச்சாலை ஊழியராக வரும் ஜேசன் ஷாவும் இத்திரைக்கதையில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளனர்.
இவர்கள் தவிர்த்து போலீஸ் அதிகாரிகள், லண்டன் சிறைச்சாலையில் உள்ள பணியாளர்கள், கைதிகள் என்று சிலர் திரையில் முகம் காட்டியுள்ளனர்.
சந்தீப் கே.விஜய்யின் ஒளிப்பதிவு, கொஞ்சம் பட்ஜெட் குறைவான ஹாலிவுட் படத்தைப் பார்க்கும் உணர்வை உண்டாக்கியிருக்கிறது. இது ப்ளஸ்ஸா, மைனஸா என்பது அவரவர் ரசனையைப் பொறுத்தது.
ஆண்டனியின் படத்தொகுப்பு கனகச்சிதமாக அமைந்துள்ளது. இதற்கு முன்னர் நாம் பார்த்த காட்சிகளைக் கொண்டு திரைக்கதையை யூகிக்க முடிந்தாலும், அவரது படத்தொகுப்பு சீராகக் கதை திரையில் விரிவதில் அக்கறை காட்டியிருக்கிறது.
ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசையில் இரண்டு பாடல்கள் உண்டு. அவற்றுக்குத் திரையில் பெரிதாக இடமில்லை. அதேநேரத்தில், பின்னணி இசை மூலமாகப் படம் உருவாக்கும் பிரமாண்ட பிம்பத்திற்கு மனிதர் உயிர் கொடுத்திருக்கிறார்.
சிறைச்சாலை சம்பந்தப்பட்ட காட்சிகள் நம்மை இருக்கையோடு கட்டிப்போட, சரவணன் வசந்த் கலை வடிவமைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது.
மஹாதேவ் என்பவர் இப்படத்துக்குக் கதை, திரைக்கதை அமைத்துள்ளனர். இயக்குனர் விஜய் வசனம் எழுதியுள்ளார். இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் தொடர்பான கதை என்பதால், நாம் பார்த்த விஜயகாந்த், அர்ஜுன் படங்கள் பலவற்றை நினைவூட்டி விடுகிறது இப்படம்.
இப்படத்தின் கதையும் சரி, திரைக்கதையும் சரி, ஏற்கனவே நாம் பார்த்த பல வெளிநாட்டு, உள்நாட்டு திரைப்படங்களின் சாயலை வலுவாகக் கொண்டுள்ளது. சிறையில் இருந்து கைதிகள் தப்பிக்கும் அல்லது அங்கு பல்வேறு அல்லல்களைச் சந்திக்கும் கதைகளை ஒரு மிக்ஸியில் அடித்தால் கிடைக்கும் ‘கோங்குரா சட்னி’யாக ‘மிஷன்: சேஃப்டர் 1’ அமைந்துள்ளது. ஆதலால், ‘க்ளிஷே வேண்டாமே’ என்பவர்களுக்கு இப்படம் நிச்சயம் அலர்ஜி தரும்.
தரமான இயக்கம்!
வழக்கமான பாத்திரங்கள், கதை, காட்சிகள் என்றபோதும், அதற்கு உயிர் கொடுத்தால்தானே இரண்டரை மணி நேரம் தியேட்டரில் உட்கார்ந்திருக்க முடியும். அந்த திறமை தனக்கு நிறையவே உண்டு என்று நிரூபித்திருக்கிறார் இயக்குனர் விஜய். அதேநேரத்தில், அவரது தரமான டைரக்ஷன் திறனை ஏன் ரொம்பவே அரதப்பழசான கதைகளில், ஹாலிவுட் பட ஜெராக்ஸ்களில் வீணடிக்கிறார் என்ற எண்ணமும் நம்முள் எழுகிறது.
கிரீடம், பொய்சொல்லப் போறோம் போன்ற படங்கள் பெரிதாக வெற்றி பெறாத நிலையில், விஜய் தந்த படமே ‘மதராசப்பட்டிணம்’. அந்த படத்தின் கதையை ஒரு பஸ் டிக்கெட்டின் பின்னால் எழுதிவிடலாம். அதன் வெற்றியால், அது போன்ற மிக எளிமையான கதைகளையே தொடர்ந்து அவர் தேர்ந்தெடுத்து வருகிறார். உண்மையைச் சொன்னால், மிகப்பெரிய நாவலைக் கையில் எடுத்துக்கொண்டு பிரமாண்டமான வெப்சீரிஸ்கள், கேஜிஎஃப்பை தூக்கிச் சாப்பிடும் பான் இந்தியா படங்களை நெட்டித் தள்ளும் வல்லமை அவரிடம் இருப்பதாகவே கருதுகிறேன். அதற்கான வாய்ப்பைப் பெற்றுத் தரும் அளவுக்கு ‘மிஷன்: சேஃப்டர் 1’ படத்தில் தரமான சம்பவத்தை விஜய் செய்திருக்கிறார்.
விறுவிறுப்பான ஆக்ஷன் படம் பார்க்க வேண்டுமென்று விருப்பப்படுபவர்கள், க்ளிஷேக்கள் இருந்தாலும் பரவாயில்லை என்று தலையசைப்பவர்கள், அருண்விஜய் உள்ளிட்டோரின் அபாரமான நடிப்பை ரசிக்கத் தயாராக இருக்கிறேன் என்பவர்களுக்கானது இந்த ‘மிஷன்: சேஃப்டர் 1’.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உதய் பாடகலிங்கம்
கமலின் 237 வது படத்தை இயக்கும் பிரபல ஆக்ஷன் டைரக்டர்ஸ்!
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!